441 உழைப்பு, ஊண், உறக்கம் கூடக் குறைய நோயுறும் – துன்பம் 7

கலித்துறை

ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு
தூங்க லால்துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு
தாங்கொ ணாத்தொழில் செயன்முத லேதுவால் சடநோய்
ஆங்கு றுஞ்சடம் செய்தவன் கைப்பிழை யன்றால். 7

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மிகுந்த சிற்றின்ப ஈடுபாடு, சோம்பல், பெருமளவு உண்பது, மிகுதியான உறக்கம், உறக்கம் இல்லாமை, சினம், உடல் தோல் தாங்க முடியாத அளவு உழைப்பு முதலிய காரணங்களால் உடலுக்கு நோய் வரும். இதில் நம்மைப் படைத்த கடவுளின் பிழை ஏதும் இல்லை” என்கிறார் இப்பாடலாசிரியர்.

காமம் - சிற்றின்ப ஈடுபாடு. ஊங்கு - மிகுதி. துவக்கு - தோல். சடம் - உடல்.
செய்தவன் - படைத்த கடவுள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-18, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே