ஒரு சிறு இசையுடன் மூன்று நாட்கள்
அதிகாலை ஐந்து மணியளவில் ஜான் சுந்தரும், சாம்ஸனும் கோவை ரயில் நிலையத்தில் வரவேற்றனர். கூடவே ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ‘ஷிமோகா’ ரவி. ரவியை அதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேனென்றாலும் அவரது முகம் மறக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் கவிஞர் தேவதேவனுக்கு வழங்க இருந்த விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் நான் சென்றிருந்த போது, மேற்படி ரவிதான் எங்களை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். முன் சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தவர், காரின் பின்சீட்டில் இளையராஜாவுடன் அமர்ந்திருந்த என்னைத் திரும்பிப் பார்த்து, ‘தேவனின் கோயில் பிரமாதம்ங்க’ என்று சொல்லி என் வயிற்றில் சுடச் சுட புளிக்குழம்பைக் கரைத்த புண்ணியவான். ரயில் நிலையத்தின் வாசலில் எனக்காக இரண்டு கார்கள் தயாராக நின்றன. ‘நான் ஒரு கார்லயே போயிக்கிடறேனே’ என்று கெஞ்சும் தொனியில் தேவனின் கோயிலிடம் கேட்டேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்து நண்பர்களுக்கே உரிய பரந்த மனதுடன் உடனே சம்மதித்தார்.
‘காபி குடிக்கலாமாண்ணா?’ என்று கேட்டார், ஜான். ‘இதென்ன கேள்வி? குடிக்கணும்’ என்றேன். அநேகமாக கோவையிலுள்ள எல்லா சைவ ஹோட்டல்கள் முன்னும் காரை நிறுத்துவது போல போக்கு காட்டி, ‘இங்கே வேண்டாம்ணா. வேற எடத்துக்குப் போகலாம்’ என்று சொல்லி, அரைமயக்கத்துக்கு என்னைத் தள்ளி, ஏதோ ஒரு ஹோட்டலில் இறக்கிய போது விடியத் துவங்கியிருந்தது. ஏற்கனவே ரயிலில் வரும் போது அதிகாலை நாலு மணிக்கு ஜான் ஃபோன் பண்ணி, ‘எங்கே வந்துக்கிட்டிருக்கீங்கண்ணா?’ என்று கேட்டு அப்போதுதான் உறங்கத் துவங்கியிருந்த என்னை எழுப்பியிருந்தார். தூக்கமின்மையுடன் சேர்ந்து காப்பி தாகம் பசியாக மாறத் துவங்கியிருந்தது. தான் ஒரு கவிஞர் என்பதால் குறிப்புணர்ந்த ஜான் சுந்தர், ‘டிஃபன் தயாராகியிருக்கும். ஏதாவது லைட்டா சாப்பிட்டுட்டு காஃபி சாப்பிடலாம்ணா’ என்றார். சூடாக பொங்கல் வந்தது. ‘லைஃப்ல இதுதாண்ணா ஃபர்ஸ்ட் டைம். இவ்வளவு சீக்கிரமா அதுவும் பல் விளக்காம சாப்பிட்டதே இல்ல’ என்றார், சாம்ஸன். ‘ஜான் என்ன பல்லா வெளக்கறாரு. சும்மா சாப்பிடுங்க சாம்ஸன்’ என்றேன். சாம்ஸனும் ஒரு கவிஞர் என்பதால் முதலில் அவர்தான் சாப்பிட்டு முடித்தார்.
வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் தங்குவதற்காக சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு நாங்கள் சென்ற சில நிமிடங்களில் அண்ணாச்சி திருநவேலியிருந்து வந்தார்கள். அவர் குளித்து தயாராகி வரும் வரை என்னுடன் ஜானும், சாம்ஸனும் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமியும், விஜய சூரியனும் வந்தார்கள். அரங்கசாமி கட்டித் தழுவி என் தாடியைத் தடவிக் கொஞ்சினார். வழக்கமாக ஜெயமோகன் என் தலையைத் தடவிக் கொடுத்து, ‘உயர்ரக நாய்க்குட்டியை தடவிக் குடுக்கற மாதிரியே இருக்கு’ என்பார். ஜெயமோகன் அளவுக்கு இல்லையென்றாலும் அரங்கசாமி, ‘ஃபோட்டோல தாடி உங்களுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு. நேர்ல இவ்வளவு அழகா இருக்கும்னு நெனைக்கலேண்ணா’ என்றார். நம்பிச் சிரித்தேன்.
