பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் விநோதக் கணக்கு
பண மோசடி செய்தவர்கள் எப்படி அழிவார்கள் என்பது பற்றி திருவள்ளுவன் திருக்குறளிலும் ,உலக மஹா மேதை சாணக்கியனின் சாணக்கிய நீதியிலும் சுவையான கணக்குகள் உள்ளன. அழ, அழ பணம் சம்பாதித்தவனை அழ அழ வைத்து லெட்சுமி போய் விடுவாளாம்– இது வள்ளுவன் கணக்கு; ஆனால் சாணக்கியனோ ஒரு விநோதக் கணக்குப் போடுகிறான். பண மோசடி செய்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஆட்டம் போடுவார்களாம்; பின்னர் 11 ஆவது வருஷத்தில் ‘அம்போ’ன்னு போவார்களாம்; வள்ளுவன், சாணக்கியன் சொற்களிலேயே படியுங்கள்.
அகலாது அணுகாது வாழ்க!
கீழ்கண்ட ஆறு விஷயங்களில் கவனமாக நடக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் வெகுண்டால் உடனே மரணம் சம்பவிக்கும்: தீ, தண்ணீர், பெண்கள், முட்டாள்கள், பாம்பு, ஆட்சியாளர்கள் (ராஜ குலம்)
அரசன், ஆசிரியர், அக்னி (தீ) , பெண்கள் ஆகியோருக்கு மிகவும் அருகில் இருந்தாலும் மிகவும் தூரத்தில் இருந்தாலும் பயனில்லை; ஆகையால் நடு வழியில் செல்க.
அரசனைச் சார்ந்து வாழ்பவர்கள்; நெருப்பில் குளிர் காய்பவனைப் போல, மிக அருகிலும் போகக்கூடாது; மிக விலகியும் போகக் கூடாது. நடுவழியில் நின்று கடமை ஆற்ற வேண்டும்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்பட்டார் தொடர்பு (920)
பொது மகளிர், கள், சூது ஆகியவற்றில் ஈடுபடுவோரிடம் லெட்சுமி தேவி தங்க மாட்டாள்
கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659
பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.
லண்டன் ஸ்வாமிநாதன்