மலரும் நினைவுகள்

இரவில் தூங்கும்போது
படுக்கையில் சிறுநீர் கழித்து
பக்கத்தில் படுத்திருக்கும்
அம்மாவின் புடவையை நனைத்து நானில்லை தம்பி தான்
என பழியை அவன்மீது போட்டது

மாலையில் பள்ளியிலிருந்து
வீடு வந்ததும்
மாலை நேர உணவு கேட்டு
அம்மாவை நச்சரித்தது
மீதமுள்ள மதிய உணவை
நால்வருக்கும் பங்கிட்டு தரும்
அம்மாவிடம் இது ஒரு வாய்க்கே
பத்தாது என அடம்பிடித்து அழுதது

முட்டையை உடைத்து
ஆம்லெட் போட்டால்
ஒரு முட்டையில் இரு ஆம்லெட்
போடும் அம்மாவை புரிந்துக்கொண்ட தங்கை
எனக்கு ஆம்லெட் வேணாம்
அவிச்சி கொடு என்று கேட்ட
தங்கையின் புத்திசாலித்தனம்

அப்பா மாம்பழம்
பங்கிட்டு தரும்போது
எனக்கு கொட்டை வேணுமென
போட்டி போட்டுக்கொண்டு கேட்டது

பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
ஒரு மாதம் முன்னதாகவே
இன்னும் துணியெடுக்கலையே
என தினமும் அப்பாவை
நச்சரித்தது

பள்ளியில் டூர் போக பணம் அனுப்பசொல்லி
தாத்தாவுக்கு கடிதம் போட்டு
தினமும் போஸ்ட்மேனை
எதிர்பார்த்தது

பரீட்சை முடிவுகள்
அறிவிக்கும் அன்றைய தினம்
மாரியம்மன் கோவிலுக்கு
போய் விபூதி இட்டுக்கொண்டு
தேர்ச்சிப்பெற அம்மனிடம்
வேண்டிக்கொண்டது

கோடைகாலத்தில் வெளியில்
படுத்துறங்கும்போது
அம்மாவுக்கு தெரியாமல்
நண்பர்களுடன்
இரவுகாட்சி சினிமா பார்த்துவிட்டு
ஒன்றும் தெரியாததைப்போல்
மீண்டும் வந்து தூங்குவது...

என என்னற்ற குறும்புகளை
இன்று நினைத்தாலும்
மீண்டும் அந்த காலத்துக்கு
வாழ்க்கையை பின்நோக்கி
நகர்த்த ஆசையாக உள்ளது

அது ஒரு அழகிய பொற்காலம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (31-Mar-18, 12:22 pm)
Tanglish : malarum ninaivukal
பார்வை : 2129

மேலே