எல்லாம் அதனுள் அடங்கிப்போயிற்று

அன்பை மதியாது அகந்தையில் வாழும் கடவுளை இழுத்துவாருங்கள் என்றார் சாத்தான்.

இழுத்துவரவே அருகே நெருங்கிட மறைந்து கொண்டான் கடவுள்.

எங்கே மறைந்தான்?
எங்கே அவன்?
பிடியுங்கள் என்று எங்கும் ஒரே கூச்சல்...

சாத்தான் மட்டும் அமைதியாகப் புன்னகைத்திருந்தான்.
ஏனப்பா புன்னகை சிந்துகிறாய்?
என்றே சிற்றெறும்பு கேட்க சாத்தான் சொல்வான் பயங்கொண்டு ஓடியே விட்டான்.
இனி அவனைத் தேடிப்பயனில்லை என்றே...

ஏன் அவன் உனக்கு பயந்தோடினான்?
காலப் போக்கில் அன்பையும் கருணையையும் இழந்த அவன் சாத்தானாகவும்,
அன்பும் கருணையும் கொண்ட சாத்தான் நான் கடவுளாகவும் மாற்றமுற வழி செய்தது இயற்கை.

அப்போது இனி கடவுள் நானல்ல!
அவனா?
அவனும் அல்ல!
அப்போ யார் கடவுள்?
அன்பே கடவுள்...

மறுக்கா சொல்லு.
எத்தனை முறை சொல்லினும் அன்பே கடவுள்...

அடச் சீ சாத்தானே அப்பாலே போ.
மனித உணர்ச்சியான அன்பும் எங்கள் கடவுளும் ஒன்றா?

மனித உணர்ச்சியா அன்பு?

எடுங்கள் அந்த வாளை சாத்தானின் தலையை சீவி விடுகிறேன்.

ஹாஹா, தேவாலயம் கட்டிச் சம்பாதிக்கும் மனிதப்பூச்சிகளென்று என்னை நினைத்தாயா?
நீ நினைத்ததும் என் தலையைச் சீவுவதற்கு,

ஏமாற்றுகின்ற அனைத்து அன்பில்லா செயல்களையும் செய்துவிட்டு கடவுள் உங்கள் பக்கம் என்கிறீர்களா?

அதையும் பார்த்துவிடலாம்.

ஏய்! சாத்தானே அப்பாலே போ.
என்றே புனித நீரெடுத்தே தெளிக்க, கோர ரூபம் நீங்கி
தேவ தூதன் தென்பட்டான்.

ஆஹா! கடவுளடிமை சாத்தான் மீண்டான் என்றிட, இல்லை அது சாத்தானின் மாயை என்றே எச்சரித்த கூட்டம் நெருப்பிலே தூக்கி எரிந்தது.

நெருப்போ சாத்தானை அடையாளம் கண்டு கொண்டது.
எரிக்கவே இல்லை.
விழுந்தவாறு எழுந்தே வந்தான்.

நீரிலே தூக்கிப் போட்டார்கள்.
எழுந்தே நீர் மேலே நடந்தான்.
எள்ளளவு ஏற்பில்லாதோர்,
தனது தவறை ஒப்புக் கொள்ளாதோர் சாத்தானையே அழிக்க முற்பட்டனர்.

முயற்சிகள் பலனளிக்கவே இல்லை.
ஆத்மா உருவாய் இதயத்தில் வீற்றிருந்த கடவுள் சொன்னார் நாம் இங்கிருந்து செல்வோம் என்று...

சாத்தானும் அவ்விடம் விட்டே நகர, நெருப்பும், நீரும், காற்றும் அவ்விடத்தைத் தாக்கின.
நிலம் பிளவுற்று எல்லாம் அதனுள் அடங்கிப்போயிற்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Apr-18, 2:44 pm)
பார்வை : 793

மேலே