நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை

உழைப்பாய் இளையனே உழைப்பாய் –அதில்
கிடைத்திடும் கூலியால் செழிப்பாய் !
பழிப்பாய் சோம்பலைப் பழிப்பாய் –ஒரு
பிழைப்பா அதுவென ஒழிப்பாய் !

களைப்பை மறந்து உழைப்பாய் –உன்
கவலை யாவையும் தொலைப்பாய்
உழைப்பினால் என்றும் உயர்வாய் –அதை
உள்ளத்தில் உறுதியாய் கொள்வாய் !

வானத்தின் எல்லையை அளப்பாய் –அதை
வசப்பட வைத்திட உழைப்பாய்
மானத்தைப் பெரிதென மதிப்பாய் –அதை
மாண்புடன் பேணிடத் துடிப்பாய் !

மூடத் தனத்தினை ஒழிப்பாய் –முழு
மூச்சுடன் நாட்டுக்காய் உழைப்பாய்
ஓடும் மேகத்தைப் பிடிப்பாய் –ஒரு
ஒழுங்குடன் பொழிந்திட வைப்பாய்.

தன்னலம் ஒன்றையே எண்ணும் –ஒரு
தலைவனே ஆயினும் மறுப்பாய்.
மண்ணைப் பொன்னாய் மாற்றும் –நல்
எண்ணம் இன்றேல் வெறுப்பாய் !

நதிகளைப் பொதுவென ஆக்கும் –நல்
நீதியை என்றுமே மதிப்பாய்
சதியினால் தண்ணியைத் தடுக்கும் –வரும்
சட்டம் என்றால் மிதிப்பாய் !

உழைப்பால் எல்லாம் செழிக்க –வரும்
ஊறுகள் யாவையும் ஒழிப்பாய்
களைப்பை மறந்து களிப்பாய் –நல்
காற்றையும் உலகுக் களிப்பாய் !

தொட்ட இடமெல்லாம் பூக்கும் –அதை
தேக்குஉன் உடலே ஆக்கும் !
முட்டும் துயரத்தை நீக்கும் –மனம்
முடங்கிப் போவதைப் போக்கும் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (13-Apr-18, 9:48 pm)
பார்வை : 55

மேலே