தென்னையத் தாக்கும் பூச்சிகளும் அதன் கட்டுபபாட்டு முறைகளும்…

தென்னை இந்தியா முழுவதும் பயிரிடப்படும் ஒரு முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் அதன் பயன்கள் கருதியே “கற்பகவிருட்சம்” என்று போற்றப்படுகிறது. இந்தியாவில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தென்னையைச் சார்ந்தே வாழ்கின்றனர். இந்தியாவில் 1.79 மில்லியன் எக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தமிழகம் எக்டருக்கு 15,000 காய்கள் வரை உற்பத்தி செய்து உற்பத்தி திறனில் முதலிடத்தில் உள்ளது. தென்னையில் 800க்கும் அதிகமான பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு, ஈரியோபைட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மட்டுமே தமிழகமெங்கும் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

1.காண்டாமிருக வண்டு தாக்குதலின் அறிகுறிகள்
வண்டுகள் இளம் கன்றுகளையும், வளரும் கன்றுகளையும் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடி மட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதத்தை ஏறபடுத்தும். தாக்கப்பட்ட இலை இணுக்குகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். பொதுவாக காண்டாமிருக வண்டுகள் தாக்கிய குருத்துகளில் கூன் வண்டுகள் முட்டையிட்டு குருத்து பகுதி வழியாக உள் செல்கின்றன. காண்டாமிருக வண்டு சராசரியாக 10சதவீத வரை சேதம் ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.வாழ்க்கைச் சுழற்சி
பெண் காண்டாமிருக வண்டுகள் சராசரியாக 40-60 முட்டைகள் வரை எருக்குழிகள், மக்கிய மரத்துண்டுகளில் முட்டைகள் இடுகின்றன. இவற்றில் இருந்து 10 நாள்கள் கழித்து வெளிவரும் புழுக்கள் 4-5 மாதங்கள் வரை எருக்குழிகளிலேயே வளர்ந்து கூட்டுப் புழு பருவம் அடைகின்றன. 25-30 நாள்கள் வரை கூட்டுப்புழு பருவத்தில் இருந்து பின்னர் வெளிவரும் வண்டுகள், இளந்தென்னைகளின் குருத்து பகுதியைத் தாக்குகின்றன. ஐந்து மாதங்கள் வரை இவ்வண்டுகள் இளங்குருத்துக்களை உண்டு வாழ்கின்றன.
ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்

எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகளை பொறுக்கி அழிக்கவும். எருக்குழியில் வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கவும்.

பேக்குளோவைரஸ் என்ற வைரஸ் நோய் கிருமி (Oryctes baculovirus) தாக்கப்பட்ட வண்டுகள் எக்டர் ஒன்றுக்கு 10-15 என்ற அளவில் மாலை வேளையில் விடவும். சிறிய பாலிதீன் பையில் துவாரங்களிட்டு 10 கிராம் போரேட் குருணை மருந்தை இட்டு மரத்திற்கு 2 பாக்கெட் வீதம் நுனிக்குருத்தைச் சுற்றி வைக்கவும்(அல்லது) மூன்று அந்துருண்டைகளை நடுக்குருத்தைச் சுற்றியுள்ள 3 மட்டை இடுக்குகளில் ஒன்று வீதம் வைக்கவும் (அல்லது) மூன்று அந்துருண்டைகளை தூள் செய்து 100 கிராம் மணலுடன் கலந்து நடுக்குருத்தை சுற்றி வைக்கலாம். கவர்ச்சிப் பொறிகளை (ரைனோலியூர்) இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்தும் அழிக்கலாம். ஆமணக்கு புண்ணாக்கு 1 கிலோவுடன் 5 லிட்டர் தண்ணீர் கலந்த பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் வைத்து வ்ணடுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

