நடந்தாய் வாழி காவிரி

நடந்தாய் வாழி காவிரி

நடந்தாய் வாழி காவிரி
என்ற எம்மவர்களின்
விழிகளில் இருந்து
நதியாக
வழிகிறது
காவிரி.

கரைகள்
தோறும்
பூவனம்
விரித்து
செந்நெல்
பொட்டு சூடிய
மங்கை
இன்று
பூவிழந்த
பூம்புனலி.

அன்று
பொன் தாது சுமந்த
பொன்னித் தாய்
சுடும் கோடையிலும்
வெள்ள மழலையை
கைகோர்த்து நடந்தாள்.
இன்றோ
வெண் மணல்
சூடிய
விரிகுழலி.

அன்று பொன்
விளைந்த
பூமி.
இன்று
பூமியெங்கும்
புண்கள்.

அன்று
இவளில்
உதித்த
நதிக்கரைகள்
எங்கெங்கும்
மஞ்சள் குவியல்
பச்சைப்பயிர் புடவை
தென்னைக் கிள்ளை
கருங் கன்னல்.


இன்று
வெடித்த
வயல்வெளிகளில்
எலிகளுக்குக் கூட
எண்ணுமளவு
நெல்மணி
இல்லை.

பழந்தமிழர்கள்
தொழுவதற்குக் கூட
வானம் பார்க்காதவர்கள்.
இடையில் வந்த
சறுக்கரால்
மாறிய பொழுதும்
மழை வராதா என
வான் நோக்கியவர்கள்
அல்லர்
எம் பழந்தமிழர்.

இன்று
திசைதோறும்
தண்ணீர் வேண்டி
கண்ணீருடன்
கரம் குவித்து
மதியிழந்தோரால்
மிதிபடுகின்றனர்
நாளும்.

அன்று
யானைக் கட்டி
கதிர்களை
போர் அடித்தவர்கள்
இன்றும்
போர் புரிகிறார்கள்
கையளவு
தண்ணீருக்காக.

ஒரு நூற்றாண்டை
நெருங்குகிறது
நதிநீர் பங்கீட்டுக்கான
குரல்கள்.
இத்தனை
ஆண்டுகளில்
நதியோடியதைவிட
நீதிக் கூண்டுகளை
நோக்கி
இவர்கள்
ஓடியதே அதிகம்.

அரசுகளின்
'அரசியலால்'
விவசாயத் தோழர்களின்
கோவணமும்
மெல்லமெல்ல
கிழிக்கப்பட்டு
இன்று
உயிர் ஊசலாடுகிறது.

அரசியலரைப்
பொறுத்த வரையில்
ஈழம் என்றாலும்
காவிரி என்றாலும்
தேர்தல் நெருங்கும்போது
கூச்சல்கள் உரத்துக் கேட்கும்.

வாக்குப்பெட்டி
நிறைந்தவுடன்
வயிற்றை
நிறைத்துக் கொண்டு
குளங்கள் வற்றியதைப்
போன்று
இவர்களின்
குரல்களும்
வற்றி விடுகின்றன.

இந்திய
தேசத்தினரே
ஒவ்வொரு
சோற்றுப் பருக்கைகளிலும்
கலந்திருக்கிறது
இவர்களின்
உயிர்மூச்சு.

இவர்களின்
சுவாசம்
நின்றால்
நிற்கும்
சுவாசம்
எங்கெங்கும்.

எதை எதிர்பார்த்துப்
பொழிகிறது
மழை.
வானத்தின்
கொடையைப்
பகிர்ந்து அருந்துவதே
மானுடம்.

வாழும் காலத்தில்
வாழ்வோம்.
வாழ வைப்போரை
வாழ வைப்போம்.

இல்லாவிட்டால்
தேசம்
நதிநீருக்காக
உடைப்பட்டு
சேதமடையும்.

- சாமி எழிலன்

20 03 2018

எழுதியவர் : சாமி எழிலன் (20-Mar-18, 7:25 pm)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 89

மேலே