நவீனநாவல்- ------------------
நவீன நாவல் எனும் கலைவடிவம் இங்கே தமிழில் நிலைபெறுவதற்கு பின்புலமாக செயல்பட்ட உலக வரலாற்று சூழல் ,அதில் திரண்டு வந்த தத்துவம் ,ஆகியவற்றை தொடர்த்து தமிழில் நிகழ்ந்த நவீத்துவ அடிப்படைககள் கொண்ட நாவல்கள் சிலவற்றை குறிப்பிட்டு எழுத்தாளர் விஷால்ராஜா அவர்கள் ஒரு வரையறையை தனது உரையின் முதல் பகுதியில் முன்வைத்தார் . அது ஒரு பொதுவான வரையறை .அங்கிருந்து துவங்கி எனது தேடலை இவ்வாறு வகுத்துக் கொள்கிறேன் .நாவலை தத்துவத்தின் கலை வடிவம் என வரையறை செய்து கொண்டு அதில் தமிழ் சூழலில் பெரிதும் பாதிப்பு நிகழ்த்திய காம்யுவின் அந்நியன் , பேர் லாகர் க்விஸ்ட் இன் அன்பு வழி, இரண்டு நாவலையும் பொருத்தி திறனாய்வு செய்வோம் . நாவல் திட்டவட்டமாக இந்த வாழ்வு இன்னவிதமாகத்தான் இருக்கிறது .இந்த வாழ்வில் ,இப்படிப்பட்ட மனிதன் ,இந்த நிலையில்தான் இருக்கிறான் என [இரும்புத்தனமாக ] பிரகடனம் செய்கிறது . காரணம் மிக எளிது .இரண்டு நாவலாசிரியர்களுக்கும் இந்த வாழ்வு ,அதில் இந்த மனிதனின் நிலை ,இவ்வாறுதான் இருக்கிறது என ”முன்பே ”தெரியும் .அதை அவர்கள் எழுதிக்காட்டிய களமே அவர்களின் அந்த நாவல்கள் . காம்யுவால் பாதிக்கபட்ட சுந்தர ராமசாமி எழுதிய , தீவிர இலக்க்ய புனைவு உலகையே சிலகாலம் ஆணி அடித்து நிறுத்திய ஜே ஜே சில குறிப்புகள் நாவலை இதில் பொருத்திப் பார்ப்போம் .அந்த நாவலில் தொழில்படுபடுவது , நவீனத்துவ நாவல்களின் கூறுகளான அங்கதம் விமர்சனம் இவற்றுடன் கூடிய தத்துவ நோக்கு. சில வருடங்களுக்கு முன்பு ,யூமா வாசுகி மொழிபெயர்ப்பில் வெளியான ஒ விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை இதில் போருத்திப்பார்ப்போம் .
//தத்துவம், வரலாறு இவை இரண்டையும் முறையே மானுடத்தின் சிந்தனை, செயல் ஆகியவற்றின் வெளிவடிவமாகமாகக் கொண்டால், மானுடத்தை குறித்த அறிதலுக்கும், சிந்தனை செயல்பாட்டுக்கும் தத்துவமே (அது சிந்தனைப் பிரதிநிதி என்பதாலேயே) நெருக்கமானது. அதேசமயம் வரலாறே அதன் நிகழ்களம் என்பதால் கடினமே ஆயினும் அதன் மாபெரும் விரிவை தொகுத்து முறையாக அறிவுத்தளத்திற்கு உட்படுத்துவதே இச்செயல்பாட்டின் முழுமையாக அமையும். எனவே வரலாற்றால் அறிவிக்கப்பட்ட தத்துவப் புரிதல் (Historically informed study of philosophy) ஒன்றை சாத்தியப்படுத்த வேண்டியுள்ளது. புனைவுதான் எனும்போதும் நாவல் எனும் கலைவடிவம் இயங்கும் தளம் இதுவே. எனவே நல்ல நாவல் அளிக்கும் மானுடச் சித்திரம் முழுமைக்கு அருகில் செல்ல முடிகிறது.//
இது கசாக்கின் இதிகாசம் நாவல் மீதான பார்யையில்,வாசகர் கஸ்தூரி ரங்கன் என்பவர் எழுதியது .இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
உண்மையில் உலக ,இந்திய , தமிழ்நில தத்துவ வரலாற்று பின்புலம் எல்லாம் எதற்க்காக கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்றால் ,அதைக்கொண்டு கஸ்தூரி ரங்கன் முன்வைக்கும் இந்த பார்வை இங்கே தமிழில் நவீனத்துவ நாவல் என முன்வைக்கப்படும் எந்த நாவல் அதை அடைந்தது என்பதை அறியவே . என் நோக்கில் உலக அளவில் இந்த முழுமை நோக்கை அளித்த நாவல் எகர் குசெங்கோ எழுதிய வீழ்ச்சி . ஒரு யுகக்கனவு சரிகிறது .அதை கட்டி எழுப்பிய ஆளுமைகளில் ஒருவன் ,அவனே அந்த சரிவுக்கும் சாட்சியாக கையறு நிலையில் நிற்கிறான் .அவனது தத்தளிப்புகளை மையம் கொண்ட நாவல் .தமிழில் வந்திருந்தாலும் , நவீனத்துவ ஜாம்பவான் எழுத்தாளர்கள் யாரும் இது குறித்து எழுதியதாக எனக்கு தெரிந்தவரையில் இல்லை . போகட்டும் அத்தகு சாதனைகளை கூட நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை , இந்தியாவை கட்டி ஆண்ட ,உலகையே திரும்பி பார்க்க வைத்த காந்தி யுகம் . காந்தியின் இறுதி ஆறு மாதங்களை நெருங்கி நின்று பார்க்கும் ஒரு புனைவு ஏன் தமிழில் நிகழவில்லை . இலக்குவன் மொழி பெயர்த்த ,ராமமூர்த்தி எழுதிய காந்தி இறுதி இருநூறு நாட்கள் எனும் அ புனைவு ,தமிழில் இதுகாரும் நிகழ்ந்த நவீனத்துவ சாதனை நாவல்கள் அனைத்தையும் ஒரு படி கீழே நிறுத்துவதை .இதை வாசிக்கும் எவரும் அறியலாம் . மேற்கண்ட போதத்துடன்[தமிழில் நிகழ்ந்த நவீனத்துவ நாவல்கள் ] கறாராக ஒரு பட்ட்யலைப் போட்டால் முதலில் நிர்ப்பது குசெங்கோவின் வீழ்ச்சி .இரண்டாம் நிலையில், ஒ விஜயனின் கசாக்கின் இதிகாசம் இதற்கு கீழான வரிசையில்தான் ”தமிலேலேயே” எழுதப்பட்ட நவீனத்துவ நாவல்கள் வரும் .