2, சிவப்புக் கூன் வண்டு- (Rhynchophorus ferrugineus – ரின்கோபோரஸ் பெர்ருஜினியஸ்)
சிவப்புக்கூன் வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து இலை மட்டைகளும் சரிந்து விடுகின்றன. சிலநேரங்களில் தண்டுப்பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உட்சென்று திசுக்களை உண்டு, பின்னர் ஒரு சிறிய துவாரம் வழியாக கழிவுப் பொருட்களை வெளியே தள்ளுகின்றன. செம்பழுப்பு நிறத்தில் வெளிவரும் கழிவுகள், மிகுந்த துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.வாழ்க்கை சுழற்சி
பெண் கூன் வண்டுகள் சராசரியாக 300 முட்டைகள் வரை மரத்தண்டுகளில் காணப்படும் காயங்களிலோ (அல்லது) காண்டாமிருக வண்டு தாக்கப்பட்ட நடுக்குருத்துகளிலோ இடுகின்றன. இவற்றிலிருந்து மூன்று நாள்களில் வெளிவரும் புழுக்கள் 55-60 நாள்கள் வரை குருத்து பகுதியிலோ, தண்டுக்கு உள்ளிருந்தோ மிருதுவான திசுக்களை உண்டு வாழ்கின்றன. பின்னர் தென்னை நார்களைக் கொண்டு ஒரு கூடு பின்னி அதனுள் கூட்டுப்புழு பருவத்தை 25 நாள் வரை கழிக்கின்றன. பின்னர் வெளிவரும் வண்டுகள் சராசரியாக 2 முதல் 3 மாதங்கள் வரை உயிர் வாழ்கின்றன.

ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்
கூன் வண்டுகள் மரக்காயங்களில் முட்டையிடுவதால், மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்கவும், அவசியம் ஏற்பட்டால் தண்டுப் பகுதியிலிருந்து 3 அடி தள்ளி வெட்டவும். இடி தாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் பகுதியிலிருந்து 3 அடி தள்ளி வெட்டவும். இடி தாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் ஆகியவை கூன் வண்டுகளுக்கு வாழ்விடம், அதனால் அம்மரங்களை அப்புறப்படுத்தி அழிக்கவும். துளைகளின் மூலம் 5 மி.லி. மோனேகுரோட்டோபாஸ் அல்லது டைகுளோர்வாஸ் மருந்தை சம அளவு தண்ணீரில் கலந்து செலுத்தவும். மோனோகுரோட்டோபாஸ் மருந்து 10 மி.லி. + 10 மி.லி. தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தவும். இம்மரங்களில் இருந்து 45 நாட்களுக்கு பிறகே அறுவடை செய்ய வேண்டும். கரும்புச்சாறு இரண்டரை லிட்டருடன் ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் அசிட்டிக் அமிலம் 5 மி.லி.+ நீளவாக்கில் வெட்டப்பட்ட இலைமட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் வைத்து, வண்டுகளை கவர்ந்து அழிக்கவும். இனக்கவர்ச்சிப் பொறிகளை (பெர்ரோலியூர்) 2 எக்டருக்கு 1 என்ற வீதத்தில் வைத்து சிவப்பு கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

3. கருந்தலைப்புழு
கீழ் அடுக்கிலுள்ள இலைமட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தீயினால் கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும். எச்சத்தினுள், புழுக்களோ, கூட்டுப்புழுக்களோ தென்படும். புழுக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை மட்டும் சுரண்டி உண்டு விட்டு நரம்புகளை விட்டுவிடுவதா லஇலைகள் சல்லடை போன்று காணப்படும். கருந்தலைப்புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ஒளி சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதம் வரை விளைச்சல் குறைகின்றது. வெயில்காலங்களில் தாக்குதல் அதிகமாக காணப்படும்.வாழ்க்கைச் சுழற்சி
பெண் அந்துப்பூச்சிகள் சராசரியாக 134-145 முட்டைகள் வரை இலைகளின் அடிப்பரப்பில் இடுகின்றன. மூன்று நாள்களில் வெளிவரும் இளம்புழுக்கள், இலைகளின் பச்சையத்தை மட்டும் சுரண்டி சாப்பிடத் தொடங்குகின்றன. சராசரியாக 30-35 நாள்கள் வரை இலைகளை சுரண்டி வாழும் புழுக்கள் அதன் எச்சங்களை இலைகளின் அடியிலேயே நூலாம் படை போன்று ஒட்ட வைக்கின்றன. பின்னர் 8-10 நாள்கள் வரை கூட்டுப்புழு பருவத்தில் இந்நூலாம் படையினுள்ளேயே கழித்து அந்துப்பூச்சிகளாக வெளிவந்து 7 நாள்கள் வரை உயிர்வாழ்கின்றன.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
மிகவும் பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விடவும். டைக்குளோர்வாஸ் (அல்லது) மாலத் தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து (லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டுத் திரவத்துடன்) ராக்கர் தெளிப்பான் மூலம் பாதிக்கப்பட்ட இலைகளில் படுமாறு தெளிக்கவும். தீவிர தாக்குதலின்போது 10 மி.லி. மோனோகுரோட்டோபாஸ்வுடன் 10 மி.லி. தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தவும். மாலை வேளைகளில் 7 மணி முதல் 11 மணி வரையில் விளக்குப்பொறியை வைத்து அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். கருந்தலைப்புழு தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது ஒட்டுண்ணிகளை (உயிரியல் முறை) தேவையான அளவில் விடவும். பிரக்கானிட் ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு 2100 என்ற விகிதத்தில் (அ) பெத்திலிட் ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு 1400 என்ற விகிதத்தில் விடவும் ஒட்டுண்ணிகளை 21 நாட்கள் இடைவெளியில் 4.5 முறை வரை விடவும்