அப்படி இப்படி என்று மணி ஒன்பதானது. அண்ணாச்சியுடன் என்னையும் ஆனந்தா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள். மரபின் மைந்தன் வந்து சேர்ந்தார். மரபின் மைந்தனும், நானும் அண்ணாச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். வழக்கம் போல அண்ணாச்சி அதிகம் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அண்ணாச்சியுடன் பேச இயலாத பலர் என்னை அழைத்திருந்தனர். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகர் இளவரசு, வின்சென்ட் ஆரோக்கியசாமி அண்ணாச்சி, நண்பன்கள் குஞ்சு, தங்கதுரை,பகவதி, ராமசுப்ரமணியன் என பலரும் சாகித்ய அகாதமி விருதுக்காக எனக்கு வாழ்த்து சொன்னார்கள்.
மதியத்துக்கு மேல் கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கியிருந்த ‘பாட்டையா’ பாரதி மணியைப் பார்க்க அண்ணாச்சியும், நானும் கிளம்பிச் சென்றோம். புகையிலை மணக்கும் அறைக்குள் நுழைந்த போது அறையில் பாட்டையாவுடன் அவரது ரசிகர்கள் சிலரும், ரசிகை ஒருவரும் அமர்ந்திருந்தார். கட்டிலில் அமர்ந்திருபடியே எங்களை வாய் நிறைய சிரிப்புடனும், சந்தோஷக் கூக்குரலுடனும் வரவேற்ற பாட்டையா என்னைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு, ‘எத்தனை நாளாச்சுடா உன்னைப் பாத்து’ என்றார். அந்த ஒரு அணைப்பு ஆயுசுக்கும் போதும். ‘ரொம்ம்ம்ம்ப்ப சந்ந்த்ந்த்ந்த்த்தோஷம் கல்யாணி’ என்றபடி அண்ணாச்சியையும் அணைத்துக் கொண்டார். பார்க்கிற, பழகுகிற மனிதர்களிடத்திலெல்லாம் தனது உள்ளார்ந்த அன்பை வாரி வாரி வழங்குவது ஒன்றையே பிரதானமாகச் செய்து வரும் அற்புதக் கிழவர் அவர். அறையிலிருந்த மற்றவர் விடைபெற்றுக் கிளம்பும் போது, அவரது அழகிய தோழியைச் சுட்டிக் காட்டி, ‘எல! அவதான் என் காதலி’ என்றார் பாட்டையா. எரிகிற நெருப்பில் இன்னும் கொஞ்சம் மண்ணெண்ணையை ஊற்றும் விதமாக அந்த அம்மையாரும் நின்று திரும்பி நாங்கள் இருக்கும் திசையைப் பார்த்து, ‘ஆமா. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா காதலிச்சுக்கிட்டு இருக்கோம்’ என்று சொல்லி விட்டுச் சென்றார். பாட்டையாவை மனதார திருநவேலி பாஷையில் நான் ஏசிய சொற்கள் அந்த அறையில் இருந்த மற்றவர் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. பாட்டையாவின் மனச்செவியில் அவர் கேட்டிருப்பதை என்னை அவர் பார்த்த நாரோயில் பார்வை சொல்லாமல் சொல்லியது.
இதற்கு மேலும் அங்கு இருக்க வேண்டாம் என்று கிளம்ப எத்தனிக்கும் போது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துத் தோழர்கள் வந்து அறையை நிரப்பினர். தெரிந்த முகங்களுடன் தெரியாத ஒருசில முகங்களும் இருந்தன. அவர்களில் ஒருவர் தேவையில்லாத அளவுக்கு உயரமாக இருந்தார். எவ்வளவு பெரிய வாசலிலும் ஒருச்சாய்த்துதான் நுழைய வேண்டிய ஆகிருதி. சீலிங் ஃபேனைப் பார்த்துதான் ‘ஹலோ’ சொல்ல வேண்டியிருந்தது. ‘ஏன் பிரதர்! கடலூர் சீனுவைக் காணோமே! உங்க கோட்டுக்குள்ள இருக்கானா? பாவம் மூச்சு முட்டப் போகுது. அவனை இறக்கி விடுங்களேன்’ என்று சொல்ல வாய் பரபரத்தது. அப்போதுதான் அவர் ஏதோ வடமாநிலத்தின் கலெக்டர் என்கிற தகவல் சொல்லப்பட்டது. இன்னொரு முறை சீலிங் ஃபேனுக்கு ஹலோ சொல்லிவிட்டு, அதற்கு மேலும் அங்கிருக்காமல் பயந்துக் கிளம்பினோம்.
