முற்றுப்புள்ளி
ஆயுதமென்றும் அழிவினைத் தருமே
அதனால் அதற்கு முற்றுப்புள்ளி
பாயும் கணைகள் யாவும் குருடு
அதனால் அதற்கு முற்றுப்புள்ளி
சாயும் கோபுரம் வெடியது வெடிக்க
அதனால் வெடிக்கு முற்றுப்புள்ளி
நோயும் வந்திடும் உறவினைக் கொல்லும்
போருக்கு வேண்டும் முற்றுப்புள்ளி
நம்மினம் நாமே அழிப்பது முறையோ
வெறுப்புக்கு வேண்டும் முற்றுப்புள்ளி
தம்நலம் மட்டும் பேணுதல் அழகோ
சுயநலம் அதற்கும் முற்றுப்புள்ளி
எம்மதம் எனினும் சம்மதம் என்போம்
பிரிவினை அதற்கு முற்றுப்புள்ளி
உம்மால் முடியும் முயன்றிட வேண்டும்
தயக்கம் அதற்கு முற்றுப்புள்ளி
உழைத்தால் உயர்வு உண்மை அறிவோம்
சோம்பல் அதற்கு முற்றுப்புள்ளி
அழைப்போம் அன்புடன் எளியவர் அவரை
பசிக்கு வைப்போம் முற்றுப்புள்ளி
பிழையதை பொறுத்துத் திருந்திட செய்வோம்
சினத்திற்கு வேண்டும் முற்றுப்புள்ளி
விழைவது குறைத்து வளமுடன் வாழ்ந்திட
பேராசை அதற்கும் முற்றுப்புள்ளி
பெண்ணின் கண்ணீர் ஆண்மைக்கு இழுக்கு
வைப்போம் அதற்கு முற்றுப்புள்ளி
எண்ணம் கெடுக்கும் எழுத்தும் உண்டு
இடுவோம் அதற்கொரு முற்றுப்புள்ளி
உண்மை அதனை மறைக்கும் அச்சம்
துணிந்து வைப்போம் முற்றுப்புள்ளி
திண்ணம் துன்பம் தந்திடும் மதுவும்
பழக்கம் அதற்கும் முற்றுப்புள்ளி
பெற்றவர் தவிப்பு நமக்கது இழிவு
அலட்சியம் அதற்கு முற்றுப்புள்ளி
கற்றவர் தனித்துக் களிப்பது தவறு
கர்வம் அதற்கு முற்றுப்புள்ளி
கற்பினை அழித்திடும் காமுகன் அவனின்
குற்றம் அதற்கும் முற்றுப்புள்ளி
நற்றமிழ் இருக்க பிறமொழி எதற்கு
வேண்டாம் வைத்திடு முற்றுப்புள்ளி.
சுரேஷ் ஸ்ரீனிவாசன்