J K உடன் ஒரு தேநீர் பொழுதில்
அறிந்ததினின்றும் விடுதலை
என்றவரை சந்தித்தேன்.
விடுதலையில் எதுதான்
அறியப்பட்ட பொருள்...
இழந்ததன் மர்மமே
இருப்பதின் ரகசியமா?
கேள்வியை அழிக்கும்
பதில்க்கேள்விகளா?
J.K. யோசிக்காமல்
எழுந்து சென்றார்.
முன்னிரவை முகர்ந்த
மெல்லிய மாலையில்
தடையற்ற கவிதைக்கு
காத்திருந்தேன்...
மீண்டும் வந்தார்.
அவர் கேட்டார்...
எவர்க்குமற்ற
எதற்குமற்ற-இன்னும்
வரத்தயங்கும் உன்
அந்தப்பாடல்
யாரின் விடுதலைக்கு?
விடையளிக்குமுன்
அவர் தேநீர்
பருகி எழுந்தார்.
இக்கணம் விடுதலை
அருந்திய தேநீர்க்கே...
சிரித்து சென்றார்.