வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்

உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.

சான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே! பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபோகு அறுவைத் தும்பி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

---------------------------------------

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?’’ (நற். : 70)

என்பதில் சிறிய வெளிய நாரையே! நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.

இதில் முதலில் நாரையின் தன்மையைக் காண்போம். நாரை (குருகு) என்பது எளிதில் பிடிபடாத பறவை அதிகம் பறக்காது ஆற்றங்கரைப் புதர்களில் மறைந்து வாழும் மறை பறவை. அதன் குரலை வைத்தோ அல்லது மீன் பிடிக்கும் போது மட்டுமே காணமுடியும். இத்தகைய நாரையின் தன்மையை உள்ளுறையாகத் தலைவனுடன் ஒப்பிட்டு பாடல் பாடப்பட்டுள்ளது.

பகற்குறி இரவுக்குறி எனும் இரு வேலையிலும் தலைவன் சந்தித்த நிகழ்வை, நாரை இரண்டு ஊருக்கும் சென்றதன் வழிக் கூறுகிறார். சினைக்கெளிற்று என்பது தலைவித் தாய்மை பருவம் எய்தியுள்ளாள் என்பதை உணர்த்துகிறது. என்னிடம் அன்பு இல்லையா? அல்லது மறதி வந்து விட்டதா? என நாரையைத் தலைவிக் கேட்கும் கேள்விகள் தலைவனுக்குரியதாகும். ஏனெனில் தீம்புனல் என்பதன் வழி தலைவன் இனிமையானவன் என்ற செய்தி பெறப்படுகிறது. அத்தகையவன் தன்னை மறந்துவிட்டனோ? என்கிற தலைவியின் அச்சமும் கவலையும் இவ்வாறு வெளிப்படுகிறது. இதன்வழி இயல்பான இயற்கை நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் வழி தலைவன் தலைவி உறவுநிலையும், தலைவியின் மன உணர்வும், சிறப்பாகச் சுட்டப்படுகிறது. அடுத்ததாக

‘‘கன்றும் உண்ணாது கலத்தினும் படாது,
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் மாமை கவினே’’ (குறுந். : 27)

என்னும் இப்பாடலில் வெளிப்படையாகவே தலைவியின் மனநிலையை அவளைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். எவ்வாறெனில் நல்ல பசுவின் இன்சுவைப் பாலானது அதன் கன்றாலும் உண்ணப்படாமல், கலத்திலும் கறக்கப்படாமல் நிலத்தில் சிந்தியது போல, தேமலைக் கொண்ட அல்குல் தடத்து எனது மாமை அழகு, எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் பசலை உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே! என்ற மன வருத்தம் மிக இயல்பாகப் பாடப்பட்டுள்ளது.

இரவில் ஏற்படும் தனிமையானது. காதலர்களை மிகவும் வருத்தமடையச் செய்வது. அதில் நிலவின் ஒளியானது. அவ்வருத்தத்தை மிகுவிப்பதாகும். இத்தகைய சூழலில் உள்ள தலைவியின் மன நிலையினை நெய்தல் நில பின்னிணியில் வெள்ளிவீதி பாடியுள்ளார்.

‘‘திங்களும் திகழ்வான் ஏர்தரும்; இமிழ்நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;

-----------------------------------

யாமம் உய்யாமை நின்றது
காமம் பெரிதே; களைஞரோ இலரே!’’ (நற். : 335)

என்பதில் திங்களும் திகழும் வானத்தில் தோன்றுகின்றது. கடலும் பொங்கும் அலையோடு ஒலிக்கிறது. கடல் நீரும் ஒலி மிகுந்துக் கரையை உடைத்துப் புறப்படுகிறது. தாழையும், நிரம்பிய நீரையும் பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் முள்ளுடைய இலையைக் கொண்டது. சோறு எடுத்துச் சொரியும் அகப்பைப் போலக் கூம்பிய அரும்பு மலர்ந்து நறுமணத்தைக் காற்றில் வீசுகிறது. காற்று, விளிவில்லாத அம்மணத்தோடு கரிய பெரிய பனையில் மோதுகிறது. அன்றில் பறவையானது அப்பனை மரத்தின் உச்சியிலிருந்து வருத்தத்துடன் துன்புற்று; என் பக்கத்து வந்து எலும்பு உருகக் கத்துகிறது. நல்ல யாழ், விரலால் வாசிக்கப்படுவது யாமம் வரை வாசிக்கப்படுகிறது. என் காமம், இவையாவற்றிலும் பெரிதாகிறது. அக்காமத்தைக் களையும் தலைவர் அருகில் இல்லை., என்பதில்

