ஆழ்கடல் தாண்டி
என்
உள்ளக் கருத்துகளை
மெள்ளவே புறம் தள்ளுகிறாய்
மன எண்ணத்தைச்
சொல்ல முனைந்தால்
வன் வார்த்தை
வாரி இறைத்து
மௌன மரப்பாச்சி ஆக்குகிறாய்
தான் என்ற விதை ஊன்றி
நிமிர்த்து வளர்க்கிறாய்
திமிர் பயிரை...
எதிர் கருத்து
எடுத்துரைத்தால்
எதிர் பேச்சு என்கிறாய்
நல்ல கருத்தே ஆனாலும்
உள்ளத் தராசுள் ஊற்ற மறுக்கிறாய்
கருத்தொருமித்து
கலந்து சேர்ந்திடவே
காலமெல்லாம்
காத்திருக்கிறேன் - நான்
நீயோ....
உணர்வுகள் உண்டு எனக்கும்...எனும்
உண்மையை உணர மறுத்து
அனுதினமும் ஏங்க வைத்து
அருகில் இருந்த போதும்
ஆழ்கடல் தாண்டியே இருப்பதாக
ஆழ்மனத்தை
அயர்ச்சியுடன் அழ வைக்கிறாய்....
என் செய்வேனடா......
🍁இன்னிலா🍁