மறுநாள் காலை மரபின் மைந்தன் முத்தையா குறுஞ்செய்தி மூலம் காலை வணக்கம் சொல்லி எழுப்பினார். அண்ணாச்சியை தொந்தரவு செய்யாமல் இருவரும் நடைப் பயிற்சிக்குக் கிளம்பினோம். ’25 ஆம் தேதி விழாவுக்கு கல்யாண்ஜி ரெண்டு நாள் முன்னாடியே வந்திடறாங்க. நீங்களும் ஏன் சீக்கிரமே வரக் கூடாது?’ என்று மரபின் மைந்தன் அழைத்திருந்தார். கூடவே இன்னொரு செய்தியையும் சொல்லி என் வருகையை அவரே உறுதி செய்திருந்தார். ‘நம்ம அலுவலகத்துக்குக் கீழே ஒரு கோல்டன் ரெட்ரைவர் குட்டி வந்திருக்கான். பய படுசுட்டி’. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே இருந்த மரபின் மைந்தனின் அலுவலகத்துக்குச் சென்றோம். பாய்ந்து வந்தான், பயல். பொன்நிறத்தில் புசுபுசுவென இருந்தான். ஏழு மாதத்து அழகன். வாரி அள்ளி அணைத்துக் கொண்டேன். பொதுவாக லேப்ரடார் வகை நாய்கள் பாசமலர்கள். அவை முறைக்கும் இனமல்ல. குழையும் இனம். பொறுமையாகக் காத்திருந்து ‘போகலாமா’ என்று மரபின் மைந்தன் கேட்கும் வரைக்கும் கொஞ்சினேன். மனமே இல்லாமல் பிரிந்து வந்தேன்.
விடுதிக்கு வரவும் அண்ணாச்சி குளித்துக் கிளம்பியிருந்தார். கைபேசியில் கமல் அண்ணாச்சியின் ஒன்றிரண்டு தவறிய அழைப்புகள் இருந்தன. திரும்ப அழைத்தேன்.
‘என்னய்யா இது? வண்ணதாசனும் ஃபோன எடுக்க மாட்டெங்காரு! ஒங்க லைனும் கிடைக்கல’ என்றார்.
‘ஒரு நிமிஷம் இருங்க’ என்று அருகிலிருந்த அண்ணாச்சியிடம் கொடுத்தேன். இரண்டு அண்ணாச்சிகளும் சில நிமிடங்கள் பேசினர். ‘ரொம்ப மகிழ்ச்சி கமல். உங்க கூட பேசலேன்னா என்ன? அதான் சுகா கூட பேசறேனே’ என்பதாக அண்ணாச்சி பேசி விட்டு ஃபோனைக் கொடுத்தார். ‘பொறாமையா இருக்குய்யா. வண்ணதாசன் கூடல்லா இருக்கிய’ என்றார் அவர் பங்குக்கு, கமல் அண்ணாச்சி. அடுத்தடுத்து மற்ற நண்பர்களும் ஃபோனில் பேச, நாகர்கோயிலிலிருந்து ஜெயமோகன் வந்து சேர்ந்தார். விடுதிக்குக் கூட செல்லாமல் நேரே வண்ணதாசன் அண்ணாச்சியைப் பார்க்க வந்தார். ‘நாம பாத்து எத்தனை மாசமாச்சு’ என்று வழக்கம் போல நாங்களிருவரும் கட்டிக் கொஞ்சிக் கொண்டோம். ‘யார் தொப்பை பெருசு?’ என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் தவறவில்லை.
பதினோறு மணிவாக்கில் குஜராத் சம்மேளனக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய அமர்வுக்குச் சென்றோம். அரங்கம் முழுக்க சிரிப்பலைகளும் ஆரவாரமும் அதிர நாஞ்சில் நாடன் சித்தப்பா பேசிக் கொண்டிருந்தார்கள். வண்ணதாசன் அண்ணாச்சியை எழுந்து நின்று வரவேற்று அருகில் அமர வைத்துக் கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தார். சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு மீண்டும் விடுதிக்குத் திரும்பினோம். மதியம் ஜான் சுந்தரின் குழந்தைகள் வந்தனர். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சுவாரஸ்யமாக மாலை வரை சூழலை அமைத்துக் கொடுத்தனர் பிள்ளைகள். எழுத்தாளர் கனகதூரிகா தனது கணவருடன் வந்திருந்தார். அன்று அவரது பிறந்த நாள். அவரது ‘கால்புழுதி’ நாவலுக்கு நான் அணிந்துரை எழுதியிருக்கிறேன். நேரில் அப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். அண்ணாச்சியுடனும், எங்களுடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தம்பதியர் கிளம்பிச் சென்றனர். இரவு உணவுக்கு ஜான் சுந்தர் அவரது இல்லத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தார். அண்ணாச்சி என்னை நோக்கி கை காட்ட நான் மறுத்தேன். ‘ஜான்! வீட்டுக்கு வர்றோம். ஆனா சாப்பாடுல்லாம் செய்யச் சொல்லாதீங்க. நாளைக்கு கிறுஸ்த்மஸ்ல! அவங்களுக்கு ஆயிரம் வேலையிருக்கும். சிரமப்படுத்தாதீங்க’ என்றேன். ஜான் சுந்தர் சமாதானமடையவில்லை. அவரது இல்லாளுக்கு ஃபோன் செய்து என் கையில் கொடுத்தார்.
