கனா கண்டேன் தோழா நான்-------------------பாக்கியம் ராமசாமி
நண்பன் நாராயணன் ஏதாவது கனவு கண்டால் அவனது மனைவியிடம்கூடச் சொல்லமாட்டான். (அப்படியே அவன் சொன்னாலும் அந்த அம்மையார் பொறுமையாக காது கொடுத்துக் கேட்கமாட்டாள்.)
ஆகவே தனது கனவுகளை சுடச்சுட சொல்லுவதற்கு சில வேளைகளில் என் வீட்டிற்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவான்.
அன்றைக்குக் காஃபி சாப்பிட்டானதும் தன் கனவைப் பற்றிக் கூறினான். ஏதோ ஒரு சத்திரத்தில் நிறைய மனிதர்கள் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருக்கிறார்களாம். அவர்களுக்கு நடுவில் நாராயணனும் போய் உட்கார்ந்து கொள்கிறானாம். சாப்பாடு இன்னும் வரவில்லையே என்று ஒருத்தர் கத்துகிறாராம். நாராயணன் அவரை ஓங்கி அடிக்கிறானாம். ‘போடுவதே தர்ம சாப்பாடு. ஏன் கத்துகிறீர்,‘ என்று நாராயணன் கோபப்படுகிறானாம்.
விழிப்பு வந்துவிட்டதாம். ‘இதற்கு ஏதாவது பலன் உண்டா?‘ என்று கேட்டான். அவன் என்னிடம் கேட்டத்தில் ஓர் அர்த்தம் உண்டு.
’என்ன கனா கண்டால் என்ன பலன்’ என்பது பற்றி ஒரு பழைய புத்தகம் என்னிடம் இருந்தது. அதைப் பார்த்து அவனுக்குப் பலன் சொல்லவேண்டும் என்று விரும்பினான்.
கனவுகளின் பலா பலன்களைப் பற்றி தேவ குருவாகிய வியாழ பகவான் விரிவாக கூறியுள்ளார்.
’சில பேருக்கு கனவுகள் அதிபித்த ரோகத்தாலும், தேக அஜீரண பலவீனம் முதலியவற்றாலும் நேர்தல் உண்டு. அவை பலிக்கப்படமாட்டாது. ஆயினும் சில கனவுகள் பலிக்கக் கூடியவை. பெரியோரின் அனுபவத்தினாலும் கண்டிருக்கிறோம். ஆதலால் அதனைப் பொய்யெனத் தகாது’ என்ற முன்னுரையுடன் கூடிய ’கனா நூல்’ என்ற அந்த நூலைப் புரட்டினேன்.
அதிலிருந்து சில பலன்கள்:
1. இடுக்கான ஒரு வழியில் சிக்கிக்கொண்டு நடப்பதற்குக் கஷ்டப்படுவதுபோல் கண்டாலோ, ஏதாவது குகையில் தனித்து இருப்பதுபோல் கண்டாலோ ஏதாவது கஷ்டம் வரும். குகையில் கொடிய பிராணிகளைக் கண்டால் புத்திரருடன் விரோதம்.
2. சுடுகாட்டைக் கண்டால் வீட்டில் அபிவிருத்தி.
3. காய்கறிகளைக் கண்டால் புகழ்.
4. அழுக்கான தண்ணீரைக் கண்டால் எண்ணிய காரியம் முடியாது.
5. நீரின் மேலே மிதந்துகொண்டு போவதுபோல் கண்டால் சுக ஜீவனம்.
6. தீப் பந்தத்தை அல்லது தீவட்டியைத் தானே கையில் பிடித்திருப்பதுபோல் கண்டால் ஆபத்து நீங்கும். சிநேகிதர்கள் உதவுவார்கள். மற்றொருவன் தீப் பந்தம் பிடித்திருப்பதுபோல் கண்டால் தனக்குத் தீமை செய்கிறவன் கெடுவான்.
7. காற்றாடி விடுவதுபோல கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
8. இருளில் வழி தெரியாமல் இடி மின்னல் கூடிய சூழ்நிலையில் தப்பி ஓடுவதுபோல கண்டால் ஆபத்து ஒழியும்.
9. கடும் வெய்யிலில் நடப்பதுபோல கண்டால் திரவிய லாபம்.
10. வெண்ணையைக் கண்டால் உத்தியோக லாபம்.
11. பிணத்தைக் கண்டால் விருந்து சாப்பிடும் பாக்கியம் கிடைக்கும்.
12. பெண் போல் தலைமுடியை வளர்த்தவனைக் கண்டால் பெண்களால் மோசமடைவான். மொட்டைத் தலையனைக் கண்டால் ஆரோக்யம் ஏற்படும்.
13. சிங்கம், புலி முதலிய கொடிய மிருகங்களைக் கண்டாலும் அவைகள் கடித்ததாகக் கண்டாலும் விரோதம் உண்டாகும்.
14. கல்யாணத்திற்குத் தான் உதவி செய்வதுபோல் கண்டால் எடுத்துக்கொண்ட காரியம் வெற்றி.
15. விரோதிகளைக் கண்டு பேசினதாகவும், சண்டையிட்டதாகவும் கண்டால் துன்பம் ஏற்படும்.
16. இறந்தவருடன் பேசினதாகக் கண்டால் புகழ் உண்டாகும்.
17. பிசாசைக் கண்டால் எடுத்துக்கொண்ட காரியம் நஷ்டம் அடையும்.
18. பசுக்கள் மேயக் கண்டால் நன்மை.
19. தான் பைத்தியமாக ஆகிவிட்டதுபோல் கனாக் கண்டால் செல்வம் உண்டாகும்.
20. குரங்கைக் கண்டால் கலகம் ஏற்படும்.
21. தான் நிர்வாணமாகத் திரிவதுபோல் கண்டால் தரித்திரம் உண்டாகும்.
22. அம்மை வார்த்திருப்பதாகக் கண்டால் தனப் பிராப்தி.
23. எண்ணெய் தேய்த்துகொள்வதாகக் கண்டால் வியாதி.
இன்னும் இதுமாதிரி ஏராளமான பலன்களை நான் படிக்கப் படிக்க நண்பன் நாராயணன் பொறுமை இழந்து ‘நான் கண்ட கனவுக்கு என்ன பலன்? அதைப் பார் முதலில்,‘ என்றான்.
‘நீ என்ன கனவு கண்டாய்?‘
‘சத்திரத்தில் இருப்பதுபோல கண்டேன்‘ என்றான்.
நான் புரட்டிப் பார்த்துவிட்டு ‘சத்திரத்தில் இருப்பதுபோல கண்டால், சிறை வாசம் ஏற்படும் என்று பலன் போட்டிருக்கிறது,‘ என்றேன்.
நாராயணன் பயப்பட்டான். ‘அய்யய்யோ, நான் ஜெயிலுக்குப் போய் விடுவேனா?‘
நான் சிரித்தேன். ‘நீ தான் ஏற்கெனவே ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தாயிற்றே.‘
நாராயணனும் சிரித்தான்.
ஆமாம், நாராயணன் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குப் போனது உண்மைதான். ’பழைய ஜெயிலை இடிப்பதற்கு முன் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம்’ என்ற அறிவிப்பு வந்திருந்ததல்லவா! ஜெயிலை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தவர்களின் நாராயணனும் ஒருவன்.
அவன் கனவு பலித்துத்தானே விட்டது?