அவனும் நானும்-அத்தியாயம்-04

....அவனும் நானும்.....

அத்தியாயம் : 04

அரசினால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்ற உயரிய விருதுகளில் ஒன்றான "சாதனை மகுடம்" விருது வழங்கல் நிகழ்வு அந்த மிகப்பெரிய அரங்கினுள் மிகவும் பிரம்மாண்டமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது...

இன,மத,மொழி வேறுபாடுகளின்றி திறமைக்கான அங்கீகாரமாய் மட்டுமாகவே ஒவ்வொரு துறைகளிலும் சாதித்துக் காட்டியவர்களுக்கு அங்கே விருதுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன..விருதுகள் என்பது நம் கடின உழைப்புக்கும் முயற்சிக்குமான அடையாளம் என்பதை விடவும்..அவை நமக்கான ஓர் அங்கீகாரம் என்பதே மிகச் சரியானதாய் இருக்கும்...அப்படியானதொரு நிகழ்வுதான் அங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது...

ஒவ்வொரு துறைகளிலும் பிரகாசித்தவர்களின் வரிசையில் விளம்பரத் துறையினுள் தனியொரு பெண்ணாக சாதித்துக் காட்டிய கீர்த்தனா அந்த வருடத்திற்கான "பெண் சாதனையாளர்"விருதினைப் பெற்றுக் கொள்வதற்காய் ஆனந்தோடு இணைந்து மேடையேறினாள்...அனைவரதும் கைதட்டல்கள் நடுவில் சாதிக்கத் துடிக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாய் அந்தத் தருணத்தினில் மேடையில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...

"இந்த வருடத்திற்கான பெண் சாதனையாளர் விருதினை வென்றெடுத்ததிற்கு முதலில் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..இந்த விருது தொடர்பாக ஓர் சில வார்த்தைகள் எங்களுக்காய்.."

"அனைவருக்கும் வணக்கம்...முதற்கணம் இந்த விருதிற்காய் என்னைத் தேர்வு செய்த குழுவினருக்கும்,இவ்வாறாக வளர்ந்து வரும் ஒவ்வொரு சாதனையாளர்களுக்கும் வருடா வருடம் ஓர் அங்கீகாரம் வழங்கிக் கௌரவிக்கின்ற நம் அரசிற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...உண்மையிலேயே இந்த விருதினை என்னுடைய கரங்களில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது.."

"ஒவ்வொரு ஆணினுடைய வெற்றிக்குப்
பின்னாலும் ஓர் பெண் இருப்பதாகச் சொல்வார்கள்...ஆனால் என் வாழ்க்கையில் அது தலைகீழாகியுள்ளது..ஆம் என்னுடைய இந்த வெற்றிகளுக்கெல்லாம் பின்னே என் நம்பிக்கையாய் என் துணையாய் நிற்பது ஓர் ஆண்...அன்றும் இன்றும் அவன் மட்டுமில்லையென்றால் இன்று இந்த விருது எனக்குச் சாத்தியமாகியிருக்காது என்பதே உண்மை..."

"எட்டாக்கனியாக இருந்த இலக்குகளைக் கூட எட்டிப்பிடித்திட எனக்கு அனைத்துவகையிலும் உறுதுணையாகவிருந்த அந்த ஆண் வேறுயாருமில்லை...என் அருகிலேயே நின்று கொண்டிருக்கும் என் உயிர்த் தோழன் ஆனந்தான்"என்றவாறே அருகில் நின்றவனின் கரங்களைப் பிடித்துக் கொண்டவள்,

"..இந்த விருது என்னுடைய கரங்களில இருப்பதை விடவும் அவருடைய கரங்களில் இருப்பதுதான் மிகவும் சரியானது..."என்று கூறி அவனைப் புன்னகையோடு நோக்கியவாறே, அவனது கரங்களுக்குள் அந்த விருதினை ஒப்படைத்துக் கொண்டாள்...