இதே நிலைத்தான் பின்நவீனத்துவ நாவல்கள் சார்ந்த இரண்டாம் பகுதியிலும் . கடந்த ஐந்து வருடங்களில் , தமிழில் பின்னவீனத்துவ காலக்கட்டத்தை கண்டு சொன்ன எழுத்தாளர்கள் தமிழவன் ,எம்ஜி சுரேஷ் , ப்ரேம்ரமேஷ், சாருநிவேதிதா இவர்களின் ,ஏற்க்கனவே சொல்லப்பட்ட மனிதர்களின் கதை , அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், எரிக்கப்பட்ட மனிதர்களும் புதைக்கப்பட பிரதிகளும் ,சீரோ டிகிரி ,இவை , அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று , இதை எழுதிகொண்டிருக்கும் ”இன்று” இந்த உரையாடல் வெளியில் எங்கேனும் இருக்கிறதா ? மாறாக இந்த அத்தனை எழுத்தாளர்களும் கூட்டு சேந்து மறுதலித்த ”விஷ்ணுபுரம் ”நாவல் இன்றும் இப்போதும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .இன்றும் எங்கோ அதற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது . அமேசான் எங்கக்கிட்ட விஷ்ணுபுரம் கிடைக்கும் என வீட்டுக்குள் புகுந்து விளம்பரம் செய்கிறது . கடந்த பத்து வருடத்தில் ,வருடத்துக்கு பத்து புதிய நாவல்கள் வந்து ”புனைவின் புதிய சாத்தியத்தை திறந்து ” அதில் தலைகுப்புற விழுந்து காணாமல் போய்க்கொண்டு இருக்க , தேவிபாரதியின் நிழலின் தனிமை இவர்களால் எட்ட இயலா தொடுவானில் நின்று சிரிக்கிறது .
வீழ்ச்சி ,கசாக்கின் இதிகாசம் ,பதினெட்டாம் அட்சக்கோடு , விஷ்ணுபுரம் , இத்தகு நாவல்களில் ”துலங்கி வருவது ” வரலாற்றால் அறிவிக்கப்பட்ட தத்துவப் புரிதல் . நாவல் எனும் தத்துவத்தின் கலை வடிவம் அளிக்கும் ”தரிசனம் ”இதை அடிப்படையாக கொண்டதே . இதை எழுத்தாளன் ”சிந்தித்து ” அல்லது ”பிரகடனம் ” செய்தது அதன் வழியே உருவாக்க இயலாது . எழுத்தாளின் நுண்ணுணர்வு ,அவன் உருவாக்கிக்காட்டும் வாழ்வு ,அவன் படைப்பாற்றல் , அனைத்துக்கும் மேலாக அவன் அகத்தில் நின்றெரியும் உண்மை ,இவை கூடி உருவாகும் படைப்பில் ,அதன் இயங்கு விசையில் திரண்டெழுந்து வருவது அது .
சுருக்கமாக மரபு , ,நவீனம் ,பின்நவீனம் ,பின் நவீனத்துக்குப் பின்னான நவீனம் ,என்ற கோணங்களிலோ ,வரலாற்று ஓட்டத்திலோ பாதிப்படாத ஒன்றுண்டு ஜெயமோகனின் சொற்களில் அதை, என்றுமுள்ள இன்று என சொல்வேன் . நேற்றும் ,இன்றும் ,நாளையும் இருக்கப்போகும் ஒன்று . வியாசனோ , தாஸ்தாவெஸ்கியோ , குசெங்கேவோ ,ஒ விஜயனோ , ஜெயமோகனோ , தங்களது புனைவின் வழியே பரிசீலிப்பது ,என்றும் உள்ள இன்றில் வாழும் சிக்கல்களையே .
அந்த என்றுமுள்ள இன்று உடன் உரையாடும் படைப்புகள் ,படைப்பாளிகள் மட்டுமே நுண்ணுணர்வு கொண்ட வாசகனின் தேர்வாக இருக்க இயலும் .அவர்கள் எந்த பட்டியலிலும் இடம்பெறா விட்டாலும் .
நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை