அவனும் நானும்-அத்தியாயம்-03

....அவனும் நானும்.....

அத்தியாயம் : 03

சத்தியா வைத்துவிட்டுச் சென்ற ஒப்பந்தப் பத்திரங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தவள்,கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தாள்..

"உள்ளே வரலாமா மேடம்..??அனுமதி கிடைக்குமா...??..."என்றவாறு ஆனந்தான் குறும்புச் சிரிப்போடு கைகளிரண்டையும் மார்பிற்குக் குறுக்கே கட்டியவாறு கதவடியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்...அவன் கேட்ட விதத்தில் அவளையும் சிறு புன்னகை தொற்றிக் கொள்ள..அதே முகமலர்ச்சியோடே...

"ஏன் அனுமதி இல்லைன்னு சொன்னா அப்படியே திரும்பிப் போயிடுவியா என்ன...??..."

"நான் உன்னைக் கேட்டா,நீ எனக்கே அதைத் திருப்பி விடுறியா..??.."என்றவாறே அவளிற்கு எதிர் கதிரையில் வந்து அமர்ந்து கொண்டவன்,

"நீயே என்னைத் துரத்தி அடிச்சாலும்...இந்த ஜென்மத்தில் நான் உன்னைவிட்டு எங்கேயுமே போறாதாயில்லை...உன் பக்கத்திலேயே எப்போதும் இருந்து உனக்கு இம்சை கொடுத்திட்டேதான் இருப்பேன்..."

அவன் அதைக் கேலியாகச் சொன்னாலும்..அவன் சொன்னதில் இருக்கும் உண்மையினை அவள் மனம் மட்டுமே அறியும்...சிறுவயதிலிருந்தே இருவரும் நண்பர்கள் என்றாலும்..கடந்த ஐந்து வருடங்களில் அவன் அவளிற்கு இன்னும் நெருக்கமாகிக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்...எந்த சந்தர்ப்பத்திலுமேயே அவளை விட்டுக் கொடுக்காத அவனின் மேலும்,அவன் நட்பின் மேலும் என்றுமே அவளிற்குத் தனி மரியாதையுண்டு...

"சரி சரி சினிமா வசனம் பேசினதெல்லாம் போதும்...அன்ட்றா கம்பனியோட விளம்பரம் எந்த லெவல்ல இருக்கு...??.."

"இப்போ எடிட்டிங் வேலை போயிட்டிருக்குடி...இன்னும் இரண்டு நாளில் விளம்பரம் முழுமையாத் தயாராகிடும்...நீ எடிட்டிங்ல ஏதாச்சும் மாத்தனும்னா இன்னைக்கே பார்த்துச் சொல்லிடு..."

"ம்ம் சரிடா...அப்புறம் ஈவ்னிங் அண்ணாவை ரிசீவ் பண்ண நீயும் வாறாய்தானே..??..."

"நான் வராமலா...அவனைப் பார்த்தே இரண்டு வருசமாச்சு...சிங்கப்பூர் ப்ரொஜெக்ட்னு போனவன்தான்..இப்பயாச்சும் அவனுக்கு திரும்பி வரனும்னு தோனிச்சே..எது எப்படி இருந்தாலும் அவன் ஆசைப்பட்ட மாதிரியே சொந்தமாக் கட்டுமானக் கம்பனியையும் ஆரம்பிச்சிட்டான்...அதுவரையிலும் ரொம்ப சந்தோசம்.."

"உண்மைதான்டா...இப்போ மட்டும் அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தா அவனோட இந்த வளர்ச்சியைப் பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்க.."

"உன்னோட வளர்ச்சியைப் பார்த்துக் கூட.."

அவன் சொன்னதைக் கேட்டு விரக்தியாய் ஓர் புன்னகையை உதிர்த்தவள்,

"அவங்க மட்டும் இருந்திருந்தால் நான் இந்தத் துறைக்குள் காலடி எடுத்தே வைத்திருக்க மாட்டேன் ஆனந்...என்னுடைய உலகம் வேற மாதிரி இருந்திருக்கும்...ஒரு விநாடியில் என் வாழ்க்கையே மொத்தமாய் மாறிப் போச்சு..."

அவளது குரலில் தொனித்த துயரத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது...ஒரு காலத்தில் புன்னகையோடே வலம் வருபவள்,இப்போதெல்லாம் சிரிப்பினையே மொத்தமாய் தொலைத்திருந்தாள்...அதனால்தான் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவளை அவன் கேலிக்கூத்துகள் காட்டிச் சிரிக்க வைப்பதும்...

