நான் நீர் பேசுகிறேன்

நானில்லா இடமில்லை அன்று
நான் காணாமல் போனேன் நேற்று- எனைத்
தேடித் தேடி ஓடி
ஒரு வழியாய் உமக்கு கிடைக்கிறேன் இன்று.....

வீடுகள் வேண்டுமா?
தொழிற்சாலைகள் வேண்டுமா?
தெய்வ வழிபாட்டுக் கூடம் வேண்டுமா?
தெருவுக்கொரு பள்ளிக் கூடம் கூட வேண்டுமா?

என்னையழிப்பதறிந்தும்
எல்லாமே வேண்டுமென்றீர்.

நானும் தருகிறேன்....

மழைக் காலங்களில் மன உளைச்சலையும்,
வேனிற் காலங்களில் வேதனையும்.

வேண்டாமென்று எதையும் செல்லா நீர் இதையும் வேண்டாவென
வேண்ட
வேண்டா.....

சுயநல பூதங்களைச் சூழ்ந்த,
ஐம்பூதங்களில் ஒருத்தி நான்:(நீர்)
உம்மிலும் சரி, உலகிலும் சரி
என் ஆட்சி தான் பெரிது,
உம் சுயநல சூழ்ச்சி
என் ஆட்சிப் பகுதிகளை அபகரிக்க,
நான் அதைப் பறிக்க,
பாழாய்ப்போன பாதைகளை
நானும் பாழாக்கினேன்.
வீணாய் போன வீதிகளில் வினையாய் வித்தை காட்டினேன். இருந்தும்,

எனக்காய் அனுசரிக்கும் தினத்தன்றேனும்(உலக நீர் நாள் இன்று-(22/03))
அணுவளவேனும் என் பாதுகாப்பை பாருங்கள்,
எனைப் பற்றி சிந்தியுங்கள்,

உம் சந்ததிக்கெல்லாம்நான் சாரமளிப்பேன்,
மழைச் சாரலுமளிப்பேன்,
வீதிகளில் பழையபடி தேரலாய் ஊர்ந்து வரமளிப்பேன்.

இன்றேல்
இன்று போல்
என்றுமே
இன்றுளதும்
இல்லாது போகும்......

இது
மிரட்டல் அல்ல
என் கதறல்
இப்படிக்கு
நீர்(நீரே)

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (22-Mar-18, 7:42 am)
Tanglish : ulaga neer naal
பார்வை : 141

மேலே