212 அச்சமெலாம் கள்வர் உள்ளத் தமர்ந்தன – களவு 7
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
அரிமுழை நுழைதல் போல
..அயலகம் புகும்போ தச்சம்
பொருள்திரு டும்போ தச்சம்
..புறப்பட்டே குங்கா லச்சம்
தெருவினி லெவர்க்கு மச்சம்
..கவர்ந்தன திளைக்க வச்சம்
உருமுருக் கொண்டு கள்வர்
..உளங்குடி கொண்ட போலும். 7
- களவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சிங்கத்தின் குகைக்குள் நுழைபவர் போன்று அயலார் வீட்டில் களவு செய்வதற்காக நுழையும் போது அச்சம்,
பொருளைக் களவு செய்யும் பொழுது அச்சம்,
களவு செய்த வீட்டை விட்டு வெளியில் வரும் பொழுது அச்சம்,
தெருவில் காணும் யாரைப் பார்த்தாலும் அச்சம், களவுப் பொருளை உபயோகித்து அனுபவிக்கும் பொழுது அச்சம் என்று கள்வர் தம் நெஞ்சத்தில் அச்சமே உருக்கொண்டு இருப்பார்கள்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
அரி - சிங்கம். முழை - குகை. உரும் - அச்சம்.
கவர்ந்தன - களவுசெய்த பொருள்கள்.
குறிப்பு:
இப்பொழுதெல்லாம் அச்சப்படத் தேவையில்லை! காவல்துறையினர் அடிப்பது போல அடிப்பார்கள்; கள்வர்களும் அழுவது போல அழுவார்கள். களவுப் பொருட்களை பங்கு போட்டுக் கொள்வார்கள்.