அதுவரை நேரமும் அவளின் வார்த்தைகளைக் கேட்டு அவள் அருகே நெகிழ்ந்து போய் நின்று கொண்டிருந்தவன்,விருதினைக் கைகளில் ஏந்திக் கொண்ட அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் வாயடைத்துப்போய் நின்றான்...அவர்களுக்கிடையில் நடந்த அந்த உணர்வுபூர்வமான காட்சியினை குழுமியிருந்த அனைவருமே புன்னகையோடும்,நெகிழ்ச்சியோடும் நோக்கிக் கொண்டிருக்க..இரு விழிகள் மட்டும் ஏளனத்தோடும் குரோதத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தன...

விழா இனிதே முடிந்து இருவரும் காரினில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்...எப்போதுமே ஏதாவது பேசிக் கொண்டே வரும் ஆனந் கூட அன்று மனது முழுதும் பரவிக் கிடந்த மகிழ்ச்சியில் மௌனமாகவே வண்டியினை ஓட்டிக் கொண்டிருந்தான்...அவனை அவள் மேடையேறுகையிலேயே உடன் அழைத்துச் சென்றிருந்தாலும்,மேடையில் வைத்து அவனை இவ்வாறாகப் பெருமைப்படுத்துவாள் என்று அவன் துளியளவும் நினைத்திருக்கவில்லை..

"தாங்ஸ் கீர்த்து.."

தீடிரென்று அவன் நன்றி சொல்லவும்,எதற்கென்று புரியாமல் அவனைத் திரும்பிப் பார்த்தவள்..

"எதுக்கு தாங்ஸ்..??.."

"எல்லாத்துக்குமே.."என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாகச் சொன்னான் அவன்..

"இன்னைக்கு மேடையில நீ அப்படியெல்லாம் சொல்வேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை கீர்த்து....எனக்கே எனக்காய் விருது கிடைச்சிருந்தா கூட நான் இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பேனான்னு தெரியல...ஆனால் இப்போ அவ்வளவு சந்தோசமாய் இருக்குடி..."

"இது உனக்கான விருது ஆனந்...அன்னைக்கு எல்லாத்தையுமே இழந்து நான் தனிமரமாய் நின்னப்போ,நீ மட்டும் இல்லைன்னா நம்ம விளம்பர நிறுவனம் இந்தளவு தூரத்திற்கு வளர்ச்சி கண்டிருக்குமான்னு தெரியல...என் கையைப் பிடிச்சு எனக்கு ஒரு வழிகாட்டியாய் நீ எப்பவுமே இருந்திருக்கடா...உன்னோட துணை மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு பூச்சியமாத்தான் இருந்திருப்பேன்...இந்த விருதில எனக்கு எவ்வளவு உரிமையிருக்கோ அதைவிடவும் அதிகமாய் உனக்கு உரிமை இருக்கு..."

"நீ வேற நான் வேறன்னு எப்பவுமே நான் நினைச்சதில்லை...எல்லாத்தையுமே நாம ஒன்னா இருந்துதான் சாதிச்சிருக்கோம்...இனிமேலும் அப்படித்தான்...அதனால என்னைக்குமே உன்னை என்கிட்டயிருந்து பிரிச்சுப் பார்க்காத ஆனந்...புரிஞ்சுதா..??..."என்று கேட்டவளிற்கு தலையை மேலும் கீழுமாய் ஆட்டி தனக்குப் புரிந்தது என்பதை நிரூபித்துக் கொண்டான் அவன்...

அன்று அவனிற்கு அவள் அதிர்ச்சிகளுக்கு மேல் அதிர்ச்சிகளைப் பரிசளித்துக் கொண்டிருந்தததில் அவனது வார்த்தைகள் யாவும் வெளிவர முடியாமல் தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டிருந்தன...இப்படியெல்லாம் இதற்கு முன்பு அவள் அவனிடம் கூறியதில்லை...ஏனென்று தெரியாமலேயே அந்த ஒரு நொடியில் ஆனந்தின் பார்வைக்கு அவள் புதிதாகத் தெரிந்தாள்...

மணி பதினொன்றைக் கடந்தும் கார்த்திக் வீட்டிற்கு வராததால் ராமும் சீதாவும் வாசலிலேயே அமர்ந்து அவனது வருகைக்காய் காத்துக் கொண்டிருந்தார்கள்...எந்த வேலையாக இருந்தாலுமே அவன் பத்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவது வழக்கம்...அன்று வெகு நேரமாகியும் அவன் வராததால் சீதாவின் மனதை பதற்றம் சூழ்ந்து கொண்டது...

