பொய் மச்சங்கள்
சொல்ல வேண்டியதில்லை
ஒரு ரத்தக்கலறியாய்.
நாம் பிரிவதற்காக
நீ பிரிவதை...
காட்சியில் வெறியேறும்
ரசிகனின் விம்மலாய்
சாம்பலான காதலில்
உன் காரணங்கள்
காளானாய் முளைத்தது.
எப்போதும் காட்டுகின்ற
கள்ளமற்ற புன்சிரிப்பில்
கந்தகம் நிரம்பியிருந்தது.
வழங்கிய பரிசில்களை
திருப்பி தருகையில்
முனை மடங்கிய என்
முதல் கடிதத்தை நீ
சரி செய்தபோதுதான்
தெரிந்தது தோழி...
நான் தோற்க
உனக்குள் நீயே
தோற்றுக்கொண்டிருக்கிறாய்.
உணர்ந்தவன் எனது
புன்முறுவல் கண்டு
தள்ளாடி நிலைகுலையும்
இன்னுமிருக்கும் உனது
நெஞ்சத்துக் காதலிடம்
சொல் தோழி...
குழந்தைக்கு வைத்த
பொய் மச்சங்கள்தான்
நம் காதலென்று...