நானாகவா சொல்ல வேண்டும்
நான்தான்
உனக்காக பிறந்த அழகியென்று
அறிவிப்பா செய்ய முடியும்!
நீதான்
என்னை அடையாளம்
காண வேண்டும்!
என்னை
தினமும்வந்து பார் யென்று
நானாக சொல்ல வேண்டுமா?
நான்
வரும் நேரம்
செல்லும் நேரம் எதுவென
நீயாக அறிந்து கொண்டு
வரவேண்டாமா!
நான்
ஒளிந்து கொள்ளத்தான்
செய்வேன்!
நீதான் என்னைத் தேடி
கண்டுபிடிக்க
வேண்டும்!
நீ காணத்தான்
வந்து பேசத்தான்
நான் நிற்கிறேன்!
தூரத்திலேயே
நின்றிருந்தால் காதல்
உன் கைகளுக்கு வந்து
சேர்ந்திடுமா என்ன?
காத்திரு
என்றா கூற முடியும்?
எனக்காக காத்திருப்பது
உன் கடமையென்று
புரிந்து கொள்ள வேண்டாமா!
வா!என் பின்னால் வா!
காதல் மொழி பேசு
லேசாக என்னை உரசு.
இவையாவையும் நீயாக செய்து
என்னை காதல் பரவசத்தில்
ஆழ்த்த வேண்டாமா!
மழை!
ஒதுங்கி நிற்கிறேன்!
குடை கொண்டுவந்து
வீடு சேர்த்து என்னையுன்
காதல் மழையில்
நனையச் செய்-யென்று
நானாக சொல்ல வேண்டுமா!
நான் அழகா!
பேரழகா என எதுவும்
சொல்வதில்லை!
எனக்கு இவ்வுடை
பொருத்தமா அதற்கேற்ற
ஜடை பொருத்தமா? எதுவும்
சொல்வதில்லை
ஜாடையாக சொல்
மடை திறக்கும் காதல் என்றா
சொல்லமுடியும்!
ஏதும் எழுதாத
வெற்றுக்காகிதம் கொடு
என்ன எழுத நினைத்தாய்
என்று ஏங்கி நான்
தவிக்க வேண்டுமென்று
நானாகவா
சொல்ல வேண்டும்!