சிறையை உடைத்து சிறகை விரித்தேன்

சிறகை இழந்த
சிந்தனை பறவை
சிறையில் சிக்கி தவித்திருந்தேன்..!

கரைகள் நிறைந்த
கயவர் மத்தியில்
கைதி போலவே வாழ்ந்திருந்தேன்..!

ஆயிரம் கவலை அனுதினமும்
அனலை போல எனை சுற்றி..!
வாயே திறந்து புலம்ப கூட
வாய்ப்பில்லாத வாழ்வு எனக்கு..!

சொந்தமென்று பலர் இருந்தும்
சோகம் மட்டுமே என் சொந்தம்..!
வசதி வளங்கள் கூட இருந்தும்
வறுமையாகவே என் நாட்கள்..!

கருணை இல்லாத ஒருவனே
கடவுள் எனக்கு துணையாக்கினான்..!
நீரில் மூழ்கிய தாமரையை
தீயில் போட்ட கொடுமைதான்..!

அன்பை அறியா மிருகத்தின்
அதிகாரங்கள் என் மீது..!
அடைமழையில் காகித கப்பல்
அழகு பயணம் சாத்தியமா..!

கண்ணீர் அருவி தினம் வரவே
என்னில் ஒரு எண்ணம் வந்தது..!
மண்ணை பிளக்கும் விதைகள்தானே
மரமாய் உயர்ந்து மண்ணை ஆளும்..!

அடிமை வாழ்வை அகற்றி விட
அலையை போல எழுந்து நின்றேன்..!
பொறுமையின் சிகரம் என்ற பொய்யை
பொசுக்கி விட துணிவு கொண்டேன்..!

கூட்டுப்புழுவின் வாழ்க்கை போல
வீட்டுக்குள்ளே சிறை எதற்கு..!
உடைத்துவிட்டு வெளியே வந்தேன்
உலகம் இன்று காலடியில்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (22-Mar-18, 5:37 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 269

மேலே