நினைவுக்குள் நித்திலமாய்
நினைவுகளில் நித்திலமாய்
தட்டுத் தடுமாறி தவழும் குழந்தையாய் நான்
விட்டு விடாமல் உன் விரல்களைப் பிடித்தப்படி
ஒவ்வொரு நொடியையும் உனக்காகவே வாழ்கிறேன்
விழியில் விழுந்த நாள் முதலாய் துளித்துளியாய்
இதயம் நுழைந்து இனிய கனவுகளை உயிர்ப்பித்து
வழிநெடுக மலர்ச்சாலையை எனதாக்கினாய்
வானத்திடம் ஊடல் கொண்டு ஒருநாள் மறையும் நிலவாய்
உனைவிட்டு ஒருநாளாவது பிரிந்திருக்க எண்ணம் கொண்டாலும்
ஒவ்வொரு நொடியையும் உன் அன்பினில் உருகிட வைத்தாய்
ஆயிரம் ஆயிரம் நினைவுகளில் அடங்கிய
ஆத்மார்த்தமான உணர்வுகள் ஒன்றிணைந்து
ஆர்ப்பரிக்க வைக்கின்றது ஆழ்மனத்தை
நிறைகுடமாய் நிறைந்திருக்கின்றது என் இதயத்தில்
கறைபடாத உன் அன்பும், பாசமும், காதலும்
சிறைபட்டுக்கிடப்பேன் மகிழ்வோடு வாழ்நாள்முழுதும்
இதயம் முழுவதும் நிறைந்திருக்கும் உணர்வுகளில்
உதயமாகி நிலைத்து நிற்பது வெறும் காதலல்ல
அதையும் தாண்டி உன்னதமானது உயர்வானது
பெ.மகேஸ்வரி