80ம் 90ம்

80ம் 90ம்
(சிறுகதை)
கமலினி ஒரு வெள்ளைத் தாளை எடுத்தாள். எதோ எழுத நினைதவள் பலமுறை எழுதினாள்..கிழித்தாள். இப்படியே அரை நாள் கழிந்தது. ஆத்திரமுற்ற தனபால் ஏய் கமல் என்னடா? என்ன இது? என்னவாயிற்று இன்று உனக்கு? சொன்னால் கேட்க மாட்டாய்? என்னமோ செய் பிறகு உன் இஷ்டம். ம். சலிப்புடன் வெளியேறினான் ஊதா நிற சட்டையை எடுத்து அணிந்து.
சட்டென ஊதா நிறத்தில் கவரப் பட்டவள், என்னங்க... என்னங்க... ப்ளீஸ். கோபப்படாதீங்க. மனசு கேட்கல அதான்.......அது எப்படிங்க.. என் மனதை திசைத்திருப்பும் சக்தி இந்த உங்களின் ஊதா நிற சட்டையில் உள்ளது என்பதை உணர்ரீங்க.
அதாண்டி செல்லம் என் டிரிக். சரி சரி வா. கலையிலேந்து இன்னும் ஒண்ணுமே சாப்பிடல. உன்னால நானும் இதுவரை பட்டினி.
ஐயய்யோ என்னங்க இது .. இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க. உங்க ஒடம்பு என்ன ஆகும். சர்க்கரை நோய்வேற இருக்கே.. கடவுளே! நான் என்ன செய்வேன் என் மனதைக் கல்லாக்கி இருக்கக் கூடாதா? எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி. மனதில் புலம்பினாள்.
ஏம்மா என்ன செய்யறீங்க... இன்னும் ரூமிலிருந்து வெளியே சாப்பிடக் கூட வராமல்.... இது நிர்வாகியின் அதிர் குரல்.
இதோ வந்திட்டோம்க. இருவரும் சற்றே தள்ளாடியபடி ஒருவரை ஒருவர் பிடித்தவண்ணம் மெதுவாக நடந்து டைனிங் ஹாலை அடைந்தனர் 80ம் 90ம் ஆகிய அவ்விருவரும்.
அங்கே இவர்களைப் போல் இன்னும் சிலர் தட்டில் உணவு பரிமாறப் பட்டதை மறந்தும் தங்களையே கூட மறந்தும் அமர்ந்திருந்தனர்.
அம்மா..... அப்பா... எனன இது இன்னும் சாப்பிடாம இருக்கீங்க..... பரிவான குரலில் கேட்டாள் தாதி மலர்விழி.
ம்...... ஒண்ணுமில்ல.... சிறிது நேர மௌனம்........
சங்கர் கமலினி தம்பதியரின் ஒரே மகன். அதிக செல்லமும் மிகுந்த பரிவுடனும் வளர்க்கப்பட்டவன். அவனின் சிறு பிராயம் முதல் இன்று வரை நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக அசைப் போட்டனர் இருவரும்.
அவன் தான் எத்தனை படு சுட்டி. படிப்பு. விளையாட்டு. பணி. பணிவு.... இன்னும் பல.....அவன் ஆசைப்படியே உயர் கல்வி பலவும் கற்றான். வெளிநாட்டில் அவன் ஆசைப்படியே மிகச் செல்வந்தனாக வாழும் வாழ்க்கை வசதியும் கிடைக்கப் பெற்றான். கிளாரா என்ற பெண்ணையும் விரும்பி மணந்தான். அவளிடம் வா நாம் ஒருமுறையாவது அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு வரலாம் என்று எத்தனையோ முறை கேட்டு சலிப்படைந்ததுதான் மிச்சம்.
இங்க பாருங்க.. நமக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்து திருமணமும் ஆகி பேரன் பேத்தி கூட பிறந்தாச்சு. வளரும் நவ நாகரிக உலகில் இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி எப்ப பாத்தாலும் அம்மா, அப்பா.. என்று அவர்கள் முந்தாணையையே பிடித்துச் செல்ல நினைக்கிறது எவவளவு மடத்தனம்னு இன்னுமா புரியல.
கிளாரா! இதோபார் எனக்கும் 65 வயதாகிறது. அம்மா அப்பாவை இன்னும் கூட பாக்கலைன்னா எப்படி? இந்த ஊருக்கு வந்த இந்த 45 வருஷத்துல அவங்க எப்படி இருக்காங்களோ? எங்க இருக்காங்களோ? இன்னும் சொல்லப் போனால் என் விலாசம் கூட எனக்கு மறந்து போச்சு.
இன்னுமா அவங்க உயிரோட இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க. இது கிளாரவின் அதட்டல்.
சீ... வாயை மூடு. 20 வருஷம் குழந்தையில்லாம எத்தனை தவமிருந்து பிறந்தவன் நான் தெரியுமா? உன் பேச்ச கேட்டு புத்தி மழுங்கிப் போய் காதல் மயக்கத்தில... ச் அ.... என்ன நெனச்சா எனக்கே வெக்கமாயிருக்கு.
ஐயோ! தெய்வமே... அவங்க எப்படி இருக்காங்களோ?
என்றோ கொடுத்துச் சென்ற தன் மகனின் அலுவலக விலாசத்திற்கு கடிதம் போடத்தான் அத்தனை முயற்சிகளும்.
இருந்த ஒரே வீட்டையும் அடமானத்தில் வைத்து மூழ்கி, கைப்பொருள் அனைத்தையும் தொலைத்து, திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்றிருந்த அந்த வேளையில் தான் மலர்விழியின் அரவணைப்பு அவர்களுக்கு கிடைத்தது.
அவர்கள் இல்லத்தின் வழியாக தினமும் அவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டுக்கொண்டே செல்லும் அவள் அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கி, தான் பணியாற்றும் முதியோர் இல்லத்தில் தன் சொந்த செலவில் சேர்த்துவிட்டாள்.
அம்மா!.... அப்பா!.... என்று கூக்குரலிட்டு அழைத்த வண்ணம் ஒருவழியாக விலாசத்தைக் கண்டுபிடித்து ஓடிவந்த சங்கரனைக் கண்ட நிர்வாகி,
வாங்க தம்பி.... நீங்க தான் அந்த சங்கரனா? ம்....இரண்டு நாளைக்கு முன்னாடி வந்திருந்தீங்கன்னா அவங்க முகத்தையாவது பார்த்திருக்கலாம். இதோ பாருங்க கடைசியா உங்களுக்குத்தான் உங்க அம்மா எதையோ எழுத நினைச்சு எத்தனை தாளை வீணடிச்சிருக்காங்க பார்த்தீங்களா?
ஐயோ!.... அம்மா!.... அப்பா!....சங்கரனின் அலறல் காற்றில் கரைந்து விண்ணிலும் எட்டியது அவன் பெற்றோரிடத்தில்.