பரண்

நீண்ட அறை அது
வெளிச்சமற்று தூசி பாவியது.

ஒலி எழுப்ப அது வசமிழந்து
எங்கெனும் உருண்டு சிக்கும்.

விழுந்து சரியும் விளக்கின் ஒளி
சுவரிலும் என்னிலும் அசைய அசைய
பொருட்கள் உடைந்து வளர்ந்தன குழம்பிய கோணல் நிழல்களாய்.

பழையன யாவும் கழியக்கழிய
குவிந்து குமியும் இடமிது.

நெடிமிக்க பழங்கால வாடையில்
சிலந்திகள் ஊர்ந்தன

ஒளிரும் அதன் கண்களில் காலம்
தவறிவிழுந்து விரிந்து அலைந்தன.

கிடந்த பொருட்கள் யாவும்
காலங்கள் செரித்தும்
காலத்தால் விழுங்கப்பட்டும்
இருளின் மூச்சை எரிக்கின்றன.

பரண் எப்போதும்
தின்றுகொண்டே இருந்தது… பாட்டியின் நிறைவேறா ஆவல்களை
தாத்தாவின் செஸ்போர்டு வீரர்களை.
அப்பாவின் புத்தக வாசனையை.
அம்மாவின் கொலு பொம்மைகளை.

சுற்றிவர சுற்றிவர சேகரமாகும்
நூற்றாண்டின் நினைவின் கனவுகள்.

காணக்காண சட்டென்று
கௌவி இழுத்து சென்றுவிடும்
காலத்தின் பேரமைதியின் சகதி.

பிள்ளை தொட்டு உலுக்க
நொறுங்கும் மனவிலங்கு நொடியில்.
எப்போதும் புரியாது பிள்ளைக்கு
எவரிடம் எதற்காக நானிருந்தேன்
அக்கணத்தில் என்பது.

என் விழிநீர் கண்டு தலைகவிழும்
அவனுக்கும் விழிநீர் வழியலாம்…

அவன் வாங்கிதந்த பெல்ட்டை
இவ்வறையில் பார்க்கும் நாளில்.

நன்றி
வணக்கம் லண்டன் இணைய இதழ்
இலக்கிய சாரல்
posted 05 மே 2018

எழுதியவர் : ஸ்பரிசன் (18-May-18, 11:59 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : paran
பார்வை : 49

மேலே