526 ஒட்டார்க்குச் செய்யுதவி வீடு ஒட்டற்காம் வித்து – பன்னெறி 6

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

நள்ளுநர் தமக்கு மென்றும்
நன்றெமக் கியற்று வோர்க்கும்
உள்ளுவந் தியற்று கின்ற
வுதவிதா னரிய தன்று
புள்ளுவ மிழைக்கா நின்ற
பொருந்தலர்க் காற்று நன்றி
விள்ளும்வீட் டின்பந் தன்னை
விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே. 6

– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

எந்நாளும் தம்மைவிட்டு அகலாதிருக்கும் உணர்ச்சி ஒத்த நண்பர்கட்கும், நமக்கு நன்றே புரிந்து வரும் ஊராண்மையுள்ள உயர்ந்தோர்க்கும் நாம் மனமகிழ்ந்து செய்யும் உதவி அருமையுடைய தொன்றாகாது.

நமக்கு வஞ்சனையால் கேடு செய்யும் பகைவர்க்கு நன்மை செய்தலே மேலானது. அதுவே பிறவித் துன்பத்தைப் போக்கி, வீட்டின்பமாகிய பேரின்பப் பெருவாழ்வைத் தரும் உறுதியான வித்தாகும்.

நள்ளுநர்-நண்பர். புள்ளுவம்-வஞ்சனை. விள்ளும்-நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-18, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே