தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார் சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு கவிஞர் இரா இரவி

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார் !
சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு?
கவிஞர் இரா. இரவி
தமிழ்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க மறுப்பவர்களுக்கு
தமிழகத்தில் இடமில்லை வெளியேறி விடுங்கள்!
உலகமொழிகளின் தாய்மொழியின் வாழ்த்திற்கு
உமக்கு நிற்க மனமில்லை என்றால் சென்று விடு!
தியானம் செய்ததாக பொய்யுரைக்கும் நீயா சாமியார் ?
தேசியகீதத்திற்கு மட்டும் தியானம் கலைத்து விட்டாய்!
நமஸ்காரம் என்பதை விட்டொழியுங்கள் நாளும்
நல்ல தமிழில் வணக்கம் என்று கூறி மகிழுங்கள்!
விவாகம் என்ற சொல்லை விட்டுவிடுங்கள்
வளமான தமிழில் திருமணம் என்று சொல்லுங்கள்!
கிரகப்பிரவேசம் என்ற சொல்லே வேண்டாம் நமக்கு
கன்னித்தமிழில் புதுமனை புகுவிழா என்று சொல்லுங்கள்!
வடமொழி சொற்களும் வேண்டாம் எழுத்துக்களும் வேண்டாம்
வண்டமிழ் மொழிக்கு எழுத்துகளும் சொற்களும் ஏராளம்!
கிரந்த எழுத்துக்கள் தமிழ்மொழிக்கு வேண்டவே வேண்டாம்
காந்த எழுத்துக்கள் தமிழ்மொழியில் நிறைய உண்டு!
மணிப்பிரவாக நடையில் எதுவும் எழுதிட வேண்டாம்
மணியான தமிழில் எதையும் எழுதிட வேண்டும்!
உணவில் கலப்படம் குற்றம் தண்டனை உண்டு
உன்னதத் தமிழ்மொழியில் கலப்படம் குற்றம் உணர்ந்திடு!
தமிழ்ப்பாலில் பிறமொழி நஞ்சு கலப்பதை நிறுத்திடு
தமிழைத் தமிழாகவே என்றும் எழுதிடு பேசிடு!
பயிர் வளர்ந்திட களை எடுத்திட வேண்டும்
பைந்தமிழ் வளர்ந்திட பிறசொல் நீக்கிட வேண்டும்!
உலகின் முதன்மொழியை உருக்குலைய விடலாமா?
உயர்தனிச் செம்மொழியை போற்றிட வேண்டும்!
வேண்டாம் வேண்டாம் வடசொல் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வடஎழுத்து வேண்டாம்!