இடமாறு தோற்றப்பிழை

இடமாறு தோற்றப்பிழை
சட்டென கண் விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு! புரண்டு படுத்தான் தூக்கம் தொடர மறுத்தது.வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான், பலன் பூஜ்யம்தான்.இதற்கு மேல் படுப்பதில் லாபமில்லை, மெல்ல எழுந்தவன் நடந்து சென்று விளக்கை எரிய விட்டு சுவர் கடிகாரத்தை பார்க்க மணி மூன்றை காட்டியது. விடிய நேரமிருக்கிறது.தூக்கம் வந்தால் இன்னும் மூன்று மணி நேரம் தூங்கலாம் என எண்ணியவன் கொஞ்சம் காற்றாட வெளியில் நிற்போம் என நினைத்து அறைக்கதவை திறந்து வெளியே வந்தவன் அந்த ஜில் என்ற குளிர்ந்த காற்றை மூச்சை இழுத்து அனுபவித்தான்..
கோபு இருந்த அறை ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தில் இருந்தது.எல்லா அறைகளும் ரோட்டை பார்த்தே வாசல் அமைக்கப்பட்டிருந்த்து. அங்கு இவனைப்போலவே நிறைய பிரம்மச்சாரிகள் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொரு அறையும் ஒரு ஹால்,கிச்சன், மற்றும் அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த்து.இப்படிப்பட்ட வசதிகளுடன் இந்த ஆர்.எஸ்.புரத்தில் இவனுக்கு இப்படி ஒரு அறை கிடைத்தது மிகவும் வசதியாக இருந்தது. இவன் அடிக்கடி சொந்த ஊரான ஈரோட்டுக்கு எந்த நேரமானாலும் சென்று எந்த நேரமானாலும் திரும்பி வர வசதியாக இருந்தது.ஒரு கம்பெனியில் நல்ல பதவி, மற்றும் நல்ல சம்பளத்துடன் இருந்த்தால் வாடகை கொடுக்கவும் கட்டுப்படியானது.
ஜில்லென்ற காற்றை அனுபவித்தவன் கீழே குனிந்து ரோட்டை பார்க்க, அது கரும் மலை பாம்பு போலநீளமாக படுத்திருப்பது போல் தோன்றியது. காலை முதல் இரவு வரை பரபரப்பாய் காணப்படும் அந்த சாலை ஓய்வெடுத்து கிடப்பது போலவும் அவனுக்கு தோன்றியது.
கீழே எதிர் வீட்டு கதவு ஒன்று மெல்ல திறப்பதை வியப்புடன் பார்த்தான். ஒரு பெண் தலை ஒன்று மெதுவாக வெளியே எட்டிப்பார்த்து, சாலையை அந்தப்புறமும் இந்தப்புறமும் பார்த்து விட்டு வெளியே வந்தவள் கையில் சிறிய சூட்கேசுடன் வேக வேகமாக நடந்து செல்வதை பார்த்தான்.
கோபுவின் மனது பதை பதைத்தது. இந்த பெண் இந் நேரத்தில்எங்கே செல்கிறாள்?வீட்டை விட்டு ஓடிப்போகிறாளா? நாம் ஏதாவது செய்தாக வேண்டும், போய் தடுத்து நிறுத்த முயற்சிக்கலாமா? ஏதாவது சொல்லி விட்டால் என்ன செய்வது? ,மனது கடிவாளம் போட்டது. இருந்தாலும் மனது ஒரு பக்கம் அடித்துக்கொண்டது.
இந்த பெண் யாருடன் ஓடிப்போக போகிறாள்? அவளுடைய பெற்றோர் மனது என்ன பாடுபடும்? அறைக்கதவை சாத்தி விட்டு விறு விறுவென படியில் இறங்கி அந்த பெண் சென்ற பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அதற்குள் அந்தப்பெண் எங்கே போயிருப்பாள்?கண்ணை சுறுக்கி உற்றுப்பார்த்தான்.சற்று தூரத்தில் அந்த பெண் வேகமாக நடப்பது தெரிந்தது.தன்னுடைய நடையை வேகப்படுத்தினான்.
பின்னால் அரவம் கேட்டு அந்த பெண் திரும்பி பார்த்தாள் இவன் தன்னை நோக்கி வேகமாக வருவதை பார்த்தவள் வேகமாக ஓட முயற்சிக்க அதை கண்ட கோபுவும் வேகமாக ஓடி வந்து அவளை மறித்தாற் போல் நின்று கொண்டான்..
அந்த பெண் திடீரென்று அவன் காலில் விழ தடுமாறிவிட்டான்.என்னம்மா நீ எழுந்திரும்மா, எழுந்திரு, நீ செய்யற காரியம் உனக்கே நல்லா இருக்கா? நீ பாட்டுக்கு இப்படி ஓடிப்போயிட்டியின்னா உங்கப்பா அம்மா மனசு என்ன பாடுபடும்? உருக்கமாய் கேட்டான்.
அந்த பெண் ஒரு கணம் திகைத்து சார்….என்று இழுத்தாள்.போம்மா நீ முதல்ல உன் வீட்டுக்கு போ, நீ எதுக்காக உன் வீட்டை விட்டு போறேன்னு தெரியலை, ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, தயவு செய்து இந்த மாதிரி முடிவை எடுக்காதே. உன்னை பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்? இப்ப தயவு செய்து உன் வீட்டுக்கு போ, மத்ததை காலையில நானே வந்து உங்கப்பா அம்மா கிட்டே பேசுறேன்.
