213 எத்துன்பம் வந்தாலும் களவுசெய்ய இசையேல் – களவு 8

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நிரந்தரம் பலநோ யுற்று
..நெடிதய ரினுங்கை யேந்தி
இரந்துணப் பெருநி ரப்பே
..யெய்தினும் பகர வொண்ணா
அரந்தைசூ ழினும்பொன் வவ்வும்
..அத்தொழிற் கியையா வண்ணம்
வரந்தர வேண்டு மென்னக்
..கடவுளை வழுத்தாய் நெஞ்சே. 8

- களவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சமே! எந்நாளும் நீங்காத பல நோய் அடைந்து நீண்ட கவலை கொண்டாலும், கைஏந்திப் பிச்சை எடுத்து உண்ணும்படி பெரும் வறுமை வந்தாலும், சொல்ல முடியாத துன்பம் ஏற்பட்டாலும் பொன்னான பொருட்களைக் களவு செய்யும் படியான தொழிலுக்கு இசையாதபடி வாழ வரம் தர வேண்டும் என்று ஆண்டவனை வணங்கித் தொழு” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.

நிரந்தரம் - எந்நாளும். அரந்தை - துன்பம்.
அயர்தல் – கவலை கொள்ளல். நிரப்பு - வறுமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-18, 8:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே