என் வாழ்நாள் காதலியே...!
என் வாழ்நாள் காதலியே...
உனக்கும்
எனக்குமான உறவு -
இந்த உலகை விட நீளம்......!
என்
தனிமைப் பொழுதுகளில்
இனிமை நீ...
புதுமைகளின்
புகழிடம் நீ...
உணவு வேளை
மறந்து கூட
உன்னோடு உலவுவேன்.
மிரட்டிய கேள்விகளுக்கு
மின்னல் வேக
விளக்கம் நீ……
சிலநேரம்
கண்ணீர் வடிக்க வைப்பாய் .
சிலநேரம்
சிரிப்பில் வெடிக்க வைப்பாய் ..
உனது முத்திரைகளில்
பலநேரம்
என் நித்திரை கரையும்....
உன்னை
கையில் ஏந்துகையில்
வளர்ந்து போவேன்…
காணாத பொழுதுகளில்
தளர்ந்து போவேன்...
என் ஓய்வுக்கு
ஓய்வு கொடுத்தவள் நீ.
மனம் தளர்ந்து உன்மேல்
முகம் புதைத்த பொழுதுகளில்
மணம் தந்து என்னை
உயிர்த்தெழ வைப்பாய் …
களைத்து சிலநேரம்
கண்ணயர்கையில்
காற்றில் பறந்து
கைகாட்டி அழைப்பாயே - உன்
காதலை என்னவென்று எழுத...
எங்கோ கருவாகி
எனக்காக உருவாகி - என்
மூளைக்கு எருவாகும்
என்னுயிர் புத்தகமே...
உனக்காகவே என்னுயிர் -
இது சத்தியமே....!