‘வர முடியுமா, முடியாதாண்ணா?’ டீச்சர் மிரட்டினார். ‘இதோ கிளம்பி வர்றோம்’ என்று கிளம்பிச் சென்றோம். அடுத்த சில நிமிடங்களில் ஜானின் சின்னஞ்சிறிய வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் புடைசூழ ரோஜா பாப்பா பாட ஆரம்பித்தாள்.
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடி முடிக்கவும், ‘ஜான்! இவள் வெறும் பாடகியில்ல. பெர்ஃபார்மர்’ என்றேன். குழந்தை அத்தனை உணர்ச்சிபூர்வமாகப் பாடினாள். திருமதி ஜான் தந்த சிற்றுண்டியையும், தேநீரையும் அருந்திவிட்டுக் கிளம்ப எத்தனித்த போது, ‘பாப்பா! முழுமதி பாடிக் காட்டேன்’ என்றார், ஜான். ‘நாலு லைன் தான்ப்பா தெரியும்’ என்றாள் ரோஜா. கொஞ்சம் பிகு பண்ணிக் கொண்டு அவளாகப் பாடத் துவங்கினாள்.
‘முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்’
குழந்தை பாடி முடிக்கும் போது எங்கோ உள்ளில் உடைந்து பெருகியது. கண்களைத் துடைத்து முடியவில்லை. அதற்கு மேல் அங்கு பேச ஒன்றுமில்லாமல் போனது. ‘அய்ய! என்ன பெரியப்பா அழுகறீங்க?’ என்றாள் ரோஜா. பதில் சொல்ல இயலாமல் கிளம்பி வந்தோம். அண்ணாச்சியும் கலங்கித்தான் இருந்தார். சாம்ஸனின் காரில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம். காருக்குள் நிலவிய நிசப்தம் ஜானை பயமுறுத்தியிருக்க வேண்டும். ‘ரொம்பக் கொடுமையா இருக்கு. யாராவது பேசுங்க’ என்றார். வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்த அஞ்சலி சுவரொட்டிகளில் சிரித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தம்மா செத்துப் போச்சுன்னே நம்ப முடியலல்ல?’ என்றேன். ஏதோ பேச வேண்டுமென்பதற்காக அதை சொல்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. இதற்குள் கார், சாம்ஸனின் இல்லம் வந்தடைந்தது. ‘லிஃப்ட்ல போலாம்’ என்று சொன்ன சாம்ஸனை பொருட்படுத்தாது படிகளில் ஏறினோம்.
கிறுஸ்த்மஸ் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சாம்ஸனின் இல்லத்துக்குள் நுழைந்த எங்களை சாம்ஸனின் மகள் வரவேற்று சிரித்து, பின் வெட்கப்பட்டு சோஃபாவில் சாய்ந்து கொண்டாள். நாகர்கோயில்க்காரரான சாம்ஸனின் மாமனார் கட்டம் போட்ட சாரமும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். திங்கள்சந்தையில் அவரது சாயலையொத்த மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். சாம்ஸனின் இரண்டாவது குழந்தையை தூக்கி வைத்திருந்த சாம்ஸனின் மாமியார் தச்சநல்லூர் இசக்கியம்மை அத்தையை ஞாபகப்படுத்தினார்.
