நம்பிக்கை பந்தல்
வானவில் கனவுகளை
சுமந்து திரிகிறோம்
கை அருகே பூத்துக் குலுங்கும்
மலர்களை மறந்து விடுகிறோம்
மலையும் சிகரமும்
மலை ஏறுபவர்களுக்கு இலக்கு
உனக்கும் எனக்கும் என்ன பயன்
தொட நினைக்கும் வானமும் உயரமும்
எப்போதும் நமக்கருகில் இருப்பதில்லை
தொடமுடியாது போகும்போதும்
தோல்வியில் ஓடும் போதும்
அந்த வானமே உன்னை பார்த்து சிரிக்கும்
முத்துக் குளிப்பவனுக்கு
ஆழ் கடலின் ஆழம்தான் இலக்கு
அவனுக்கு எதற்கு எவரெஸ்ட்
வானமும் நிலவும் சூரியனும்
எல்லோருக்கும் பொதுவானது
பூமி ஒவ்வொருவனுக்கும்
ஒவ்வொரு விதமானது
இதுதான் வானுக்கும் பூமிக்கும்
உள்ள பெரிய வித்தியாசம்
இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்ட
மனிதர்கள் வாழ்கையை வெற்றி கொள்கிறார்கள்
உயர்கிறார்கள்
எதார்த்தங்களை ஏற்றுக் கொள் எதிர் கொள்
தேவை ஆயின் எதிர்த்து நில்
நண்பா
விழுந்து கிடப்பது வாழ்கை இல்லை
எழுந்து நிற்பதுதான் வாழ்க்கை
காலம் உன்னை அடித்து அழிக்க முயலும்போது
பினிக்ஸ் பறவைபோல் சாம்பலிலிர்ந்து எழுந்து
இறக்கை விரித்து நில்.
நன்றி சினேகிதி
உன் வார்த்தைகள்
என் நம்பிக்கை பந்தல்
நான் அதில் விரிந்து படர்ந்து
பூத்துக் குலுங்குவேன்.
----கவின் சாரலன்