அவளது ஓர் கரத்தினை அழுத்தமாக பிடித்துக் கொண்டவன்,

"நம்ம வாழ்க்கை இங்க இப்படித்தான் மாறனும்னு இருந்தா அதை யாராலையுமே மாத்த முடியாது கீர்த்து...வாழ்க்கை நம்மள எந்த பாதையில் அழைச்சிட்டுப் போகுதோ அந்தப் பாதையிலேயே நாமளும் போயிட்டிருக்க வேண்டியதுதான்...நமக்கு கிடைக்காததை நினைச்சு வேதனைப்பட்டுகிட்டு இருக்கிறத விட நமக்கு கிடைச்சதை வைத்து சந்தோசப்பட்டுக்கிறதுதான் சிறந்தது..."என்று சொல்லி நிறுத்தியவன் சிந்தைக்குள் மூழ்க ஆரம்பித்திருந்த அவளின் விழிகளை ஊடுருவியவாறே,

"நான் சொன்னது எல்லாத்துக்குமே பொருந்தும் கீர்த்து..."என்று முடித்தவாறே அங்கிருந்து கிளம்பினான்...

அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிற்கு அவன் எதைச் சொல்கிறானென்று புரியாமலில்லை...ஆனாலும் அவளால் எதையுமே உள்ளத்தைவிட்டு அகற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை...அன்று ஏற்பட்ட ரணத்தின் வடுக்களிற்கு மருந்திட முடியாமல்தானே கடந்த ஐந்து வருடங்களாய் அவள் மனதோடு அவளே போராடிக் கொண்டிருக்கிறாள்...

அலுவலகத்தில் சுழல் நாற்காலியில் தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான் கார்த்திக் கிருஷ்ணன்..காலையில் வீட்டில் நடந்த நிகழ்வுகள் அவனிற்கு மீண்டும் பழையதை நினைவுபடுத்திச் சென்றதில் தலைப்பாரத்தோடு இணைந்து அவனது நெஞ்சமும் வேதனைத்தீயில் தவித்தது...

அப்போது அவனது நினைவுகளைக் கலைப்பது போல் தொலைபேசியின் மணி பெரிதாய் ஒலித்தது...முகப்பில் "ஷ்யாம்"என்ற பெயர் மிளிரவும்,தொலைபேசியை அழுத்திக் காதில் வைத்தவன்,

"ஹலோ சொல்லுடா..."

"எப்படிடா இருக்க...??பார்த்தே ரொம்ப நாளாச்சு...எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் வரவே மாட்டேன் என்குறாய்...கல்லூரி டைம்ல பார்த்த கிருஷ்ணன் இல்லைடா நீ...ஆளே மொத்தமாய் மாறிட்ட..."

"இதைச் சொல்லத்தான் கோல் பண்ணியா...??..."

"இப்போ எதுக்குடா கோபப்படுற...வாற மாசம் நம்ம பசங்க எல்லாம் சேர்ந்து ஒரு சுற்றுலா பிளான் பண்ணியிருக்கிறோம்...அதுக்காச்சும் வருவியா மாட்டியான்னு கேட்கத்தான் கோல் பண்ணேன்...??..."

"நான்தான் என்னை எதுக்குமே கூப்பிடாதன்னு உன்கிட்ட தெளிவா சொல்லியிருக்கேனே...அப்புறமும் ஏன்டா ஒவ்வொரு தடவையும் கோல் பண்ணி இலவசமாவே என்கிட்ட திட்டு வாங்கிட்டிருக்க...??..."

"என்னதான் நீ என்னைத் திட்டினாலும்...நான் உனக்கு கோல் பண்ணி கேட்டிட்டேதான் இருப்பேன்...நீ எங்களை விலக்கி வைச்சாலும்...நாங்க உன்னை விட்டிட மாட்டோம்டா...இன்னும் ஒரு மாதம் அவகாசம் இருக்கு...யோசிச்சு சொல்லு..."என்றவாறே கார்த்திக்கின் பதிலிற்கு காத்திருக்காது அழைப்பினைத் துண்டித்துக் கொண்டான் ஷ்யாம்...

