சீசன் கவிஞர் சீத்தலை சாத்தனார் 2
சீ. சா 2 வெறும்
புனைபெயர்தான்.
கற்பனையும் கூட...
கவிதைக்குள் போவோம்...
அகிலமெங்கும் அன்னார்
திருஷ்டி பாய்ச்சுவார்.
புவனத்தில் போர் வந்தாலோ
பூகம்பம் வந்தாலோ
சுழற்றிவிடுவார் பேனாவை.
கேட்டறியா நாடுகளின்
கடுந்துன்பமும் அறிவார்.
சிசுவுக்கும் பெண்டிற்கும்
ஏதேனும் ஆயிற்றால் போயிற்று
சீ. சா சீற்றம்
நாடு கொள்ளாது...
ஸ்பெல்லிங் தெரியாதபோதும்
விஞ்ஞானி இறந்தாலும்
அஞ்சலிக்க தவறார்.
சர்வதேசம் மனைவி
சந்திராவின் மைசூர் ரசம்.
அள்ளி அள்ளி குடிப்பார்.
கவிதைகள் ஒழுங்கமைந்த
இலக்கண புலிகுட்டிகள்.
உவமையும் உவமருபுகளும்
தாலாட்டும் வாசகனை.
சேர்வை டீக்கடையில்தான்
அனைத்தும் அரங்கேற்றம்.
வடை பார்த்தால்
வடகொரியாவை பிளப்பார்.
ஒவொரு ஐட்டத்திற்கும்
ஒவொரு நாடுண்டு.
போகிறீர்களா அவர் காண?
உங்களை அவருக்கு
மிகவும் பிடிக்கும்
போய் பாருங்கள்..
ஒன்று சொல்லுங்கள்
என் சார்பாக...
கவிதைக்கு
பரக்க பரக்க
விழிக்கும் பொழுதில்
அவர் நிழலில் மலரும்
ஒரு கவிதையாவது
படிக்க சொல்லுங்கள்.