துயரம் தாங்கிய தூத்துக்குடி

விழியகத்தின் உள்நின்று வெளிப்படாத சில கனவுகளோடும்,
வழிநிறைந்த முள்நிறைத்த தெளிவில்லாத சில காட்சிகளோடும்,

தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாநகரத்தில் துயரத்தின் உச்சிநின்று, தோட்டாக்கள் துளைத்தெடுத்த தோழர்களின் குருதிவாடை நாசிமுடக்கும் நடுநிசியில், அவர்களின் செழித்தோடிய செந்நீரை மையாக்கி செங்கோல்காணா மன்னர்களிடம் சிக்கித்தவிக்கும் தமிழினப் போராளிகளுக்காய் எழுதுகிறேன்.

எஞ்சியிருக்கும் உறவுகளே விழித்துக் கொள்ளுங்கள்...!

ஆலையை மூட அரசு அறிவித்ததை எண்ணி பெருமைகொள்ளாதீர்கள். துயரமில்லாத வீடுகளை உயரத்திலிருந்து காண்கிறது கழுகுக் கூட்டம், தெருத்தெருவாய் ஒளிந்துகொண்டு ஓமிடுகிறது ஓணாய்கூட்டம்.

சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது திண்ணையில் அமர்ந்து வருந்தியிருப்பீர்கள்,
காவிரிக்காய் போராடியபோது கரம்கொடுக்க துணிந்திருப்பீர்கள்,

கதிராமங்கலம் கதறியபோது விதியென நினைத்து விலக எண்ணியிருப்பீர்கள்,
மஞ்சுவிரட்டு காளைகளுக்காய் அஞ்சிநின்று கரைந்திருப்பீர்கள்...

தேசியம் தலைமை முதல் வேசிகளின் நடத்தை வரை வலைதளத்தில் விளையாடிய இளைஞர் பட்டாளம்
பாசிகளுக்கு மத்தியில் தூசிகளாய் படிந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது...

அப்போதே எழுதியிருக்கவேண்டும் என் மனதில் ஆழப் புதைந்த மறையா வடுக்களைப்பற்றி...

தாங்கள் அமைதிகொண்ட வேளைதனில் அச்சுறுத்த எழுதவில்லை, நானும் தமிழனென்ற உரிமையில்தான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

உடன்பிறப்புகள் எல்லாம் உருகிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில், மின்சாரம் அத்தியாவசிய பொருட்கள் என அத்தனையும் முடங்கியிருக்கும். பள்ளிக்கூடம் தொடங்கி பள்ளிவாசல் வரை மூடப்பட்டிருக்கும், சிலநாட்கள் நம்முடன் போராடிய தோழர்களின் இழப்பு மன உளைச்சலுக்கு ஆளாக்கி மீளாத் துயரில் மூழ்கவைத்திருக்கும்.

வகுப்பு எடுக்கச் சொல்லுங்கள் இங்கே அரசியல் செய்வோரை
ஆட்சியர் வளாகம் கேடுகெட்ட காக்கிகளின் வன்முறையால் அடைகாக்கப்படும் என்று...

இரவுபகலென பாராமல் போராடி
துறவு மேற்கொள்ளவா தூத்துக்குடி நாடிவந்தோம்...!

சொந்த மண்ணில் அகதிகளாய் வாழ ஆசையா...?

இரங்கல் கவிதைகளை எழுதியெழுதி கவிஞர்களின் கரங்கள்கூட ஓய்ந்திருக்கக்கூடும், மீண்டும் துளிர்விடும் கைகூலிளின் வன்முறை. அப்போதும் என்போன்றே எழுதுவர் இதுபோன்ற குருதி உறைத்த கடிதங்களை.

எழுத்தாணிகள் ஒவ்வொன்றும் போராட்டங்களுக்கு சளைத்தவையல்ல,
எழுத்துரு எழுந்துநிற்க கொழுந்துவிட்டெரியும் கோபுரம் முதல் கோட்டை வரை...

வல்லரசு நாடாகும் நாளை, அப்போது
நற்றமிழுக்கு பொற்றாடை போர்த்தி புதைகுழியில் விதைக்கப்பட்டிருக்கும்...

மரணத்தின் மடியிலும் மண்டியிட்டு நில்லாது,
கூர்வேலோ தோட்டாக்களோ மார்புகளில் தாங்கிநிற்போம்...

நாளைய விடியலேனும் நமதாகட்டும் தமிழா...!

எனது எழுத்தோலை உங்களது கரம்பற்றி
கருவிழிகள் கலங்கியிருந்தால் பதில் கடிதம் எழுதுங்கள் எனக்கு...

தாங்கள் எனக்களிக்கும் விடைகளில்தான்
வாழ்வாதார போராட்டம் பற்றிய எனது வரிகளும்,
தாழ்வாரம் விழுந்த மண்ணில் சீரமைப்பு பணிகளும்...

விடைகளைக் கண்டபின் மீண்டும் எழுதுகிறேன் ஒரு கடிதம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-May-18, 6:47 am)
பார்வை : 38

மேலே