மீரா என் காதலி-1

அன்புக் காதலியே
ஆசையுள்ள பெண்மயிலே
இன்பக் கோபுரமே
ஈகையுள்ள பெண்ணரசே!
உண்மைச் சுடர்விளக்கே
ஊதியமாய் வந்தவளே
என்னில் கலந்தவளே
ஏற்றமிகத் தந்தவளே!

வண்ணக் கவிமலர்கள்
வாலிபத்தில் பூத்திருக்க
எண்ணப் பொன்னிழையில்
எழிலாக அதைக்கோத்துப்
பெண்ணே உன்குழலில் பொலிவோடு சூட்டுகிறேன்
கண்ணே முதல்மலரைக்
காதலுடன் ஏற்றுக்கொள்!

நெஞ்சக் கோவிலுக்குள்
நேசமுடன் எனைவைத்த
மஞ்சள் பொன்மலரே
மாசில்லாப் பெண்ணிலவே
கொஞ்சிக் களிக்கின்றாய்
கோலமிட்டுச் சிவக்கின்றாய்
அஞ்சுப் புலன்களிலும்
அடியேய்உன் இன்பந்தான்!

மேகக் குழலெடுத்து
மோகத்தில் கறுப்பெடுத்து
தாக இமையெடுத்துத்
தேவதையாய் விழியெடுத்து
ராக இதழெடுத்து
ரகசியமாய் முத்தெடுத்து
தேகத் தேரெடுத்துத்
தழைகின்றாய் என்னன்பே!

குலுங்கும் உன்நடையில்
குழைகின்ற உன்னுடையில்
குலுங்கிப் போகின்றேன்
குழந்தையென ஆகின்றேன்
நலங்கு ஏற்றவள்போல்
நேர்த்தியுடன் செழிப்பவளே
பளிங்குப் பார்வையிலே
பகட்டாகச் சிரிக்கின்றாய் !

சிரிப்பில் மயக்கத்தைச்
சிறிதளவு கலக்கின்றாய்
விரிப்பில் எனைநடத்தி
வாலிபத்தைத் தொடுகின்றாய்
அரிக்கும் மனத்திற்கு
ஆறுதலார் அளித்திடுவார்
சிரிக்கும் தேவதையே
செம்மலரைத் தாராயோ!

வேர்த்துக் கொட்டுதடி
வஞ்சிமயில் உனைப்பார்த்தால்
சேர்த்துச் சுகம்பெறவே
சிந்தையுரை பகருதடி
கூர்த்த விழியம்பும்
குதிக்காத முன்னழகும்
ஆர்த்தால் என்செய்வேன்
அழகேநான் தத்தளிப்பேன்!

மண்ணில் நடக்கும்நிலா
மகிழ்ச்சியிலே நனையும்நிலா
கண்ணில் தெரிக்கும்நிலா
கட்டழகுப் பெண்மைநிலா
விண்ணில் மிதக்கும்நிலா
வாலிபத்து வஞ்சிநிலா
வண்ண வாசநிலா
வாழ்க்கையெலாம் நீதானே!

கண்ணே என்றழைத்தால்
கண்களது மயங்கிடுமோ
பெண்ணே எனச்சொன்னால்
பைச்செல்லாம் குழறிடுமோ
கன்னற் சாறெடுத்துக்
கற்கண்டை அதில்சேர்த்து
உண்ணும் சுவைநாவில்
ஊறிடுமோ அப்போது!

முத்துப் பல்லக்கே
முத்தமிழின் சொல்லழகே
தத்தும் தாரகையே
தாவிவரும் கோகிலமே
கொத்துப் பூச்சரமே
கோதில்லாச் சுவைச்சுளையே
சொத்தாய் வந்தவளே
சொர்க்கத்தில் மிதக்கின்றேன் !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (6-May-18, 8:52 pm)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 51

மேலே