‘ஹெமிலாதான் எனக்கு எல்லாமே! இன்னிக்கு நான் ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு அவதான் காரணம். தனி ஒரு மனுஷியா நின்னு என்னையும், என் குடும்பத்தையும் காப்பாத்தி இன்னிக்கும் எங்களுக்கு அவதான் சக்தியா இருக்கா’. தனது மனைவியை அறிமுகப்படுத்தி அழைத்து வந்தார் சாம்ஸன். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க’ என்றபடி சாய்ந்து நடந்து வந்து எங்களை வணங்கிய அந்தச் சகோதரியின் சிறு குறையுமில்லாத மனதை அவரது சிரிப்பு காட்டியது. மாறா மலர்ச்சியுடன் அந்த மகராசி, ‘காபி சாப்பிடுங்கண்ணா’ என்று காபிக் கோப்பையை வழங்கியபோது வாய் விட்டுக் கதறத் துவங்கினேன். எழுந்து வெளியே ஓடி தெருவுக்குச் சென்று விட்டேன். சில நிமிடங்கள் என்னைத் தனியே விட்ட சகக்கோட்டியான ஜான், பிறகு மெல்ல அருகில் வந்து, ‘போலாமாண்ணா?’ என்றார். மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்று அமர்ந்தேன். என் தோள்களில் கைகளைப் போட்டபடி வண்ணதாசன் அண்ணாச்சி ‘இவன் இருக்கானே’ என்று தொடங்கி, ஏதேதோ சொல்கிறார். ஒன்றும் என் காதில் விழவில்லை. ஒருமாதிரியாக அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினோம். வாசல் வரைக்கும் வந்த சகோதரி ஹெமிலா, ஜெயமோகனின் வாசகி என்பதை சாம்ஸன் சொன்னார். ‘அப்ப நாளைக்கு நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கிட்டு வாங்க. ஜெயமோகனை அறிமுகப்படுத்தி வைக்கலாம்’ என்றேன்.
ஜான் சுந்தரின் இசைப்பள்ளியை நான் அதுவரை பார்த்திருக்கவில்லை. பின்னணியில் இசைக்கருவிகள் ஒலிக்க ஜானுடன் தொலைபேசியில் பேசிய முன் அனுபவங்களில் அந்தப் பள்ளியைப் பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. சாம்ஸனின் வீட்டிலிருந்து ஜானின் இசைப்பள்ளிக்குச் சென்றோம். ஜானின் மகன் டிரம்ஸ் பயிற்சியில் இருந்தான். உள்ளே நுழைந்ததும் ‘ரொம்ப சந்தோஷம்ணா. ரெண்டு பேரும் உக்காருங்க. ஃபோட்டோ எடுக்கணும்’ என்றார் ஜான். மாட்டியிருந்த புகைப்படங்களில் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்திலிருந்து கோவில்பட்டிக்காரரான ஜானின் தகப்பனார் என்னிடம் ‘யய்யா! வந்ததுதான் வந்தே! என்னமாது வாசிக்கக் கூடாதாடே?’ என்றார். சட்டென்று எழுந்து, ‘கீ போர்டை ஓப்பன் பண்ணுங்க, ஜான்’ என்றேன். என் மகன் வைத்திருக்கும் அதே யமஹா. ‘ஆகா’ என்றபடி அவசர அவசரமாக கீ போர்டைத் திறந்து இணைப்பு கொடுத்தார், ஜான். ‘ஸ ப ஸ’ பிடித்து விட்டு சம்பிரதாயமாக மாயாமாளவ கௌளை மட்டும் வாசிக்கத்தான் எண்ணினேன். அடங்காக் கொந்தளிப்பில் இருந்த மனம் சிவரஞ்சனியைத் தேர்ந்தெடுத்து இசைக்கப் பணித்தது. சில நிமிடங்கள் வாசித்திருப்பேன். என்னைச் சுற்றி நின்று சாம்ஸனும், வண்ணதாசன் அண்ணாச்சியும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதை அதற்குப் பிறகே அறிந்தேன். வாசித்து முடிக்கவும் அண்ணாச்சி என் கைகளைப் பிடித்தபடி, ‘நான் என்னன்னு சொல்ல? இப்படி உன் கையப் பிடிச்சுக்கிடத்தான் முடியும்’ என்றார்.
