உயிர்த்திசை

கருவிற் சுமந்து கனிவா யனுதினம் காத்திடுவாள்
உருகி யவளு முதிரம் புகட்டி உயிர்நனைவாள்
திருவாய்க் குருவாய்த் திகழ்ந்து தவற்றைத் திருத்திடுவாள்
பெருமைக் குரியவள் பெற்றவ ளன்றிப் பிரிதெவரே ??

அன்பைப் புகட்டி யறிவைப் பெருக்கி யகங்குளிர்வாள்
இன்னல் வரிலோ இதய முடைந்தே இறைதுதிப்பாள்
தன்னை வருத்தித் தனதுயிர்ப் பிள்ளைகள் தாங்கிடுவாள்
என்றும் நிழலாய் இனிதே தொடரும் இயல்பினளே !

நெஞ்சி லுரத்தொடு நேர்மையாய் வாழ்வை நெறிப்படுத்திப்
பிஞ்சு மழலைகள் பேணி வளர்ப்பாள் பிரியமுடன்
துஞ்ச மறந்து சுயத்தை அவளும் தொலைத்திடுவாள்
வஞ்ச மிலாளை மடிசுமந் தாளை வணங்குகவே !

இன்முகத் தோடவள் இல்லறம் பூக்க இனிதுவப்பாள்
பன்முக ஆற்றலால் பக்க பலமாய்ப் பரிவளிப்பாள்
தன்னல மில்லா தனித்துவ மிக்கவள் தாயவளே
அன்னையின் பாசம் அளவுகோ லில்லா அதிசயமே !

ஓய்வொழி வின்றி உடலினால் தேயினும் உன்னதமாய்த்
தூய்மையைக் காத்துச் சுகமருள் தெய்வ சொரூபமவள்
தாய்மடி யில்தலை சாய்த்திடத் துன்பம் சரியுமெனச்
சேய்மனம் ஆறுதல் தேட விழையும் தெளிவுடனே !

( கட்டளைக் கலித்துறை)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Mar-18, 2:15 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 221

மேலே