4. எரியோபைட் சிலந்திப்பூச்சி (Aceria guerreronis – எசரியா குரரோனிஸ்)
இவை 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் தோட்டுக்கடியில் கூட்டமாக சேர்ந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு, மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தட்டுகளை ஏற்படுத்துகின்றன. இத்திட்டுகள் பரப்பளவில் பெரிதாகி காய் முழுவதும் பரவுகின்றன. இதனால் குரும்பையின் அளவு சிறிதாகின்றது. முற்றிய காய்கறில் இத்திடுகள் நீள்வாக்கில் வெடிப்புகளாகக் காணப்படும். இச்சிலந்தியால் தமிழகத்தில் 20-30 வரை சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது.வாழ்க்கைச் சுழற்சி
பெண் சிலந்திகள் சராசரியாக 50-80 முட்டைகள் வரை இடுகின்றன. மூன்று நாட்களில் வெளிவரும் புழுக்கள் 7 முதல் 10 நாட்கள் வரை சாற்றை உறிஞ்சி முழு வளர்ச்சியடைகின்றன. சராசரியாக 11-12 நாட்களில் ஒரு தலைமுறை முடிந்துவிடும். இச்சிலந்திகள், எண்ணிக்கை அதிகரிக்கும்போது, குரும்பையிலுள்ள சாறு வற்றிவிடும் போதும் அடுத்தடுத்த குரும்பைகளை தாக்குகின்றன சரியான உரநீர் நிர்வாகம் செய்வதன் மூலம் மட்டுமே ஈரியோபையிட் சிலந்தியின் தாக்குதலை பெருமளவு குறைக்க முடியும்.

ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்
இந்நோயால் தாக்கப்பட்ட மரங்களுக்கு கீழ்க்கண்டவாறு மரம் ஒன்றுக்கு வருடம் ஒரு முறை உரமிடல் வேண்டும்.

உரம் தேவையான அளவு (கிலோவில்) ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு
யூரியா 1.3
சூப்பர் பாஸ்பேட் 2.0
பொட்டாஸ் 3.5
வேப்பம் புண்ணாக்கு 5.0
ஜிப்சம் 1.0
மக்னீசியம் சல்பேட் 0.5
போராக்ஸ் 50 கிராம்
மக்கிய தொழு உரம் 50 கிராம்

மேலும் தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் 1% மருந்து 5மி.லி (அல்லது)வேப்பெண்ணெய் 30 மி.லி. மருந்தினை லிட்டருக்கு ஒரு மி.லி. ஒட்டுததிரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் தெளிக்கலாம். குறிப்பாக 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளித்தால் போதுமானது. அசாடிராக்டின் 1% (10 மி.லி) மருந்தினை 10 மி.லி. தண்ணீருடன் கலந்து வேர் மூலம் செலுத்தவும்.

(வருடத்திற்கு மூன் றுமுறை) இரசாயன பூச்சிக்கொல்லிகளில் (டிரைய சோபாஸ் – 5 மி.லி லிட்டர்) அல்லது புரபனோபாஸ் – 5 மி.லி. லிட்டர்) 2 முதல் 6 மாத குரும்பைகளில் நன்கு படுமாறு ஒட்டுத்திரவத்துடன் கலந்து ராக்கர் தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும். மோனோகுரோட்டோபஸ் மருந்தை 10 மி.லி.வுடன் 10 மி.லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்தவும். இம்மரங்களில் இருந்து 45 நாட்கள் கழித்த பிறகே காய்களைப் பறிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்திற்கு 200 மில்லி என்ற அளவில் ஆறு மாத இடைவெளியில் வருடத்திற்கு 2 முறை வேர் மூலம் செலுத்தவும்.

முனைவர் அ.சஞ்சீவி குமார்
வேளாண் பூச்சியியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகக்ழகம்
கோயம்புத்தூர் – 641 003

எழுதியவர் : (17-Apr-18, 8:35 pm)
பார்வை : 39

மேலே