விஷ்ணுபுரம் விழா நடைபெறும் ஞாயிறு காலை குளித்துக் கிளம்பி மீண்டும் குஜராத் சமாஜக் கட்டிடத்துக்குச் சென்றோம். கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த ‘தமிழினி’ வசந்தகுமாரைப் பார்த்து, அருகில் சென்று தொட்டு அழைத்து வணங்கினேன். தனது வழக்கமான உதாசீன வணக்கத்தைத் திரும்ப வழங்கினார் திரு வசந்தகுமார். இந்த விஷயத்தில் சாகித்ய அகாதமி அறிவிக்கப் பட்டிருப்பவர், சாமானியன் என்றெல்லாம் வசந்தகுமார் பிரித்துப் பார்க்கக்கூடியவர் அல்லர் என்பது வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் அவர் வரவேற்ற விதம் காட்டியது. அரங்கத்துக்குள் நுழைந்த போது என் அபிமான எழுத்தாளர் சு. வேணுகோபால் பேசிக் கொண்டிருந்தார். வண்ணதாசன் அண்ணாச்சியைப் பார்த்ததும் எழுந்து தன் பேச்சை முடிக்க போனவரைத் தடுத்து, ‘நீங்கள் பேசுங்கள். நான் அமர்ந்திருக்கிறேன்’ என்று அவரருகில் அமர்ந்து கொண்டார், அண்ணாச்சி. பார்வையாளர் வரிசையில் கவிஞர் தேவதேவனுக்கு அருகில் உள்ள நாற்காலியில் என்னை அமரச் செய்தார்கள்.
தேவதேவன் அண்ணாச்சியைப் பார்த்து வணங்கி, ‘அண்ணாச்சி நல்லாருக்கேளா?’ என்றேன். முகத்தில் உணர்ச்சியில்லை. ‘வணக்கம் அண்ணாச்சி. நான் தான் சுகா’ என்றேன். அதற்கும் பதிலில்லை. இது எத்தனைன்னு சொல்லுங்க பாப்போம் என்று விரல்களை முகத்துக்கு முன் அசைத்தாலும் கண்களில் சலனமே இருக்காது போல! தேவதேவன் எப்போதும் அப்படித்தான். கவிமனது என்றார்கள். நானறிந்த ஒப்பற்ற கவிஞர்களான சுகுமாரன், யுவன் போன்றோரெல்லாம் தேவதேவனைப் போன்ற கவிமனதுடன் நடந்து நான் பார்த்ததில்லை. எல்லா மனிதர்களையும் போல அவர்கள் சிரிப்பார்கள், அழுவார்கள். காலை மிதித்தால் ‘யம்மா’ என்று அலறுவார்கள். இந்த கவிமனதுக்காரருக்காகத்தான் நான்கு வருடங்களுக்கு முன்பு அத்தனை சிரமப்பட்டு இளையராஜாவை இதே விஷ்ணுபுரம் விழாவுக்கு அழைத்து சென்றிருந்தேன். அடுத்த முறை கவிஞர் தேவதேவனைப் பார்க்கும் போது, அவர் முன்னால் ரோஸ்கலர் இரண்டாயிர ரூபாய் நோட்டைப் போட்டுப் பார்த்து கவிமனதை சோதிக்க வேண்டும்.
தனது வாசகர்களுடனான கலந்துரையாடலை அத்தனை சிறப்பாகப் பங்கேற்று, இயல்பாக நிறைவு செய்தார் அண்ணாச்சி. வாசகர்களோடு வாசகராக எங்கோ தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலேயே அது ஜெயமோகனின் குரல் என்பதை அறிந்து கொண்டேன். விஷ்ணுபுரம் விழாக்களில் ஜெயமோகன் எங்குமே முன்னே வந்து நிற்கவில்லை என்பதற்கு அது ஓர் உதாரணம். பள்ளித் தோழர் மருத்துவர் சிவராமன் வந்திருந்தார். அவர் எழுதிய ‘ஆறாம் திணை’ புத்தகத்தை அவரே படித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. என்னை விட புஷ்டியாக இருந்தார். எழுத்தாளர் இரா. முருகன், தோழர் பவா செல்லத்துரை, எம். கோபாலகிருஷ்ணன், மோகன ரங்கன், ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி, அன்புத்தம்பி ராஜகோபால் போன்றோரைப் பார்க்க முடிந்தது. தம்பி கடலூர் சீனு ஓடி வந்து கட்டியணைத்தான். அரங்கசாமியைப் போலவே அவனும் என் தாடியைத் தடவிக் கொஞ்சினான். ‘உன்னை கேலி பண்ணி ஒரு கட்டுரை எழுதணும்டே’ என்றேன். ‘அதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். எழுதுங்கண்ணே’ என்றான் கடலூரை தன் பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் திருநவேலி சீனு.