தலைவியின் காம உணர்வு வெளிப்பாடானது, இயற்கையின் மூலம் குறியீடாகக் கூறப்பட்டுள்ளது. வானத்தில் நிலவு இருப்பது போலவும், கடலில் அலைப் பொங்குவது போலவும், தாழையானது நீருடன் இருப்பது போலவும், தலைவன் தலைவி களவு வாழ்வு நிகழ்ந்தது கூறப்பட்டுள்ளது. முன்பு பூப் போல மணம் பரப்பியக் களவு வாழ்வு இன்று முள் போலக் குத்துகிறது என்பது முள் இலை என்பதன் வழி அறியவருகிறது. பனை மரத்தில் அன்றில் பறவை தனிமையில் இருப்பது போலத் தனது இல்லத்தில் தனிமையில் காமமிகுதியால் துன்புறுவதையும் அதைக் களைய தலைவன் இல்லாததையும் எண்ணிப் பாடும் பாடலாக அமைகிறது. முழுக்க முழுக்கத் தலைவன் தலைவியிடையே நிகழ்ந்த அகவாழ்வு செய்திகள் குறியீடாகக் கூறப்படுகின்றன.

தலைவி தலைவனைப் பிரிந்து நோயால் துன்புறும் போது அதைப் புரியாமல் சுற்றமும் அவளைத் திட்டும் சூழலைப் பின்வரும் பாடல் வெளிப்படுத்துகிறது.

‘‘இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே!’’

எனும் இப்பாடலில் தலைவி கொண்ட காதல் நோயின் நிலை பின்வருமாறு கூறப்படுகிறது. ஞாயிறு கதிர்பரப்பும் வெம்மை வாய்ந்த பாறையில் கையிழந்த ஊமை தன் கண்ணால் காவல் காக்கும் வெண்ணெய், அவன் கட்டுக்குள் நில்லாமல் உருகி அழிவது போல் காமநோய் பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப்போகிறது என்கிறாள். இதில் காதல் நோயினால் தலைவி துன்புறும் நிலையை ஒரு சிறு நிகழ்வின் மூலம் வெள்ளிவீதி கூறியுள்ளார்.

ஆனால் இப்பாடல் தலைவன் கூற்று என்று சுட்டப்பட்டுள்ளது.இது ஏற்கத்தக்கதல்ல.

ஏனெனில் குடும்பச் சூழலிலும் சமூகச் சூழலிலும் பெண்ணின் நடவடிக்கை கண்காணிக்கப்படும் கண்டிக்கப்படும். அதுவே இங்கு இடிக்கும் கேளிர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இங்குப் பரந்தன்று இந்நோய் என்பது தலைவிக்குக் காமத்தால் ஏற்பட்ட பசலை நோயைக் குறிப்பதாகும். ‘‘கைஇல் ஊமன்’’ (முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் பட்டது போல) எனும் சொல் பழமொழி போலப் பயன்படுத்த பட்டிருக்கலாம். மற்றவகையில் நோக்குகையில் இது தலைவி கூற்று என்பதைத் தெளிவாக உணரலாம்.

வெள்ளிவீதியின் பல பாடல்கள் தலைவன் பிரிவை எண்ணி ஏங்கும் தலைவியின் ஏக்கமாகவே வெளிப்படுகிறது. நற்றிணையில் உள்ள மற்றொரு பாடலும் இவ்வகையே ஆகும்.

‘‘நிலவே, நீல் நிற விசும்பில் பல்கதிர் பரப்பி,
பால்மலி கடலின், பரந்து பட்டன்றே.