"சீதா நீ போய் தூங்கும்மா...ஏற்கனவே உன் உடம்பும் மனசும் ரொம்ப பலவீனமாய் இருக்கு...இதில இவ்வளவு நேரம் முழிச்சிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது..??.."

"அவன் வந்ததும் போய் தூங்கிக்கிறேனே..."

"அவன் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியல...அவன் வரும் வரைக்கும் நான் முழிச்சிட்டு இருக்கேன்...நீ போய் தூங்கு போ..."

"அவன் சாப்பிட்டானா இல்லையான்னு கூடத் தெரியல...அவன் வந்ததுமே நான் போய் தூங்கிக்கிறேன்..."

இதற்குமேலும் அவரிடம் மல்லுக்கட்ட விரும்பாதவராய் அத்துடனேயே அந்தப் பேச்சை முடித்துக் கொண்டார் அவர்..

"என்னவோ செய்...நீ தான் அவனுக்காக பார்க்குற...அவன் உன்னைப்பத்தி கொஞ்சமாச்சும் கவலைப்படுறானா பாரு.."

ஆனால் அதை அவர் சொல்லி முடிக்கும் போதே கார்த்திக்கின் கார் உள் நுழைந்திருந்தது...அதைக் கண்ட பின்னர்தான் சீதாவின் மனமும் சற்றே அமைதியடைந்தது என்று சொல்ல வேண்டும்...

வாசலிலேயே காத்திருந்தவர்களைக் கண்டதும் அவனுக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது...அதுவும் சீதாவின் உடல்நிலை தொடர்பில் அவன் நன்கே அறிவான்...அப்படியிருந்தும் அவர்கள் தனக்காக இவ்வளவு நேரமாய் முழித்திருந்திருக்கிறார்கள் என்பது அவன் மனதைக் கொஞ்சம் ஆட்டிப் பார்த்தாலும்,எந்த உணர்வுகளையுமே முகத்தினில் பிரதிபலித்திடாது பார்த்துக் கொண்டவன்,வீட்டினுள் நுழைந்து கொண்டான்...

அவன் உள்ளே செல்வதைக் கண்டதுமே அவன் சாப்பிட்டுவிட்டானா என்பதனை அறிந்து கொள்வதற்காய் தன் கணவனைத் தூது அனுப்பினார் சீதா..

"கிருஷ்ணா சாப்பிட்டியாபா..??.."

"நான் சாப்பிட்டேன்...நீங்க இரண்டுபேரும் ஏன் எனக்காக காத்திட்டிருந்தீங்க...நான் என்ன சின்னப்பிள்ளையா தொலைஞ்சு போக..."

"இல்லைபா...எப்பவுமே சீக்கிரமாவே வந்திடுவாய்...இன்னைக்கு கொஞ்சம் தாமதமானதில பயந்திட்டோம்...எத்தனை வயசானாலும் பெத்தவங்களுக்கு பிள்ளைங்க எப்பவுமே குழந்தைதான்பா..."என்று கூறி முடித்தவர்,அதற்கு மேலும் அங்கே நிற்காமல் சீதாவையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்...

தான் எவ்வளவுதான் உதாசீனமாகப் பேசினாலும்,அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்கள் அவன் மேல் காட்டிடும் நேசத்தில் அவனின் உள்ளம் கூடப் பல தடவைகளில் கலங்கத்தான் செய்தது...ஆனாலும் அவனால் அவனை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை..அனைத்திற்குமே காரணம் அவள் ஒருத்திதான் என்று நினைக்கும் போதே அவன் மனம் மீண்டும் கல்லாய் இறுகிக் கொண்டது...

வாழ்க்கை எப்போதுமே நமக்காக பல கேள்விகளை விதைத்து வைத்திருக்கும்...ஆனால் அதற்கான விடைகள் எங்கெங்கே முளைத்திருக்கின்றது என்பதைக் கண்டறிவதுதான் கடினமானதொன்று...அதுபோல்தான் அவனது வாழ்க்கையும் விடைகள் இல்லாத வினாக்களோடு மட்டுமாகவே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது....


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (18-Apr-18, 10:19 pm)
பார்வை : 597

மேலே