கல்லூரிக் காலத்தில் சுற்றுலா என்றாலே முன்னிற்கு நிற்பவன் அவன்தான்...அதுவும் அவளோடு இணைந்து அவன் சென்ற அந்தச் சுற்றுலாப் பயணத்தை அவனால் என்றுமே மறந்துவிட முடியாது..அந்தச் சுற்றுலாவில்தானே அவன் அவளிடம் மொத்தமாய் வீழ்ந்ததும்...அதை நினைக்கும் பொழுதே அவன் மனதெங்கும் வெறுப்பும் கோபமும் ஒரு சேரப் பரவிக் கொண்டது...

கண்களை மூடிக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்,வேலையில் கவனம் முழுதையும் பதித்துக் கொண்டான்...

விமான நிலையத்திலிருந்து அஸ்வின்னை அழைத்துக் கொண்டு ஆனந்தும் கீர்த்தனாவும் வீட்டை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருந்தனர்...மூவருமே நீண்ட காலத்தின் பின் சந்திக் கொண்டதால் பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம் மறந்து போக மௌனமாகவே சென்று கொண்டிருந்தனர்...அந்த மௌனத்தை முதலில் கலைத்தது அஸ்வின்தான்...

"எப்படிம்மா இருக்க...??..."

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முகம் பார்த்தே உரையாடும் வசதிகள் வந்துவிட்டாலும்,நம் நலன் காக்க நமக்கருகிலேயே ஒருவர் இருக்கிறார் என்ற ஓர் உணர்வு மிகவும் சுகமானது...அண்ணனோடு என்னதான் அவள் தினம் தினம் தொலைபேசி வழியே கதைத்திருந்தாலும்,அருகே அமர்ந்து அவள் தலையினை வருடியவாறே அவன் காட்டிய அந்த நேசம் அவளின் மனதை நெகிழ்ந்திடச் செய்தது...

"எனக்கென்ன அண்ணா,நான் ரொம்ப சூப்பராவே இருக்கேன்...நீ எப்படி இருக்க??...முதல் பார்த்ததுக்கு இப்போ இன்னும் மெலிந்து போய்விட்டாய்...

"அது ஒன்னுமில்லை கீர்த்து...சேர்தானே அங்கே சமையல் எல்லாம்...அதான் எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்ற ரேஞ்சுக்கு வந்திட்டாரு...இல்லையா அஸ்வின்..??.."என்று வண்டியை ஓட்டியவாறே அவனை வம்புக்கிழுத்தான் ஆனந்..

"அது சரி...அப்போ நீங்க மட்டும் என்னவாம் சேர்...நீ கூட போன முறை இருந்ததுக்கு கொஞ்சம் கொஞ்சம் மெலிந்துதான் போனாய்..."

"அதுக்கு காரணம் நான் இல்லைடா...எல்லாம் உன் அருமைத் தங்கச்சிதான்..."

"ஹா..ஹா...அவ என்னடா பண்ணாள்..??.."

"என்ன பண்ணாளா...??..என்ன பண்ணலைன்னு கேளுடா...புதுசு புதுசா சமைக்கிறேன் பேர்வழின்னு என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாடா..."என்று அவன் அவளையும் விட்டுவைக்காமல் வம்பு செய்யவும்,அவனைப் போலியாக முறைத்துப் பார்த்தவள்...

"இனியும் நீங்க நான் சமைக்கிறததான் சாப்பிட்டாகனும் மிஸ்டர் ஆனந்...அதனால ஒழுங்கா சரண்டர் ஆகிடுங்க...இல்லைன்னா காலம் முழுதுக்கும் பட்டினியிருக்க வேண்டியதுதான்..."

அவள் சொன்னதைக் கேட்டதுமே காரை ஓரமாக நிறுத்தியவன்,சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவள் காலில் தடாலென விழுந்தான்...அதைச் சற்றும் எதிர்பார்த்திராதவள்,

"டேய் என்னடா பண்ற...எழுந்திருடா..."

"நீ தானே சொன்ன...ஒழுங்கா சரண்டர் ஆகிடுன்னு...நீ சொன்னமாதிரியே சரண்டர் ஆகிட்டேன்டி..என்னைப் பட்டினி மட்டும் போட்டிடாத..."என்றவாறே அவன் வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் அங்கே பெரியதொரு சிரிப்பலை உருவாகியது...அவளது முகத்தினில் பூத்திருந்த புன்னகையைப் பார்த்த நிறைவோடே மீண்டும் காரினை ஸ்டார்ட் செய்தான் ஆனந்...அவளின் புன்னகையைக் காண்பதற்காகத்தானே அவன் இவ்வளவு அட்டகாசங்களைச் செய்ததும்...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (10-Apr-18, 7:08 pm)
பார்வை : 630

மேலே