-------------------------------------

கனை இருங் கங்குலும் கண்பெடை இலெனே
அதனால், என்னோடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறுநெஞ்சே?’’ (நற்:348)

என்பதில் நிலவு, நீல நிறவானத்தில் வெண்ணிறமான பல கதிர்களையும் பரப்பிப் பால் நிறைந்த கடல் போலப் பரந்துபட்டது. ஊர், ஒலிக் கூட்டத்தோடு மக்கள் நிறையச் சேர்ந்து திரண்டு ஆரவாரமான தெருக்களில் திருவிழாக் கொண்டாடுவர். காட்டிலோ, மலர்ந்தபூக்கள் மிக்கச் சோலைகள்தோறும் தாம் விரும்பிய துணையுடன் வண்டுகள் கலந்து ஒலிக்கும். அணிகலன்களை நெகிழ்விக்கும் தனிமை மிக்கத் துன்பத்தோடு நீண்ட இராப்பொழுது முழுவதும் கண் உறங்காமல் இருக்கிறேன். அதனால் இவ்வுலகம் என்னைத் தாக்கி போர் புரியுமோ? அல்லது உலகத்தோடு என் துயருற்ற நெஞ்சம் போர் செய்யுமோ?

என்ற இப்பாடலில் அறிய வரும் கருத்துகளாவன, வானில், நிலவு தன் கதிரைப் பரப்பி ஊரெங்கும் ஒளிபரப்புவது போலத் தலைவனுடனான தலைவியின் கூடல் அவள் வாழ்வில் இன்பத்தைப் பரப்பியது என்பதும், மக்கள் ஓசையோடு விழா கொண்டாடுவது போலத் தலைவன், தலைவியின் மன ஓசை அறிந்து அவளைக் காணவந்தான் என்பதும், காட்டில் பூத்த மலரைத் தேடி வண்டு போவது போலத் தலைவியின் இருப்பிடம் தேடி தலைவன் வந்த செயல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தலைவனுடன் மகிழ்வாக நிகழ்ந்த களவுவாழ்வு இன்று அவன் இல்லாமல் வருத்தத்தை மிகுவிப்பதாக உள்ளது. என்ற செய்தி காதல் உணர்வின் குறியீடாக வெளிப்படுகிறது.

தலைவனுக்காகக் காத்திருந்து வருத்தமுற்ற தலைவி இறுதியில் அவனைத்தேடி தானே செல்ல போவதாகவும் வெள்ளிவீதி பாடல் பாடியுள்ளார்.

‘‘நிலம்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்
விலங்குஇரு முந்நீர் காலின் சொல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் ஊரோ? நம்காத லோரே.’’ (குறுந். : 130)

பிரிந்து சென்ற தலைவனைத் தேடிச் சென்ற தலைவியின் மன உணர்வினை இப்பாடல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நம் தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்லமுடியாது. வானின் உயரே பறந்தும் செல்ல முடியாது. பெரிய கடலில் காலால் நடந்தும் சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும் சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இதில் தலைவியின் மன உறுதியும் தலைவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற காதல் உணர்வும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

முடிவாக
பெண்ணின் காதல் (காம) உணர்வு வெளிப்பாட்டினையும், தலைவன் தலைவியிடையே நிகழ்ந்த களவு வாழ்வு பற்றியும் கூற வந்த வெள்ளிவீதியார், அதைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகள் வழியாகவும் சுற்றி நிகழ்கின்ற சூழல் வழியாகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளிவீதியாரின் பாடல்கள் அனைத்தும் இயற்கைப்பின்னணியும் உணர்ச்சிக் கூறுபாடுகளும் கொண்டவை. இயற்கையை, வாழ்வோடு இயைந்த பொருளாகக் கொண்டு வாழ்விற்கு வழிவகுக்கும் கருத்துகளைக் குறிப்புப்பொருளாகக் கொண்டு இயற்கைச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை விடுத்து பெண்ணையும், பெண்ணைவிடுத்து இயற்கையையும் காண இயலா சூழலில் பாடல்கள் அமைந்துள்ளன.



* கட்டுரையாளர் - - முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -

எழுதியவர் : (8-Apr-18, 9:04 pm)
பார்வை : 763

மேலே