அகந்தை உழவன்

விளைந்த கலனியில் செழித்த பயிரினை ,
திளைத்த உள்ளத்தோடு நோக்கினன் உழவன் !
சலையா உழைப்பு உவகைத் தந்தது !!!
களைத்த நிலையிலும் களிப்பு மீக்கொண்டான் !!!

பரந்த வயலில் ஏரினை ஓட்டினேன் !
சிறந்த மணியினை நிலத்தில் தூவினேன் !
செறிந்த உரத்தினை சரியாக இட்டேன் !
தெளிந்த நீரினை குறையாது பாய்ச்சினேன் !!!

கண்ணின் இமைபோல் கருத்தாய் காத்தேன் !
பண்ணும் பாட்டும் பயிராய் இருந்தன !
பட்டபாட்டுக்குப் பலனே கிடைத்தது !
என அட்டியின்றி அகமகிழ்ந்திட்டான் !!!

நானே உழைத்தேன் !
நானே விளைவித்தேன் !
நானே சாதனை
நலமாய் புரிந்தேன் !
நானெனும் கர்வம் ...
நன்றாய் சூழ்த்தது !
உழவன் மனதில்
பெருமை புகுந்தது !!!

வானகம் அங்கே இருளாடை அணிந்தது !
முகிலின் கண்கள் விரிந்து கொண்டன ...
நூலின் இலையாய் மாரி பொழிந்தது !
முற்றிய பயிருக்கு சாட்டையடி விழுந்தது !!!

அடிமேல் அடிபட்டு பயிரும் நைந்தன!
மணிகள் சிதறி மண்ணில் வீழ்ந்தன !
வளம் தரும் மழையோ பயிரை அழித்தது !
வெள்ளம் வந்தது வேதனை சூழ்ந்தது !!!

தருக்கிய உழவன் கண்ணீர் வடித்தான் !
அவனை நறுக்கியழித்தது வான்மழை வாழ்வில் !
பொறுக்கியெடுக்க ஒரு மானியுண்டோ ?
அறுப்பு நடக்க பயிர்தான் இல்லையே !

"கருக்கரிவாளுக்கு வேலைதான் ஏது" ???

அழுதான் அரற்றினான் -நீரில் உருண்டான்!
புலம்பித்தவித்தான் புகலிடம் தேடி ...
ஆழ மர விழுத்தொன்று அவனுக்கு ,
அடைக்கலம் தந்தது .அருகில் வந்து ...

இறுதியில் ....

வானகம் வெளுத்தது ,வெண்முகில் வந்தது !
கானகம் ஆங்கே பணியினை துவங்க ...
புல்லினம் செடிகள் புத்துணர்வு பெற்றன !
இயற்கையின் ஆட்சி சமநிலை பட்டது !
உழவன் செவியில் அசரிரி ஒலித்தது !
மனதில் தைத்தன அதன் சொல்லம்புகள் !!!

"ஆம்"

மண்ணைப் படைத்தோன் !
விண்னைப் படைத்தோன் !
கருமுகில் கருவில்
மழைத்துளிப் பதித்தோன் !
காய்க்கதிரோனுக்கு
வெம்மை அளித்தோன்!
உயிர்ப்பை அளிக்கும்
வழியை வீசுவோன் !
ஆற்றல் குன்று
அனைத்திலும் மிகைத்தோன் !

"ஈடு இணையில்லா இறைவன் அன்றோ"!!!

அவனே படைப்பவன் !
அவனே காப்பவன் !
அழிவின் செயலுக்கும்
அவனே காரணி !

"மானிடன் கைவசம் மந்திரம் இல்லையே "!!!

இதனைக் கேட்டான் உழவனும் நன்றாய் ,
வெட்கிக் குனிந்தான் வேதனை அடைந்தான் !
உழவனின் கண்களில் பனிநீர் சொட்ட ,
உளம் நெகிழ்தான் ! உண்மை உணர்தான் !
"செந்தணல் வீழ்ந்த சிறுகுருவி போன்று",
பதறித்துடித்தான் ! கதறி அழுதான் !

நானெனும் பெருமை நீங்கி எழுந்தான் !
யான் யெனதென்ற அகந்தையை ஒழித்தான் !
இறையருள் மாட்சியில் நம்பிக்கை கொண்டான் !
ஆணவம் அகன்று அமைதி பெற்றான் !

அடக்கமும் பணிவும் அகத்தில் உதித்தது !
ஆணவம் அழிந்தது , இறையருள் சார்ந்தது !
தன்னை இழந்து தரையில் வீழ்ந்தான் !
பிறைருதழ் நெற்றியை நிலத்தில் மோதினான் !

"வல்லோன் இறையே பணிந்தேன் உன்னையே "!!!
"மன்னித்தருள்வாய் மாபாவி என்னையே "!!!

என்றே தொழுது கையை உயர்த்தினான் !

"கண்ணீர் துளிக்கு கருணை பரிசன்றோ"...!!!

மாபெரும் தூயோன் மன்னித்தருளினான் !!!

( ஓராண்டு கழிந்தது )...

இறைவனை நம்பி உழைத்தான் உழவன் ,
விளைச்சல் ஒன்றுக்கு ஏழாய் விளைந்தது !
உழவன் உள்ளம் உவகையில் திரண்டது !
இம்முறை உழவன் நன்றி மறவாது ,
வல்லோன் இறைக்கு வழிபாடு செய்தேன் !!!

ஆணவம் பெருமை அகத்தில் நீங்கிட ,
இறைவனை பணிவோம் இப்புவி மக்களாய் !
மறையவன் துணைநின்று மண்ணில் உய்வோம் !
வாழிய அவன் புகழ் !!! வளர்க அவனருள் !!!

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (1-Apr-18, 9:28 pm)
பார்வை : 86

மேலே