ரயில் பயணம்
ரயில் பயணம் - வாழ்வில் அனைவருக்கும் ஒரு முறையேனும் வாய்த்திருக்கும். கிராமத்திலிருந்து நகரத்தில் பிழைப்பு தேடி வந்திருக்கும் எனக்கோ அது என்னை உறவுகளுடன் இணைக்கும் பாலம். ஒவ்வொரு முறை பயணம் செய்கையிலும் புதிது புதிதாய் கற்பித்தபடி இருக்கும் இன்னொரு பள்ளி. எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள், எத்தனையெத்தனை நிகழ்வுகள்? புன்னகை தொலைத்து நிற்கும் முகங்கள்.. அகம் மறைத்து புறம் மட்டும் பேசும் உதடுகள்.. 6 ஆண்டுகள் பயணித்ததில் அறிந்து கொண்டது ஒன்று தான், குழந்தைகள் மட்டுமே அகமும் முகமும் மலர்ந்து சிரிக்கின்றனர்! எதிர் பார்க்க முடியாத வழிகளில் எல்லாம் அன்பு செலுத்த அவர்களால் மட்டுமே முடிகிறது. திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் குழந்தைகளின் குறும்புத்தன்மையை குறைத்து விட்டதாகத் தோன்றுகிறது. செல்லிட பேசிகளில் மூழ்கியபடியே பெரும்பகுதி பயணம் முடிந்து விடுகிறது பல குழந்தைகளுக்கு. எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை? மனம் விட்டு பேச இந்த தொலைதூரப் பயணங்கள் உதவும் அல்லவா? பேச்சிழந்ததால் தான் பெருகிப் போகின்றன தவறுகள். ஏழு தலைமுறை தெரிந்திருக்கும் முன்பெல்லாம். முப்பாட்டன் வரை மட்டுமே எனக்குத் தெரியும் .இப்போதுள்ள குழந்தைகளுக்கு தாத்தனின் கதைகள் கூட தெரிவதில்லை. ஏன் இந்த இடைவெளி? எதை இழந்து எதை அடையப் போகிறோம் நாம்? தினசரி வாழ்க்கையில் தான் பேச நேரம் இருப்பதில்லை. கிடைக்கும் நேரத்தையேனும் பயன் படுத்துங்களேன். குழந்தைகள் கேட்டதையே பேசுகின்றனர், பார்ப்பதையே பழகுகின்றனர். வரும் சந்ததியை வளமானதாக்க முயல்வோம்.. ( இன்றைய பயணத்தில் நான் என்ன செய்ய போகிறேன்? Angry birds விளையாடப் போகிறேன் - ஊருக்கு தான் உபதேசம் எல்லாம் :-) )