தாலாட்டும் தாய்மை
கருப்பையுள் உயிர்மூடி வெளிவரும் நாளன்று
நெகிழிப்பை முகங்கட்டி மூச்சுவிட துடிப்பதாய்
சுவாசம் கொடுத்துயிர் ஈன்றெடுக்கத் துடித்தவள்
ஊனுயிரை நமனடி அடகாய் வைத்தவள்...
வெண்பஞ்சு மேகத்தை தேகத்தில் அணிந்து
கண்கொத்தும் பாம்புகளின் நஞ்சினில் நனைந்து
பெண்களின் வாய்மொழி அமிலத்தில் கரைந்தும்
மண்போல் அனைத்தையும் மகவுக்காய் தாங்கியவள்...
முள்தைத்துக் கால்வலிக்கும் ஆனாலும் அதைமறைத்துக்
கள்வடியும் பூக்களாய் மனமும் சிரித்தவள்...
நெருப்புக்குள் விறகாகி தாய்மையெனும் பாத்திரத்தில்
பருப்பாய் நெஞ்சைக் கடைந்தன்பையே சமைத்தவள்...
வெள்ளியும் தங்கமும் உடலுக்குச் சுமையென்றே
பள்ளிப் படிப்பிற்குப் பணமாக்கித் தந்தவளின்
உள்ளங்கை வெடிப்புகளில் உறங்கிடாது எழுதுகிறது
பிள்ளையின் விரலிடை அமர்ந்திடும் எழுதுகோல்...
அவளுடுத்தும் துணியின் ஓட்டைகளில் எட்டிப்பார்க்கும்
வறுமையோ?... வசதியாய் வாழ்கிறேனென்று வம்பிழுக்கும்
அவ்வோட்டைக்குப் பின்னிருக்கும் குழந்தையின் எதிர்காலம்
அவள் மானத்தையும் உயிரையும் காத்துநிற்கும்...

