என் கண்மணி வாழ்க

உன்கரம் என்னைப் பிடித்துக் கொண்டால்
உயிரெனை விட்டுப் பிரியாது;
என்சிரம் உன்மடி சாய்ந்துகொண்டால்
உன்விழி என்னை அகலாது!

உன்னிதழ் திறந்து நீ சிரித்தால்
உன்னத ராகம் வேறேது
உன்விழி பாதி மூடுகையில்
உறவில் ரகசியம் கிடையாது!

உன்குழல் சரிந்து எனைமூட
உச்சியில் சிறகை நான்விரிப்பேன்
உன்னெழிற் கன்னம் எனைவருட
உரிமையில் அதன்கனி நான்சுவைப்பேன் !

உன்னிரு புருவம் வளைந்திருக்கும்
அதற்குள் ஓரெழில் ஒளிந்திருக்கும்
உன்மண நாசி கவர்ந்திழுக்கும்
உதட்டால் கடித்தால் சுவைகொடுக்கும்

ஊனைக் கலந்து உயிர்கலந்து
உன்னதக் காதல் அதில் கலந்து
தேனைக் கலந்து தமிழ்கலந்து
தேவதை போலச் சிரிப்பவளே...

உன்னைப் பெற்றேன் உயிர் பெற்றேன்
உலகைப் பலவாய் நான் கற்றேன்
என்னை விலகா என்னவளே
என்றும் வாழ்க தமிழ்போல!

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (18-May-18, 3:52 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : en kanmani vazhga
பார்வை : 27
மேலே