தற்கொலை செய்யும் கனவுகள்
நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018
நன்றி:: கூகிள் இமேஜ்
“தற்கொலை செய்யும் கனவுகள்” என்ற தலைப்பில், இரு கனவுகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதாகவும், அதில் ஒன்று மற்றொன்றிடம் உலகில் நடக்காத ஒன்றைக் கனவாகக்கண்டு அது நிறைவேறாது போனால் “தற்கொலை செய்து கொள்வேன்” எனச் சபதம் இடுகிறது. அதைக் கேட்ட அதன் தோழி வீண் சவால் வேண்டமென்று சொல்கிறது.
கனவில் வந்ததெல்லாம் பொய்த்ததால், அந்தத் தோழி தன் வாக்குறுதியை நிறைவேற்ற சொன்ன சொல் தவறாமல் தற்கொலை செய்து கொள்வதாக என் கற்பனைக்கு இங்கே கவிதை வடிவம் கொடுத்திருக்கிறேன்.
==============================
தற்கொலை செய்யும் கனவுகள்..!
==============================
கனவுகள் இரண்டும் தோழியாம்...அதிலொன்று
.......கண்ணான மற்றொன்றிடம் “வீண்சவால்” விட்டதாம்..!
கனவு பொய்த்தால் தற்கொலை செய்வேன்! யார்
.......கனவிலுமினி வரவே மாட்டேனென சபதமிமிட்டதாம்.!
அனவரதம் சபதம் வேண்டாம்! சகதோழியுரைத்தது
.......ஆனமட்டும் சொல்லியும் அத்தோழி கேட்கவில்லை.!
மனதிற்கிட்ட கட்டளைக் குட்பட்டு..மீண்டுமொரு
.......சனனமெடுக்க வழியில்லாக் கனவையே கண்டதாம்.!
அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும்
.......அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.!
பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று
.......பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.!
அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே
.......ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.!
துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை
.......தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.!
துண்டாக்கும் எல்லைக்கோடு பூகோளத்தில் இல்லை
.......தொண்டாற்றும் மனமுடையீர் மட்டுமே நிறைத்ததாம்.!
உண்டாக்கி அழிக்கும் அணுவாயுதமில்லை! இதுபோல
.......கண்ட கனவெலாம் மெய்யாகாமல் பொய்யானதாம்.!
கண்டகனவால் கொண்ட தென்னவோ சோகம்தான்
.......கனவுக்கே பொறுக்கவில்லை! வாக்கும் தவறவில்லை.!
கொண்டசவாலை மனதாரயேற்று தற்கொலை செய்து
.......கொண்டதிலதன் தோழிக்கு மிகுந்த தாளாத்துயரமே.!
=====================================================