பெட்டிக் கடை

மாறனின் அலைபேசி ஒலித்தது...எடுத்துப்பார்த்தான்..மனைவி சுதா...
"ஹலோ...." என்றான்.
"என்னங்க..எங்க இருக்கீங்க?" என்றாள்.
"இன்னும் ஆபிஸ்லதான் இருக்கேன்..."
"சரிங்க..வரும்போது ஒரு கிலோ உளுந்தும், அரை லிட்டர் நல்ல எண்ணெய்யும் அப்படியே குழந்தைகளுக்கு ஸ்நாக்சும் வாங்கிட்டு வாங்க.." என்றாள்.
"ஓ.கே..ஓ.கே.." என்று சொல்லி போனை துண்டித்தான்.
மாறன் சீமாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன். இன்னும் அவன் கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவன் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீஞ்சூர் டவுன். அங்கு சென்றுதான் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் படிக்க வேண்டும். அப்படியே நடந்தும் ஓடியும் சென்று பள்ளிப் படிப்பை முடித்தான் மாறன்.
பின்னர் அருகில் உள்ள அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து இன்று நல்ல வேலையில் உள்ளான்.
என்னதான் எம்என்சி - யில் நல்ல வேலையில் இருந்தாலும் அவனது கிராமமே அவனுக்கு பிடித்தமான இடம். அவன் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்று வர சுமார் நான்கு மணி நேரம் ஆகும். மனைவியும், நண்பர்களும் சென்னைக்கு குடிபெயரலாம் என வற்புறுத்தியும் போகாதவன் அவன்.
மணி மாலை ஆறை எட்டியது. தனது சிஸ்டமை ஷட்டவுன் செய்து, ஐடி கார்ட்டுடை பஜ் பண்ணி விட்டு ஆபிசை விட்டு வெளியேறினான்.
பேருந்திற்காக காத்திருந்து கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்தில் ஏறி சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தான். மீண்டும் ஒரு நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ரயில் வந்தது. அந்த ரயிலும் அங்கே அங்கே நின்று நின்று ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணித்து மீஞ்சூரை அடைந்தது. பார்க்கிங்கில் விட்ட தனது பைக்கை எடுத்துக் கொண்டு தனது கிராமத்தை நோக்கி பயணித்தான்... வழி நெடுகிலும் வயல்கள்..நிலவின் ஒளியில் பயிர்கள் காற்றில் அசைந்தாடுவது தெளிவாய் தெரிந்தது. அவன் கிராமத்தின் சுத்தமான காற்று சடுதியில் அவன் களைப்பை போக்கியது. அவன் தன் தெரு முனையில் இருந்த கீத்தா அக்கா கடையில் வண்டியை நிறுத்தினான்.
"அக்கா ஒரு கிலோ உளுந்து,அரை கிலோ நல்ல எண்ண, பட்டாணி ரெண்டு பாக்கெட், கடலை மிட்டாய் ரெண்டு பாக்கெட் குடுங்க அக்கா" என்றான். பொருட்களை வாங்கிக் கொண்டு பாக்கெட்டில் பணத்தை தேடினான்...
"காச காலைல குடுப்பா.. வீட்டுக்கு சீக்கிறம் போ... பொண்டாட்டி புள்ளைங்க காத்துகிட்டு இருப்பாங்க.." என்றாள் கீத்தாக்கா.
"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்..நீ காச புடி" எனக் கொடுத்து விட்டு வீட்டை அடைந்தான் மாறன்.
குழந்தைகள் தூங்கி இருந்தார்கள்..வாங்கி வந்த பொருட்களை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு உடையை மாற்றினான்.
"இன்னைக்கும் நம்ப ஊர் பெட்டி கடைலதான் சாமான் வாங்குனீங்களா? டவுன்லேயே வாங்கிட்டு வர்றதுதானே..."எனக் கடிந்தாள் மனைவி சுதா.
"டவன்லேயும்,சிட்டிலேயும் நம்பள நம்பி யாரும் கடை வக்கல..ஆனா கீத்தா அக்கா நம்ப இந்த வீடுங்கள நம்பிதான் கடை வச்சியிருக்காங்க..நான் சின்ன பையனா இருக்கும்போது ஒரு பொருள் வாங்கனும்னா அஞ்சு கிலோ மீட்டர் ஓடனும்..இப்போ அந்த அக்கா கடை வச்சது எவ்வளவு வசதியா இருக்குதுன்னு இங்கேயே பொறந்து வளர்ந்த எனக்குதான் தெரியும்..நம்பளையும் நம்ம ஊரையும் நம்பி கடை வச்சவங்க நம்பளால வாழ்ந்ததா இருக்கனும்..அதனால நம்ப ஊர் பெட்டிக் கடைலதான் எப்பவும் சாமான் வாங்குவேன்.." என்று கணவன் கூறிய கூற்றில் உள்ள உண்மையை வியந்து பார்த்தாள் சுதா.

எழுதியவர் : தேவி நரேஷ்குமார் (24-Mar-18, 10:38 pm)
சேர்த்தது : தேவி நரேஷ்குமார்
பார்வை : 873

மேலே