மதியம் மரபின் மைந்தன் வீட்டுக்குச் சென்றேன். அதற்கு முன்பாக மரபின் மைந்தன் அவர் மனைவியிடம் கைபேசியில் சொன்னார். ‘சுகா வர்றாரு. வீட்லதானே இருக்கே? வழக்கம் போல அவர் நம்மளயெல்லாம் பாக்க வரல’. முத்தையா தம்பதியருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள். வீட்டிலேயே இருக்கும் ஒரு மகனான ‘பக்’ வகை நாய்க்குட்டி. இந்த முறை சென்னையிலிருந்து வந்திருக்கும் அவரது சகோதரர் வீட்டு ‘பீகிள்’ வகை நாய்க்குட்டியும் உடன் இருந்தது. உற்சாகம் கொப்பளிக்க இருவருடனும் விளையாடிக் கொண்டிருந்தேன். வீட்டுக்குள்ளேயே செல்லவில்லை. அதற்கான அவசியமே ஏற்படவில்லை. இரண்டு பயல்களுல் வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நட்பைப் பேணுதல், உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ளுதல், படைப்பாளிகளை மதித்தல் போன்றவற்றை மரபின் மைந்தன் முத்தையாவிடம் கவிமனதுக்காரர்கள் உட்பட எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். கோவையில் நாங்கள் இருந்த மூன்று நாட்களும் அவர் எங்களுடனே இருந்து எங்களை கவனித்துக் கொண்டார். அந்த மூன்று நாட்களும் அவரது தகப்பனாரின் கடைசி நாட்கள் என்பதை அறிந்த நானும், வண்ணதாசன் அண்ணாச்சியும் பதறியபடி சகோதரர் முத்தையாவின் விருந்தோம்பலை மறுத்து மறுத்துத் தோற்றுப் போனோம்.
மாலை விஷ்ணுபுரம் விழா நடைபெறும் அரங்கில் வாசக வெள்ளம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துச் சகோதரர்கள் தங்கள் இல்ல வைபவத்தை நடத்துவது போல வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நண்பர் ஜெயமோகன் அடைந்திருக்கிற, அடையவிருக்கிற புகழெல்லாம் இந்த மனித சம்பாத்தியத்துக்கு முன் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. அத்தனை ஒற்றுமையும், ஒருங்கிணைப்புமான இயக்கம். ஜான் சுந்தர் ‘வண்ண வண்ண லீலி மலர் அன்னை மரி நீயே ஆரோக்கிய தாயே’ பாடினார். சட்டென்று திருநவேலி சாஃப்டர் பள்ளி கோயில்பிள்ளை ஸார்வாள் நினைவுக்கு வந்து சென்றார். அவர் பெடல் ஆர்கனில் அமர்ந்திசைக்க நான் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறேன். சாத்தான்குளம் தம்பி செல்வேந்திரன் இயக்கத்தில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் பற்றிய டாக்குமெண்டரியிலிருந்து சில காட்சித் துணுக்குகள் திரையிடப்பட்டது. பல்வேறு படைப்பாளிகள் நிறைந்திருந்த சபையில், ஒரு மூத்த எழுத்தாளரை கௌரவிக்கும் நிகழ்ச்சியை, தமிழ் சினிமாவின் ஆடியோ வெளியீட்டு விழா போல செல்வேந்திரன் தொகுத்து வழங்கிய விதத்தில் என் கவனம் கலைந்து, அரங்குக்கு வெளியே சென்றது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் உரைகளை கவனிக்க பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. எப்படியும் காணொளிகளில் அவற்றைக் கேட்டுக் கொள்ளலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். வண்ணதாசன் அண்ணாச்சியின் ஏற்புரையில் மனம் வசப்பட்டது. எழுத்தில் நெகிழ வைப்பவர், பேச்சில் உருக வைத்தார். நிரம்பி வழிந்த அரங்கத்தில் பேரமைதி நிலவியது.
வண்ணதாசனின் கதைகளில் எனக்குப் பிடித்த கதைகளான ‘போய்க்கொண்டிருப்பவள், நடுகை, ஈரம்’ போன்ற கதைகளிலிருந்து சில குறிப்பிட்ட வரிகளை அண்ணாச்சியின் குரலிலேயே கேட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அவரது உரையை, அவரே குறிப்பிட்ட அவரது கவிதை வரி நிறைத்துக் கொண்டதாகத் தோன்றியது. ‘நின்று கொண்டிருப்பதை விட சென்று கொண்டிருக்கலாம்’. இந்தக் கவிதை சொல்லாமல் சொல்லும் செய்தி எல்லோருக்குமானது என்று தோன்றியது. அவருக்கு சாகித்ய அகாதமி விருது பெற்று தந்திருக்கும் ‘ஒரு சிறு இசை’ தொகுப்பில் உள்ள ‘நிரப்புதல்’ சிறுகதையில்ஒரு வரி வரும். ‘குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச்சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது’. அன்றைய ஏற்புரையில் அண்ணாச்சி அப்படித்தான் அரூபச் சித்திரங்களாக வரைந்துத் தள்ளினார்.