அந்த பெண் கொஞ்சம் தெளிவு பெற்றவளாக சார் என்னை மன்னிச்சுடுங்க, எனக்கு அவர்தான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு, அதுக்காகத்தான் வீட்டை விட்டு போறேன். தயவு செய்து தடுக்காதீங்க. அம்மா நான் உன் காதலை குறை சொல்லலை.இந்த மாதிரி வீட்டை விட்டு ஓடிப்போறதுதான் தப்பு. நானே உன் காதலை பத்தி வீட்டுல பேசறேன் என்றான்..
சார் அந்த கட்டம் எல்லாம் தாண்டியாச்சு, அவரையே கல்யாணம் பண்ணக்கூடிய சூழ்நிலைக்கு நான் ஆளாயிட்டேன். இப்ப உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.
இப்ப என்னை எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பாரு. நான் போகலையின்னா அவர் என்னை விட்டு போயிட்டாருன்னா யாருக்கு நஷ்டம்?அதுக்கப்புறம் நான் ஆத்துலயோ, குளத்துளயோ விழுந்து சாகவேண்டியதுதான். அதுவும் என்னை பெத்தவங்களுக்கு அவமானம்தானே?தயவு செய்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
இதை கேட்டவுடன் திக்பிரமையடந்து நின்று விட்டான். அந்த பெண் இரண்டு நிமிடம் மெளனமாய் நின்று விட்டு அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போகவே அவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து விட்டு சோகமாய் தன் அறைக்கு திரும்பியவன் அந்த பெண்ணின் பெற்றோர் நாளை படப்போகும் அவமானத்தை நினைத்து வருத்தப்பட்டவனாக படுக்கையில் விழுந்தான்..
கதவை பட பட வென தட்டும் சத்தம் கேட்டு விழித்தவன் தட்டு தடுமாறி எழுந்து சென்று கதவை திறந்தான்.வெளியே பக்கத்து அறை பாலு நின்று கொண்டிருந்தார். என்ன சார் எப்பவும் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து எங்களை எழுப்பி விடுவீங்க, இப்ப மணி எட்டாகுது, இன்னும் கதவையே திறக்காம இருக்கீங்களேன்னு தான் கதவை தட்டினேன்.
மணி எட்டாயிடுச்சா? என்றவன் தன்னை தயார் படுத்திக்கொள்ள உள்ளே விரைந்தான். நேற்று இரவு நடந்தது, அவனுக்கு கனவு போல தோன்றியது. எட்டரை மணிக்கெல்லாம் கிளம்பி விட்டான். அறையை பூட்டும்போது எதிர் வீட்டை பார்க்க அது அமைதியாக இருந்தது. இன்னும் அவர்களுக்கு தெரியாது போலும் என்று எண்ணிக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்.
அலுவலகம் முடிந்து மாலை ஐந்து மணிக்கு தன் அறைக்கு வந்தவன் தன் அறை முன்பு நின்று எதிர் வீட்டை பார்த்தான். அந்த வீட்டின் முன்பு நான்கைந்து பேர் நின்று பேசிக்கொண்டிருந்ததையும் ஓரிருவர் உள்ளே செலவதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.பக்கத்து அறை பாலு தன் அறையை விட்டு வெளியே வந்தவர் இவன் எதிர் வீட்டை பார்த்த்துக்கொண்டு நிற்பதை பார்த்தவர் வாங்க கோபு சார் இப்பத்தான் வந்தீங்களா? நான் நாலு மணிக்கே வந்துட்டேன். கொஞ்சம் டயர்டா இருந்துச்சு அப்படியே படுத்துட்டேன், சொல்லிக்கொண்டே வந்தவரிடம் கோபு எதுவும் தெரியாதவன் போல் என்ன சார் எதிர் வீட்டுல ஒரே கூட்டமா இருக்கு? கேட்டான்..
‘ஓ” அதைக்கேக்கறீங்களா?எதிர் வீட்டுல இரண்டு வயசான பெரியவங்க இருந்தாங்க,அவங்க பசங்க புள்ளைங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்காங்க. பக்கத்துல சொந்தக்காரங்களுக் இருக்காங்க. இந்த வயசானவங்களை பாத்துக்க ஒர் பொண்ணை வேலைக்கு வச்சிருக்காங்க,அந்த பொண்ணு இவங்க இரண்டு பேருக்கும் தூக்க மாத்திரையை கொடுத்துட்டு இராத்திரி வீட்டுல வச்சிருந்த நகை பணம் எல்லாத்தையும் எடுத்த்கிட்டு ஓடிடுச்சாம். மதியம் போலீஸ் வந்து விசாரிச்சுட்டு போச்சு. இப்ப சொந்தக்காரங்க வந்து பாத்துட்டு போயிட்டு இருக்காங்க.
அவங்க இரண்டு பேரையும் டாக்டர் வந்து பாத்துட்டு நல்லாயிருக்காங்க அப்படீன்னு சொல்லிட்டு போயிட்டாரு, சொல்லிக்கொண்டே பாலு அவர் அறைக்கு செல்ல இவன் மரமாய் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தான்.