அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்

அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்

அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்...
பயனற்று போன
என்
வாழ்க்கை விளிம்பில்
நின்றுகொண்டு,
பயணித்து வந்த பாதைகளை
நினைத்துப்பார்க்கிறேன்

என்
அம்மா கூறுவாள்
அவளை பனிக்குட கருவறையில் போட்டு
ஒருசில நாட்கள் வைத்திருந்தார்களாம் !
மூன்றாம் நாள்
அவள் துளிர்விட தொடங்கினாள்

வானம் பார்த்த அவள்
வெயிலையும் மழையையும்
ரசித்து ருசித்து வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
காக்கை குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
அவள் நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !

நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.

பூப்பெய்தாள் என் தாய்
வெண்ணிற பூக்களோடு
மின்னிட அவள் சிரித்தாள்,
கருவில் நானும் சிரித்தேன்
என்
உடன் பிறப்புகளும் சிரித்தார்கள்

நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.

நிறைமாத கர்பிணியாய் அவள்
பசியாற்ற காத்திருக்கும் நான் ;
படுத்து மடிந்தாள் அன்னை ,
அறுவடை முடித்தான் அய்யன் ;

தாளை (தாயை)
மண்ணுக்கு உரமிட்டு,
மாட்டுக்கு உணவிட்டு,
கூரைக்கு கரையிட்டு
எங்களை மட்டும் வழியனுப்பினான்
ஊரைவிட்டு !
இருப்பினும் மகிழ்ச்சிதான் எங்களுக்கு
பல கனவுகளை சுமந்த எங்களுக்கு

களிப்புடன் சிந்தனைகள் ;

நான் பணம் படைத்தவரின்
வாயில் வெறும் பருக்காய்
ஆகப்போகிறேனா ?
இல்லை
பசியுடை குழந்தையின் வயிற்றில்
அமிர்தமாய் நிறையப்போகிறேனா ?

மண்ணில் ஒளிந்து மறுபிறவி
எடுக்க போகிறேனா ?
இல்லை
மற்ற உயிர்களுக்கும் பசியாற்ற
போகிறேனா?

என
எண்ணி எண்ணி
களிக்கையில் (களிக்கும் நேரத்தில்)
அவித்து ,
உலர வைத்து ,
அரவையிலிட்டு ,
புடைத்து ,
தூற்றி ,
பொங்கி ,
வடித்து இன்று உங்கள்
தட்டில் நான்

நன்றாக பாருங்கள்
உங்கள் தட்டில் நான் ...

நீங்கள் அள்ளி
உண்ணும் வேளையில்
உங்கள் கவனம் சிதறியதால்
நான்
கையிலிருந்து தவறி
தரையில் சிதறி
கவலையில் கதறி அழுகிறேன்

உங்களுக்கு கேட்கவில்லை

என்னை கூட்டி குப்பையில்
போட்டுவிட்டார்கள்

குப்பைத்தொட்டியிலிருந்து...

அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன் ...

அரிசியுடன் செல்ல.கார்த்திக்

எழுதியவர் : செல்ல கார்த்திக் (5-Apr-18, 11:28 am)
சேர்த்தது : செல்ல கார்த்திக்
பார்வை : 131

மேலே