தெய்வத் தமிழ் QUIZ கேள்வி-பதில்
கீழ்கண்ட தெய்வீக வசனங்களை யார், எந்த நூலில் சொன்னார்கள்? விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாராமல் பகருங்கள். உங்கள் அறிவினைச் சோதித்துக்கொள்ள அரியதோர் வாய்ப்பு!!!
1.பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
2.மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ நுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
3.ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்று அருங்கணிச்சி, மணிமிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்
4.பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்
பரவு புகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம்
5.ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே
6.கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவயவே
7.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
8.உள்ளே உருகி நைவேனை
உளவோ இலளோ என்னாத
கொள்ளைகொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே
9.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
10.கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
11.தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.
12.கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடைகள்
1.இளங்கோ, சிலப்பதிகாரம்
2.காளமேகம், தனிப்பாடல்கள்
3.புறநானூறு, நக்கீரனார் பாடல்
4.பாரதி, பாரதியார் பாடல்கள்
5.கம்பன், கம்ப ராமாயணம்
6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
7.திருமூலர் எழுதிய திருமந்திரம்
8.ஆண்டாள், நாச்சியார் திருமொழி
9.திருக்குறள், திருவள்ளுவர்
10.பாரதிதாசன்
11.மாணிக்கவாசகர், திருவாசகம்
12.சேக்கிழார், பெரியபுராணம்