நதிகரையின் நினைவலைகள்

நன்றி:: தினமணி வெளியீடு:: 16-04-2018

நன்றி படம்:: கூகிள் இமேஜ்
=========================

கடந்த மாதங்களில் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்காக தமிழ் மக்கள் நெடிய போராட்டம் நடத்தி வருகின்ற வேளையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது நமக்கெல்லாம் மிகப் பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் காவிரியில் போதிய அளவு நீரில்லை, எப்போதும் வறண்டே காணப்படுகிறது, மழையும் இல்லை. ஒரு காலத்தில், முப்பது வருடங்களுக்கு முன், என் பால்ய வயதில் நான் திருச்சி அகண்ட காவிரியிலும், முக்கொம்பிலும் காவிரியில் கல்லூரி நண்பர்களுடன் குளித்துக் களித்து மகிழ்ந்ததை இங்கே சுருக்கமாக கவிதை ஆக்கியிருக்கிறேன்.

உச்ச நீதிமன்றம் கொடுத்த நல்ல தீர்ப்பால், மீண்டும் நாம் பழைய வளம் கொழிக்கும் காவிரியாறை படத்தில் உள்ளதுபோல் கண்டு, உணர்ந்து, குளித்து, அனுபவித்து மகிழ்வோம் என்கிற நம்பிக்கை என்னுள் பிறக்கிறது.

============================
நதிகரையின் நினைவலைகள்..!
============================

மன்னுபுகழ்க் காவிரி யாலெங்கள் நிலமொடு
====நன்செய் பயிர்களும் தழைத்ததொரு காலமாம்..!
தன்னிஷ்டம்போல் தமிழமெங்கும் ஓடிய அது
====தண்ணீரின்றி வற்றியே தரையிலின்று குறுகியது..!
அன்றாடம் அலைததும்பும் அகண்ட காவிரிதான்
====இன்றும் வறண்ட காவிரியெனக் காட்சிதருகிறது..!
என்னவென இன்றதன் நிலையைச் சொல்வேன்
====என் நினைவலையில் நதிக்கரையே நிழலாடுது..!


என்னை மறப்பேன்! நதியில் அமிழும்போது
====எழுப்புமே கூழாங்கற்களென் நகவிரலை நெருடி..!
கன்னல் தமிழில் பாடிக்கொண்டே நீந்தும்போது
====கெண்டைமீனுமென் காலினழுக்கை நக்கி நீக்கும்..!
பொன்னிற மாலையில் நதிக்கரை மணலிலென்
====பொங்கும் நினைவைக் கவிதை யாக்கினேனின்று..!
என்னதான் நாமும் அறிவியலால் வளர்ந்தாலும்
====இயங்குமுயிர்க்கு நீர்தேவை! அது நதியிலில்லை..!


மன்னாவுலகில் மற்றவர் மெச்சிய பாரதத்தில்
====இன்னமும் வற்றாதஜீவ நதிகளுண்டு நீர்அறிவீர்.!
தென்னரங்கம் சூழவரும் காவிரிக் குழந்தையை
====திவ்யநதி கங்கைத் தாயுடனிணைத்து வைப்பீர்.!
தன்னிடம் தேவைக்கதிக மிருப்பதை..தானமாகத்
====தந்தருளும் மனநிலையை நதிமூலம் எழவைப்பீர்.!
அன்னமும் நீரும் இல்லையெனில் அதற்கொரு
====அர்த்தம் இராதெனும் உண்மையை நீரேற்பீரே.!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-May-18, 12:04 pm)
பார்வை : 75

மேலே