ஆண்மை செத்தது
தொடைதட்டி நடந்த
தொப்பைக் காவல் அதிகாரி
மிகுவேக நடையில் கால்கடுக்க
மேல் அழுத்தும் பாரத்தில்
நெஞ்சு பிசைய
சுமக்க முடியாத சுமையை
சுமந்து திரிகிறார்.
சம்பளப் பணத்தோடும்
அதட்டி உருட்டி
அப்படி இப்படி வாங்கிய
பணத்தில் பெரும்பகுதி
கொடுத்தும், பெண்டாட்டி
கால்காசுக்கு மதிக்கவில்லை.
அவளின்
எத்தனை இரவுகள்
விடியாமல் போயினவோ?
எத்தனை மாலைகள்
ஏங்கித் தவித்தனவோ?
நேர்வழியில் வந்தவனை
ஏன்? நேராய் வந்தாய்
என்றடித்த அடியில்
அதிகாரம் தெறித்தது.
மேலே, மேலே
ஆள்வோரின் குரலுக்கு
அடிபணிந்த போது,
எதுவோ சிரித்தது?
மிருகமாகவும்
பூச்சியாகவும்
வாழ்ந்த வாழ்வில்
ஆண்மை செத்தது.