செழிப்பாய் கிடைக்கையில் -தமிழ் புத்தாண்டு கவிதை

இத்தரையில் சித்திரைப் பெண்ணாள்
இனிய நாளில் வந்தே பிறந்தாள்
கத்தும்கிளி சோலைகள் யாவும்- முக்
கனிகளில் மாங்கனிகள் குலுங்கிடுமே!
புத்துணர்வும் தான்தேட புதுஇளநீர்
பனம்நுங்கு நீரினையே குடித்திடுவோம்!
சத்தான பானங்கள் நம்மிடையேதான்
செழிப்பாய் கிடைக்கையில் வேறெதற்கு?


பிள்ளைகள் தாத்தா- பாட்டிவீடு செல்ல
பெற்றவரோ கலைகள் கற்றிடவே
பிள்ளைகளை வற்புறுத்தல் ஆகுமோ?
பாண்டியும் கில்லியும் பாதாளகிணற்றில்
பாய்கின்ற நீச்சல்கலையும் காணோமே!
நோய்நொடி அணுகாமல் இருப்ப தற்கே
நாடித்தான் சென்றிடுவோம் கிராமத்திற்கே
நன்மைபல விளைந்திடுமே தன்னாலே

ஓட்டுவீடு மச்சுவீடு மக்கள ளெல்லாம்
ஒற்றுமையாய் திருவிழா காணுகின்றார்
நாட்டுநலம் காப்பதற்காய் ஏரினைப் பூட்டி
நல்தொழில் விவசாயம் செய்வோம் தம்மை
பாட்டுப்பாடி வணங்கிடுவோம் இந் நாளிலே
பண்பாடு பேணுகின்ற கிராமங்கள் தான்
நாட்டுநலம் உயரவே செய்திடு மாமே!
நல்திரு தமிழ்புத்தாண்டில் வாழ்த்திடுவோமே!

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (12-Apr-18, 9:16 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 129

மேலே