பெண்டீரைப் போற்றுவோம்
மங்கையர் இன்றேல் மானுடம் ஏது ?
எங்கும் அதனால் எழுந்திடும் தீது ?
பொங்குமோ வாழ்வில் புதுமைகள் நன்று
தங்குமோ மனதில் தாராளம் ஒன்று !
மகிழ்வின் அலைகளைத் தூண்டுவாள் மங்கை
அகிலமே போற்றிட வைப்பவள் மங்கை
அகிலென மணத்திட செய்பவள் மங்கை
முகிலென அன்பினைப் பொழிபவள் மங்கை
மானிட பெருக்கமே மங்கையின் நெருக்கமே !
தானெனும் ஆணவம் தகர்ப்பவள் மங்கையே !
தேனென வாழ்வைத் தித்திக்க வைத்து
மானென விழியினில் மயக்கமும் தருவாள் !
அன்னையாய் இருந்து ஆக்கம் தந்து
என்றும் காக்கும் தெய்வம் ஆவாள் !
பண்பைக் கலந்து பாலை ஊட்டி
கண்ணை இமைபோல் காப்பவள் அவளே !
சிறுஅடி படினும் துடித்துப் போகும்
ஒருமனம் கொண்ட உலவும் தெய்வம் !
சிறுநடை கண்டு சிலிர்க்கும் உள்ளம்
பெருநடை காண பேரின்பம் கொள்ளும் !
சக்தியும் சிவமும் சரிநிகர் ஆகும்
தக்கவை எல்லாம் தானாய் நிகழும்
பக்குவம் கொண்டு பாதை வகுத்து
எக்குறை வரினும் எளிதினில் செல்லும் !
வீட்டில் அமைதி அன்புடன் விதைத்து
நாட்டையும் காக்கும் நற்பணி செய்வாள்
கூட்டின் புழுவாய் இருந்தவள் மாறி
ஏட்டையும் எளிதாய் ஏற்பவள் ஆனாள் !
முடியா தென்பது மண்ணில் ஏது ?
முடித்தே வென்றாள் விண்ணிலும் இன்று
படியும் எல்லாம் பாதை கொண்டால்
விடியும் பொழுதும் வீணே அல்ல !
தூற்றும் எண்ணம் துடைத்து எறிந்து
மாற்றம் பெருக மண்ணலில் என்றும்
போற்றுவீர் நன்றே மங்கை தம்மை
ஏற்றுவீர் அவரை ஏணியில் என்றும் !