கல்வி கற்க முக்கியத் தேவை

கல்வி கற்க முக்கியத் தேவை என்ன? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அப்பொழுது கீழேயுள்ள பாயிரம் என் வாசிப்பில் கிடைத்தது.

நன்னூல், பொதுப்பாயிரம் 39 ல், மாணாக்கனது வரலாறு பகுதியில் யாரெல்லாம் மாணாக்கராக இருந்து கல்வி கற்றுக் கொள்ளத் தகுதியில்லாதவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நன்னூல், பொதுப்பாயிரம் (39)

'களிமடி மானி காமி கள்வன்
பிணிய னேழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறனின் னோர்க்குப் பகரார் நூலே'

கள் குடிப்பவன், (இக்காலத்தில் மது அருந்துபவனும் சேர்க்கப்படலாம், நிறைய பள்ளி மாணவர்கள் போதைப் பொருள்களுக்கும், மதுவிற்கும் அடிமையாய் இருப்பதாக செய்தித் தாள்களில் வருவதைக் காணலாம்),
சோம்பேறி,
தான் என்ற அகங்காரம் அல்லது செருக்கு (பெற்றோருக்குள்ள செல்வாக்கு அல்லது பெரும்பொருள்),
மிகுந்த பாலுணர்வும் காமமும் உள்ள குணமுடையவன்,
திருட்டு குணம்,
வறுமையிலுள்ளவன்,
மாறுபாடுடைய பேச்சு கொண்டவன்,
மிகுந்த கோபம் கொள்பவன்,
மிகுதியாகத் தூங்குபவன்,
சொன்னதை விரைந்து அறிந்து கொள்ளும் நுட்பமில்லாத மந்த புத்தி உள்ளவன்,
கற்கும் நூல்களின் தன்மை கண்டு அச்சம் கொண்டு கலங்குகின்ற மனமுள்ளவன்,
அஞ்சத்தக்கவைக்கு அஞ்சாதவன்,
பாவத் தொழில் செய்பவன்,
பொய் சொல்பவன்

ஆகிய தன்மையுடையோர்கள் கல்வி கற்றுக் கொள்ளத் தகுதியில்லாதவர்கள் என்று கருதப்படுகிறது.

இத்தகைய குணமுடையோர்க்கு ஆசிரியர்கள் கல்வி சொல்லித் தருவதில்லை. முற்காலத்தில் மாணவர்களைத் தேர்வு செய்யும் பொழுதே தகுதியானவர், தகுதியில்லாதவர் என்று தரம் பிரித்து கல்வி போதிக்கப்பட்டது.

மேலேயுள்ள பாயிரத்தில் வரும் 'ஏழை' என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால், அறிவில்லாதவன் என்றும், பொருளில்லாதவனென்றும் பொருள் உரைக்கப்பட்டது. அறிவைப் பெறுவதற்கே ஒருவன் கல்வி கற்க ஆசிரியரிடம் வருகிறானென்பதால் அறிவில்லாதவன் என்று பொருள் கொள்ள முடியாது.

எனவே பொருள் வசதியில்லாத, சாப்பிட வகையில்லாத ஏழைக்கு மனம் ஒரு நிலையில் நில்லாது என்பதால், அவன் கல்விக்கு உதவான் என்று சொல்லப்பட்டது.

அவனுக்கு கல்வி பயிற்ற வேண்டுமாயின், உணவு உடை உறையுள் முதலியன கிடைக்க, தக்க வகை செய்தே பயிற்ற வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது.

இந்த அற்பமான சிறிய விசயத்தை கல்வி கற்க வசதியில்லாத ஒரு ஏழையால் மட்டும்தான் உணர முடியும். அவர்தான் கர்ம வீரர் பெருந்தலைவர் காமராசர். சிறுவயதில் தந்தையை இழந்த காமராசர் கல்வி கற்க பொருளின்றி, சிறு வயதிலேயே கடைகளில் வேலை செய்து, பின் அரசியலில் முன்வந்து தமிழக முதலமைச்சர் ஆகி தொண்டுகள் பல செய்தார்.

இவர் 1954 - 63 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். ஒருமுறை சிறிய கிராமத்தில் ஆடு மாடுகள் மேய்க்கும் சிறுவர்களைப் பார்த்து, 'ஏன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? பள்ளிக்கூடம் செல்லவில்லையா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் "மாடு மேய்க்கவில்லை என்றால் எங்களுக்கு யார் சோறு போடுவார்கள்?" என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார்கள்.

அப்பொழுது தமிழகத்தில் 1960 ல் காமராசரால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டம். அத்துடன் இலவச சீருடையும் வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்னால் 7% ஆக இருந்த கல்வியறிவு காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் பின் 37% ஆக உயர்ந்தது. பள்ளிக்கூடங்கள் எண்ணிக்கை 27000 ஆக உயர்த்தப்பட்டது.

பிள்ளைகளுக்கு கல்வி தருவதற்கு முன் வயிற்றுக்குச் சோறிட வேண்டுமென்று பாரதியும் சொல்லியிருக்கிறார். ஏன் சொன்னார்? என்ற கேள்வியை வைரமுத்து எழுப்பி அவரே கவிதையில் பதில் சொன்னார்.

மொத்த மனிதனுக்கு
மூன்று பள்ளம்
முதல் பள்ளம்
வயிற்றுப் பள்ளம்
இரண்டாம் பள்ளம்
இதயப் பள்ளம்
மூன்றாம் பள்ளம்
மூளைப் பள்ளம்

சோற்றால் நிரப்புங்கள் வயிற்றுப் பள்ளத்தை

அன்பால் நிரப்புங்கள் இதயப் பள்ளத்தை

அறிவால் நிரப்புங்கள் மூளைப் பள்ளத்தை

இதில்

முதல் பள்ளமே நிரம்பாதபோது
மூன்றாம் பள்ளம் நிறைவது ஏது?

எனவே கல்வி கற்க முக்கியத் தேவை வயிறு நிரம்ப வேண்டும். வயிறு நிரம்பினால், கல்வி கற்றலில் மனம் முழுமையாக ஈடுபடும். கல்வி கற்றவன் அன்போடும் பண்போடும் பகுத்தறிந்து பழக முடியும். கல்வியும், அன்பும், பண்பும் சிறந்தால் நல்ல சமுதாயம் உருவாகும்.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். திருக்குறள் 996

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-18, 9:06 pm)
பார்வை : 13959

சிறந்த கட்டுரைகள்

மேலே