காத்திரு என் கண்மணியே

காத்திரு என் கண்மணியே
இதோ வந்துவிடுகிறேன்
இன்னும் ஒரு நாள்தான்

அயல்நாட்டோடு யுத்தம் முடிந்து
புயல்பல கடந்து
புத்துயிர் பெற்று வருகிறேன் - என்
கயல்விழியின் கண்ணீர் துடைக்க
காற்றாகப் பறந்து வருகிறேன்

முன்னூறு மைல்கள் கடந்துதான்
வருகிறேன் - ஆனாலும்
மனம் முழுவதும்
உன் முழுமதி முகம்தான்
நிறைந்திருக்கிறது

நான் பயணிக்கும் வாகனம்
விரைவாகத்தான் செல்கிறது - ஆனால்
நிற்கும் மரங்கள் எதுவும்
நகர்வதேயில்லை - காரணம்
நான் நகரவேயில்லை
உனது நினைவிலிருந்து

நெஞ்சமெல்லாம் நீயே
வியாபித்திருப்பதால்
உணவருந்தும்போது
காரக்குழம்புகூட
கற்கண்டுபோல் இனிக்கிறது

புத்துணர்வுக்காக வழியில்
வாகனம் நிற்கிறது
அனைவரும் ஆற்றில் மிதக்கிறார்கள்
நான் மட்டும்
உன் நினைவலைகளில்

முப்பது யுத்தங்கள் கண்டுவிட்டேன்
உன் விழிகள் தவிர - எதுவும்
என்னை வீழ்த்தியதில்லை

என் பயணத்தின்போது நொடிப்பொழுதில் ஒரு சத்தம்
நான் கண்ட யுத்தத்தைவிடப் பெரியது
அது - என்னை
உறக்கத்திலிருந்து உலுக்கியது

ஒரு பேருந்து தொங்கிக்கொண்டிருந்தது
பெரிய பாலத்தில்
அனைவரும் அலறினார்கள்
ஒரு பெயர் சொல்லி
ஆம் அது உன் பெயரேதான்

என்னவளுக்கு என்ன நேர்ந்ததோ
எனத் துடித்துக்கொண்டே
இறங்கினேன் அந்த பாலத்தில்
உன் பெயர் கொண்ட குழந்தை ஆபத்தில்
மீட்டுவிட்டேன் அதை
இப்போது அது ஷேமத்தில்

நான் மட்டும் இறங்கிக்கொண்டே இருந்தேன்
ஒரு அதல பாதாளத்தில்
ஆழம் குறைவுதான் உன் நினைவுகளைவிட

அப்போதும் என் இதயம்
துடித்துக்கொண்டேதான் இருந்தது
உள்ளே நீ இருப்பதால்

இப்போது உணர்ந்துவிட்டேன்
நான் இறந்துவிட்டேன் என்பதை.

காத்திரு என் கண்மணியே
இதோ வந்து விடுகிறேன்
இன்னும் ஒரு ஜென்மம்தான்.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (13-Jun-18, 9:14 pm)
பார்வை : 309

மேலே