நூறாண்டு வாழ்க
என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்சித்தலையை முச்சி முகர்ந்து
உச்சிக்கொண்டை இடுவாள் பெரியம்மை!
கருவண்டான கண்ணுக்கு மை தீட்டுவேன்!
எட்டுத்திக்கும் விசயம் செய்து
எட்டாத சிவனை மணந்த
மதுரை மீனாட்சியம்மன் நினைத்து
கண்ணுக்கழிக்க வருவார் அக்கம் பக்கத்தினர்!
விரைவாய் ஆயத்தமாக
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சோம்பலிட்டு கொண்டிருந்தால்
இனிப்புகள் களவாட
பிள்ளைகள் காத்திருப்பர்!
தாதையும் தாத்தாவும் வருந்தி நிற்பர்!
சுற்றத்தாரும் விருந்தினரும்
சுற்றி நின்று கேலி செய்வர்!
நயமூட்டும் சிரிப்பை காட்டி
வந்திடுவாய் மகளே!வந்திடுவாய்!
நூறாண்டு வாழ
வாழ்த்தி கொண்டிருக்கும் எங்களுக்கு
காட்சியளித்திட வருவாய் மகளே !வருவாய்!