துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ - தேஷ்

பாவேந்தர் பாரதிதாசன் பாடி, தண்டபாணி தேசிகர் இசையமைத்து ஓர் இரவு திரைப்படத்தில் நாகேஸ்வர ராவ் - லலிதா நடித்து தேஷ் ராகத்தில் M.S.ராஜேஸ்வரி, வர்மா அவர்களால் பாடப்பட்ட ஒரு அருமையான பாடல்.'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ'.

பெற்றோர் ஆவல்

பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த இசைப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? (துன்பம்)

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா? (துன்பம்)

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? (துன்பம்)

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா? (துன்பம்)

(வன்பு - வலிமை; அன்றை - அந்நாள்; தமிழ்க்கூத்து - நாடகத் தமிழ்)

இந்தப் பாடல் 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலத்தில் ‘யாழ்’ என்னும் இசைக் கருவி பயன்பாட்டில் இல்லை. யாழில் இருந்து வளர்ச்சி பெற்ற வீணை என்னும் இசைக் கருவியே பயன்படுத்தப்பட்டது, எனினும் இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘வீணை’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சங்க காலத்திலே தமிழர் பயன்படுத்திய ‘யாழ்’ என்னும் இசைக் கருவியையே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்கால நாட்டியத்தைக் குறிப்பிடாமல் ‘அன்றை நற்றமிழ்க் கூத்து’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

அகம், புறம் என்று வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்து அறிந்தவர்கள் தமிழர்கள். அதைச் சங்ககால நூலின் வழியில் புரிய வைக்குமாறு பெற்றோர் கேட்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார்.

பாரதிதாசனுக்குக் கலை என்றால் பிற கலப்பு இல்லாத தமிழ்க் கலை தான் மகிழ்ச்சியைத் தரும்; இசை என்றால் தமிழ் இசைதான் மகிழ்ச்சியைத் தரும்; மொழி என்றால் தமிழ் மொழி தான் மகிழ்ச்சியைத் தரும். இவற்றை இந்தப் பாடலின் அடிப்படையாய் அமைத்து அவர் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.

உதவி: வலைத்தளம்

யு ட்யூபில் 'துன்பம் நேர்கையில்' என்று பதிந்து, திரைப்படப் பாடலையும், மற்றும் பல இசைக் கலைஞர்கள் பாடுவதையும் கேட்டு மகிசாலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Apr-18, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 406

மேலே