விழா முடிந்ததும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவரும் அண்ணாச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எழுத்தாளரும், நண்பருமான எஸ்.கே.பி. கருணாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து கவிஞர் இசை என் தோள்களைத் தொட்டு ஆசீர்வதித்தார். ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே ‘எப்பண்ணா வரீங்க?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார், கவிஞர் இசை. சனிக்கிழமை இருகூரிலிருந்து கோவை வந்ததும் ஃபோன் பண்ணி விட்டு நேரில் வந்து சில மணித்துளிகள் மட்டுமே உடனிருந்தார். அதன் பிறகு கோவையில் இருந்த இரண்டு நாட்களும் முழுக்க முழுக்க தனது அடுத்த படைப்புக்கான சிந்தனையில் இருந்ததாக அறிந்தேன். சொந்த தாய்மாமனை விட என் மீது அதிகம் பாசத்தைக் காட்டும் கலாப்ரியா மாமாவிடம் ஓரிரு வார்த்தைகள்தான் பேச முடிந்தது.
மறுநாள் காலை மீண்டும் மரபின் மைந்தனும், நானும் நடைப்பயிற்சி கிளம்ப அண்ணாச்சியும் எங்களுடன் இணைந்து கொண்டார். பேசிக் கொண்டே நடந்து சென்று அன்னபூர்ணாவில் ஒரு காபி அருந்திவிட்டுத் திரும்பும் போது மரபின் மைந்தனின் அலுவலகக் காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன். முந்தைய நாள் கொஞ்சிய கோல்டன் ரெட்ரைவர் என்னைக் கண்டதும் தவழ்ந்து வந்தான். அந்த வீட்டின் உரிமையாளர்களான தாயும், மகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ‘வந்து ரெண்டு மாசமாகுதுங்க. எங்கக்கிட்டக் கூட இத்தன பாசம் காமிச்சதிலீங்க’ என்றனர். ‘நேத்து காலைல வந்தே! அதுக்கப்புறம் எங்கே போனே?’ என்று அந்த நாய்க்குட்டி என்னிடம் பேசியது என்பதை என்னை விடவும் நாய்க்கோட்டியான நண்பர் கோலப்பன் மட்டும்தான் இந்த உலகில் நம்புவார். அந்தக் குழந்தையிடம் பிரியாவிடை பெற்றேன். வாசலுக்கு வரும் போது அந்தப் பெண்மணி சொன்னார். ‘வேணா உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க!’. இன்னொரு முறை அவர் சொல்லியிருந்தால் தூக்கிக் கொண்டு வந்திருப்பேன்.
இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது காரில் அனுப்பி வைத்தார் சகோதரர் முத்தையா. விமான நிலைய வாசலில் ஜான் சுந்தரிடம் விடைபெறும் போது இருவருமே ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. விமானம் கிளம்பும் போது வழக்கமாகச் சொல்லும் சண்முக கவசத்தைச் சொல்லவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. கோல்டன் ரெட்ரைவர், பக் மற்றும் பீகிள் குட்டிகள், ‘முழுமதி அவளது முகமாகும்’ பாடிய ரோஜா பாப்பா, தகப்பனார் மரணப்படுக்கையில் இருக்கும் போது எங்களுடனே இருந்து உபசரித்த மரபின் மைந்தன், உங்களுக்குத்தாண்ணா நன்றி சொல்லணும் என்று ஃபோனில் ஒலித்த அரங்கசாமியின் குரல், ஏன்ணே அழுதீங்க? காபி சாப்பிடுங்க’ என்ற ஹெமிலா சாம்ஸன் என மனதுக்குள் குரல்களும், முகங்களுமாகச் சுழன்றன. கண்ணீர் பெருகியது.
அழுகையை அடக்கவோ, கண்ணீரைத் துடைக்கவோ தோன்றவில்லை. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த, நெற்றியில் திருமண் தரித்திருந்த பெரியவர், என் கைகளைப் பற்றி ‘என்ன ஸார்! வேண்டியவா யாருக்காவது ஒடம்புக்கு முடியலியா? ஏதாவது சாப்பிடறேளா?’ என்று கேட்க, கண்ணீருடன் தலையை மட்டும் அசைத்தேன். என் பதிலை எதிர்பாராமல், விமான பணிப்பெண்ணை அழைத்து, ‘இவருக்கு ஏதாவது குடிக்கக் குடுங்கோ’ என்றார். அவரை வண்ணதாசனின் கதைகளில் பார்த்திருக்கிறேன்.
வேணுவனம்– சுகா